16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 2
॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥
|| ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥
2. एकदन्तः - ஏகத³ந்த: - EKADANTAḤ :-
ஏகதந்தர் - ஒற்றைக் கொம்பர் / ஒரே தந்தமுள்ளவர்.
एका मुख्या केवला वा दंष्ट्रा यस्य गणेशितुः।
भूम्युद्धारे जगन्नाशे सैकदंष्ट्रः स कीर्त्यते॥ ७॥
ஏகா முக்²யா கேவலா வா த³ம்ʼஷ்ட்ரா யஸ்ய க³ணேஶிது:|
பூ⁴ம்யுத்³தா⁴ரே ஜக³ன்னாஶே ஸைகத³ம்ʼஷ்ட்ர: ஸ கீர்த்யதே|| 7||
" படைக்கப்பெற்ற பூமி நீரின்மேல் நிற்க இயலாமல் மூழ்கிக் கொண்டிருக்கையில் இவரது தந்தங்களாகிய முக்கிய ஆதாரத்திலேயே அது நிலைத்தது. ஆதிவராஹராகிப் பூமிக்குத் தந்தங்களை முக்கிய ஆதாரமாக்கித் தாங்கியவர். "
மஹாபாரதம் எழுதத் தன் இடது தந்தத்தை ஒடித்து எழுதுகோலாக்கியதால் ஒரே தந்தமுள்ளவர்.
பரசுராமருக்கும் கணேசருக்கும் நடந்த போரில் சிவபெருமான் அருளிய கோடாரியைப் பரசுராமர் ஏவிக் கணேசரின் இடது தந்தத்தை வேருடன் பிடுங்கி எரிந்தார். கணேசர் தன் தந்தையின் பரசு என்று மதித்து அந்த இழப்பை ஏற்றார். ஏகதந்தர் என்று அதர்வவேதம் குறிப்பிட்டபடி ஒற்றைக் கொம்பனாயிருப்பது ஏற்புக்குடையதே என எல்லோரும் வேண்ட, பரசுராமரிடம் ஏற்பட்ட கோபத்தைத் தணித்துக் கொண்டவர், அப்படி ஏகதந்தரானவர்.
யானைக்குத் தந்தமே முக்கியவலிவிடம். இரண்டாக அதனைப் பிரிக்க இடம் கொடாமல் ஒரே தந்தமாகக் கொண்டவர். ஆண் யானைக்குத் தந்தங்கள் உண்டு. பெண் யானைக்குத் தெற்றிப்பல் உள்ளடங்கி நிற்கும் . உமையொருபாகனான தந்தைபோல் இவரும் இடப்புறத்தில் பெண்யானையின் முக அமைப்பும் வலப்புறத்தில் ஆண்யானையின் முக அமைப்பும் கொண்டவர். விநாயக சக்தியை இடப்புறம் கொண்டவர்.
एक शब्दात्मिका माया दन्तः सत्ताधरो मतः ।
तयोरभेदसंयोगे चैकदन्त इति स्मृतः ॥
एकशब्दः प्रधानार्थो दन्तश्च बलवाचकः ।
बलं प्रधानं सर्वस्मात् एकदन्तं नमाम्यहम् ॥
ஏக ஶப்³தா³த்மிகா மாயா த³ந்த: ஸத்தாத⁴ரோ மத:|
தயோரபே⁴த³ஸம்ʼயோகே³ சைகத³ந்த இதி ஸ்ம்ருʼத:||
ஏகஶப்³த³: ப்ரதா⁴னார்தோ² த³ந்தஶ்ச ப³லவாசக:|
ப³லம்ʼ ப்ரதா⁴னம்ʼ ஸர்வஸ்மாத் ஏகத³ந்தம்ʼ நமாம்யஹம்||
'ஏக' சப்தம் அஸத்தான மாயையையும், 'தந்த' சப்தம் ஸத்தான ப்ரும்மத்தையும் குறிக்கும் ; ஸத் மற்றும் அஸத்தின் சேர்ந்த ரூபமே ஏகதந்தர்.
'ஏக' என்னும் பதம் ப்ராதான்யத்தையும் ( முக்கியம் ) , 'தந்த' என்னும் பதம் பலத்தையும் குறிக்கும். எல்லோரிலும் பிரதானமானவரும் பலம் வாய்ந்தவருமான ' ஏகதந்தர் ' என்னும் விக்னேஸ்வரரை நான் நமஸ்கரிக்கிறேன்.
ஏகதந்தர் : ‘என்பும் பிறர்க்குரியர்’ : ( தெய்வத்தின் குரல் )
அடுத்தாற்போல், “ஏகதந்தர்”. “ஸுமுகச்-சைகதந்தச்ச” . இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். “ஒற்றைக் கொம்பன்”. பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு.
முதலிலே இவருக்கும் இரண்டு [கொம்பு] இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக் கொண்டு விட்டார். அதை விக்ரஹங்களில் வலது பக்கக் கீழ்க் கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன் ஒடித்துக்கொண்டார்? புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள்.
வியாஸர் பாரதம் சொல்கிறபோது அதை உடனே விக்நேச்வரர் அவஸரமாக ஹிமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருந்ததென்றும், அப்போது எழுத்தாணிக்காகத் தேடிக்கொண்டு ஓடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை. அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய பஹு அழகான அங்கத்தை — யானையின் அங்கங்களுக்குள்ளேயே ‘இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை — உயிரோடு இருக்கும் போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை.
இன்னொரு கதை, மற்ற எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாஸுரனைத் தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் பிரயோகித்து வதம் பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக “என்பும் உரியர் பிறர்க்கு” என்று காட்டிய கதை. ஸாதாரணமாக அந்தக் குறளுக்கு ததீசியைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டுவார்கள்*. தந்தமும் யானையின் எலும்புதான். அதனால் பிள்ளையாரும் ‘என்பும் பிறர்க்கு உரிய’ரான ‘அன்புடையார்’ தான்!
*வ்ருத்ராஸுரனை இந்திரன் வதம் செய்யும் பொருட்டு வஜ்ராயுதம் தயாரிப்பதற்காக ததீசி முனிவர் தமது முதுகெலும்பையே ஈந்தார்.
பெண்ணாகவும் இருப்பவர் :
அவர் ஏகதந்தராக இருப்பதற்குத் தத்வார்த்தமும் உண்டு. ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு. பெண் யானைக்குக் கிடையாது. தாம் ஆண், பெண் இரண்டும்தான். அதாவது ஈச்வர தத்வம் என்பது ஆண்தான், பெண்தான் என்று ஒன்றாக மாத்திரம் வரையறுக்க முடியாமல் இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று என்று காட்டவே முகத்திலே ஒரு பக்கம் யானை (களிறு என்பது) மாதிரி தந்தத்துடனும், மறு பக்கம் பெண் யானை (பிடி என்பது) மாதிரி தந்தமில்லாமலும் இருக்கிறார். மாதா பிதாக்கள் பப்பாதி [பாதிப் பாதி] ஸ்திரீ புருஷர்களாக அர்த்தநாரீச்வர ரூபத்தில் இருக்கிற மாதிரியே புத்ரரும் கொஞ்சம் