Sunday, 22 December 2019

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 1

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  1

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

1. सुमुखः  -  ஸுமுக²​:  -  sumukhaḥ  :-

ஸுமுகர் - நன்முகமுள்ளவர்.

இவரை உள்ளத்தில் கண்டு தொடங்கிய பணி நன்கு நிறைவேறும் . பணியின் தொடக்கத்தை மங்களமானதாக்கி அதன் விளைவையும் மங்களமாக அமைப்பவர். ஆகவே ஸுமுகர் எனப்படுகிறார்.

आरम्भाः शोभना येन यस्य शोभनमाननम् ।
स एव सुमुखस्तस्मै सुमुखाय नमो नमः ॥ १३ ॥

ஆரம்பா⁴​: ஸோ²ப⁴னா யேன யஸ்ய ஸோ²ப⁴னமானனம் |
ஸ ஏவ ஸுமுக²ஸ்தஸ்மை ஸுமுகா²ய நமோ நம​: ||  13 ||

எவருடைய முகம் மங்களமயமானதோ /  அழகானதோ, ( அப்படிப்பட்ட அ/எவருடைய முகத்தை கண்டு / மனதில் த்யானித்து ) ஆரம்பிக்கப்படும்  செயல்களும்  மங்களமடைகிறதோ இனிதே நிறைவேறுகிறதோ , அதனால் அவர் ஸுமுகர் எனப்படுகிறார். அந்த ஸுமுகருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

ஸ்ரீ விக்னேச்வரருடைய பதினாறு நாமங்கள் எவை என்று பார்த்தோம். அதிலே முதலில் ஸுமுகர். பதினாறில் முதலில், முகப்பில் வருகிற பேர் ஸுமுகர். வரவேற்கும்போது ஸுமுகமாக – ‘முகமன் கூறுவது’ என்பார்கள். அப்படி – அழைக்கிற மாதிரி முதல் பேர் அமைந்திருக்கிறது.

ஸமூஹத்தில் எல்லா ஜனங்களும் ஸுமுகமாக, அதாவது ஒற்றுமையுடன், வாழ வேண்டும் என்று சொல்கிறோம். ‘ஸு-முகம் என்றால் நல்ல முகம். அன்பும் ஆனந்தமும் பொங்கிக் கொண்டிருப்பதுதான் நல்ல முகம். ஸுமுகம். தமிழில் ‘இன்முகம்’ என்று சொல்லுவது. ஹ்ருதயத்தில் உள்ள அன்பும் ஆனந்தமும் முகத்திலே வெளிப்படுவது ஸுமூகம். Mind -க்கு index – ஆக face இருக்கிறது என்கிறார்களல்லவா? அப்படி உள்ளத்திலுள்ள ப்ரேமையை வெளியில் காட்டும் ஸுமூகத்தை உடையவராக விக்நேச்வரர் இருக்கிறார். நல்ல மனஸைக் காட்டும் நல்ல முகம் ஸுமூகம். அப்படிப்பட்ட முகம் படைத்தவர் விக்நேச்வரர்.

‘சுக்லாம்பரதரம்’ ச்லோகத்தில் ‘ப்ரஸன்ன வதனம்’ என்று வருகிறதல்லவா? அதுவேதான் ஸுமுகம் அன்பிலேயும், அன்பாக இருப்பதால் ஏற்படும் ஆனந்தத்திலேயும் உள்ளம் அப்படியே மலர்ந்து அது முக மலர்ச்சியாக வெளியே தெரிவதுதான் ‘ப்ரஸன்ன வதனம்’. தெளிவு, ப்ரகாசம் ஆகியவைதான் ‘ப்ரஸன்னம்’. ‘ஸுமுக’த்தில் வருகிற ‘ஸு’வும் அந்த ப்ரஸன்னத்தைக் குறிப்பதுதான்.

விக்நேச்வரர் எந்த ரூபத்திலிருந்தாலும் அவருடைய உள்ளத்தின் அன்பும் ஆனந்தமும் முகத்தில் வெளிப்பட்டு அவர் ஸுமுகராகத்தான் இருப்பார். ஆனை ரூபத்தில் அவர் இருப்பதாலோ இவை அஸாதாரணமான அளவுக்கு அவர் முகத்தில் பொங்கிக் கொண்டிருக்கின்றன. எத்தனை நாழி வேண்டுமானாலும் அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும்படியான ஏதோ ஒன்று ஆனைமுகத்துக்கென்றே விஷேசமாக உண்டு. விசாலத்திற்கு விசாலம். காம்பீர்யத்திற்கு காம்பீரம், பரம சாந்தம், இன்னும் இன்ன என்று சொல்லத் தெரியாத ‘ஏதோ ஒன்று’ (சொல்லக்கூடியதாயிருந்து விட்டால் இத்தனை பெருமை இல்லை!) இப்படிப் பலவிதமான லக்ஷணங்கள் சேர்ந்த அழகு ஆனைமுகத்துக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட ஆனைமுகராக இருப்பதால் விக்நேச்வரர் ‘ஸுமுகர்’ என்ற பெயர் விசேஷமாகப் பொருந்துபவராக இருக்கிறார்.

நரமுக கணபதி ஆனைமுகரானது :

“அவர் எந்த ரூபத்தில் இருந்தாலும்” என்று சொல்கிற போது ஆனை ரூபத்திலில்லாமல் ரொம்பவும் அபூர்வமாக மநுஷ்ய ரூபத்தில் ‘நரமுக கணபதி’ என்றே அவர் இருப்பது நினைவு வருகிறது. சிதம்பரம் தெற்கு வீதியில், தம்முடைய ப்ரஸித்தமான ஆனை முகத்தோடு இல்லாமல், மற்றவர்கள் சொல்லியோ எழுதி வைத்தோதான் ‘இவர் பிள்ளையார்’ என்ற தெரிந்து கொள்ளும்படி மநுஷ்ய மூஞ்சியோடு ‘நரமுக கணபதி’யாக இருக்கிறார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலிலும் நரமுக கணபதி உண்டு. இதிலே ஒரு வேடிக்கை: யானை முகமில்லாத ஒரு பிள்ளையார் உள்ள கோவிலானாலும் அந்தக் கோவில் ஸ்வாமியை [சிவபெருமானை]ப் பற்றி ஸம்பந்தர் பதிகம் பாடும்போது, ஸ்வாமியின் பல லக்ஷணங்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, ‘அந்த லக்ஷணத்தை உடையவனை’ என்பதற்கு ‘யானை’,’யானை’ என்றே சொல்லி முடித்திருப்பதுதான்! ‘நன்றுடையானை, உமையொரு பாகம் உடையானை, திருவுடையானை, சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!’ என்று பாடியிருக்கிறார்!

விக்நேச்வரரின் அநேக ஆவிர்பாகங்களைக் குறித்த கதைகளில் ஒன்றின்படி அவருடைய ஒரிஜினல் ரூபம் நரரூபம்தான். அம்பாள் தன்னுடைய அந்தஃபுரத்திற்கு ஒரு காவலாள் ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்று நினைத்தாள். தன்னுடைய திவ்ய சரீரத்தையே வழித்து அதிலிருக்கிற மஞ்சள் பொடி, குங்குமம், வாஸனைப் பொடி முதலானதுகளைத் திரட்டிப் பிசைந்து ஒரு பாலனாக ரூபம் பண்ணி அதற்கு உயிரும் கொடுத்துக் காவலாக வைத்து விட்டாள். மநுஷ்யர் மாதிரி (தேவர் மாதிரியுந்தான்) கண், காது, மூக்கு, நாக்கு முதலானவை உள்ள ரூபமே அது. அதாவது நரமுக ரூபந்தான். பிள்ளையார் என்றே பெயர் பெறப்போகிற அந்தப் பிள்ளையை — தன் உடம்பிலிருந்து தானே வழித்துப் பெற்ற அருமைப் பிள்ளையை — அம்பாள் காவல் வைத்து விட்டு ஸ்நானத்துக்குப் போனாள்.

அம்பாள் ஸர்வ மங்களா, அவள் தன்னுடைய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வஸ்துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப் பிள்ளையாரை ஸ்ருஷ்டித்ததால் தான் இன்றைக்கும் எந்த சுபகாரியத்தின் ஆரம்பத்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறோம். ‘மஞ்சள்’  என்பதே ‘மங்கள’  என்பதிலிருந்து வந்திருப்பதுதான். ‘இங்கே, அங்கே’  என்பதைச் சில பேர் ‘இஞ்சே, அஞ்சே’  என்று சொல்கிறார்களல்லவா? இலக்கணத் தமிழிலேயே ‘தூங்கல்’ என்பது ‘துஞ்சல்’ என்றும் வருகிறது. அப்படி, ‘மங்கள’ என்பதே ‘மஞ்சள்’ ஆகியிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தில் மங்களம் என்பதற்கு மஞ்சள் என்பதற்கு மஞ்சள் என்று ஒரு அர்த்தம்.

பரமேச்வரன் அந்தஃபுரத்திற்கு வந்தார். ‘இது யார்டா பத்னியின் அந்தஃபுரத்தில் புருஷப் பிரஜை?’ என்று அவருக்கு ஒரே கோபம் வந்து, ஒன்றும் தெரியாதவர் மாதிரி, அந்தப் பிள்ளையை சிரச்சேதம் பண்ணிவிட்டார். வாஸ்தவத்தில் எல்லாம் தெரிந்துந்தான் லோகோபகாரம் பண்ண வேண்டும், அதையும் விருவிருப்புள்ள நாடகமாகப் பண்ண வேண்டும் என்றே இப்படிச் செய்தார். என்ன லோகோபகாரமென்றால் – கஜமுகாஸுரன் என்ற யானைத்தலை அஸுரன் தன்னே அதே மாதிரி யானைத் தலை படைத்தவர்தான் வதம் செய்ய முடியுமென்றும், அதோடு அப்படி வதைக்கக்கூடிய சத்ரு ஸ்திரீ-புருஷ ஸம்பந்தத்தில் பிறக்காதவனாயிருக்க வேண்டுமென்றும் வரம் வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். அது ஒரு பக்கத்தில். இன்னொரு பக்கம், நாம் பார்த்த ஸம்பவம் நடந்த ஸமயம், கைலாஸத்திற்குப் பக்கத்தில் லோகத்திற்கு அமங்களம் உண்டாகும்படியாக ஒரு யானை வடக்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் ‘கம்பைன்’ பண்ணித்தான் ஸ்வாமி நாடகமாடினார். அம்பாள் ஸ்ருஷ்டித்த அருமைக் குழந்தையைத் தாம் ஸம்ஹாரம் பண்ணியதற்காக அவளிடம் நன்றாக ‘டோஸ்’ வாங்கிக் கொண்டு ஸந்தோஷப்பட்டார். அப்புறம் வடக்கே தலை வைத்திருந்த யானையை சிரச்சேதம் பண்ணி, அந்த சிரஸைக் கொண்டு வந்த இந்தப் பிள்ளையின் முண்டத்தில் பொருத்தி, பிள்ளையாராக உயிர் கொள்ளும்படிச் செய்து அம்பாளை த்ருப்திபடுத்தினார். பிள்ளையார் மூலம் கஜமுகாஸுரன் வதமாகி லோக க்ஷேமம் உண்டாகும்படியும் செய்தார்.

ஆனந்த வடிவர் :

விக்நேச்வரர் ஸுமுகர், சிரித்த முகமுடைய ஆனந்த ஸ்வரூபர். ஆனந்தந்தான் நிறைவு. ஆனந்த பூர்ணம் என்பது வழக்கம். ஆனந்த பூர்வம் போதோஹம் – ஸததம் ஆனந்த பூர்ண போதோஹம், ஸச்சிதானந்த பூர்ண போதோஹம் என்று இரண்டு விதமாக [ஸதாசிவ] ப்ரஹ்மேந்த்ராள் பாடியிருக்கிறார். ஆனந்தம் வந்தால் சிரிப்பும், அதோடு பாட்டும் டான்ஸும் வந்துவிடும். ஒருத்தன் துக்கமாயிருக்கும்போது கொஞ்சம் டான்ஸ் பண்ணு என்றால் பண்ணுவானா?ஆனந்த ஸ்வரூபியானதால்தான் பிள்ளையார் ந்ருத்த கணபதியாக, கூத்தாடும் பிள்ளையாராக இருக்கிறார். அநேக சிவாலயங்களில் மூலஸ்தான வெளிச்சுவரில் கோஷ்ட தேவதைகளாக உள்ளவர்களில் முதல்வர் இந்த நர்தன விநாயகர்தான். ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டு அத்தநாம் பெரிய தொப்பையைத் தூக்கிக் கொண்டு ஆடுவார்.

அவருடைய ஆனந்தத்திற்கு முகம் மாதிரியே தொப்பையும் இன்டெக்ஸ் என்று சொல்லலாம். வயிறு வெடிச்சிடும் போலச் சிரிக்கிறது என்றுதானே வசனம்?அப்போது வயிறு நன்றாக புஸு புஸு என்று ஊதித் தொப்பையாகத்தானே ஆகனும்.

தொப்பைக்கு அப்புறம் வருவோம். பதினாறு நாமாவில் லம்போதரர் என்கிற நாமா வரும்போது அதைப் பார்ப்போம். இப்போது முகத்தில், ஸுமுகத்தில் அல்லவா இருக்கிறோம்?

முகம் எனறாலே ஆரம்பம் என்று அர்த்தம். புஸ்தகங்களில் கூட முதலில் முகவுரை என்று போடுகிறார்களல்லவா?ஆரம்ப நாமா ஸுமுகர் என்று இருப்பது ரொம்பப் பொருத்தமாயிறுக்கிறது.

நல்ல வாய் உடையவர் :

முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றே தான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது!* வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸம்ஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண – இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்யார்த்திகளும் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை ‘முகம் இல்லாதவன்’ என்பானாம். அவன் இவனை ‘வாய் இல்லாதவன்’ என்று திருப்புவானாம்! பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. ‘Good-humoured banter’ என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீனமாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.

முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் எனறால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது.

அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு. 21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தருக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸுப் புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ‘ரஸாள’ புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு. வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். “யார் லோகத்தை முதலில் சுற்றிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு” என்று நாரதர் கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக் கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!

வித்வத், வித்யை, அதனால் அடையும் ஞானம் இவற்றை உடையவர் ஸுமூகர்.

யானை வாயின் சிறப்பும் தத்துவப் பொருளும் :
 
யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த ப்ராணியானாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி. உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண் என்ற ஒரு அவயவத்திற்குத்தான் அவசியமான ஸமயங்களுக்காக ரப்பை என்று மூடிபோட்டு வைத்திருக்கிறதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன. ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு நாக்கும் பல்லும் தெரியாமல் மூடுகிறதென்றாலும் இவற்றுக்குள் வித்யாஸமும் இருக்கிறது. கண்ணின் கார்யமான பார்வை என்பதில் ரப்பைக்கு வேலையேயில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற கார்யத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக் கொள்வது அது. நாக்கு, பல், உதடு, மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு என்பதை உண்டாக்கும் கருவியான வாய். ‘ப’, ‘ம’ முதலான சப்தங்கள் உதட்டாலேயே முக்யமாக உண்டாவதால் ‘ஓஷ்ட்யம்’ என்றே அவற்றுக்குப் பெயர். இங்கிலீஷிலும் ‘lip’ – ஐ வைத்து ‘labial’ என்கிறார்கள். நமக்கெல்லாம் வாயின் அங்கமான உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.

யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்திற்கு அடையாளம். நாம் கையை மடித்துக் கொண்டுபோய் ஒரு கார்யமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைக்கானால் ஸ்வாபாவிகமாகவே [தன்னியற்கையாகவே] அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை ஸதாவும் மூடிக் கொண்டிருக்கிறது! தும்பி என்றால் யானை. அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆஹாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உசரத் தூக்கிக் கொண்டு பிளிறுகிறபோதும் மட்டுந்தான் அதன் வாயைப் பார்க்க முடியும். இப்படிப் பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்வார்த்தம் இருக்கிறது. எத்தனை வித்வத் இருந்தாலும் வொட வொடவென்று விஷயங்களைக் கொட்டி வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், அவசியமான ஸமயம் தவிர மற்ற காலங்களிலெல்லாம் வாயை மூடிக் கொண்டிருப்பது தான் நிஜமான வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே தும்பிக்கையால் வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜ ரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம்தான் என்று காட்டுகிறார்.

விக்நேச்வரர் நிஜமான ஸுமுகர்.

ॐ सुमुखाय नमः॥
ஓம்ʼ ஸுமுகா²ய நம​:॥
OṂ SUMUKHĀYA NAMAḤ॥

No comments:

Post a Comment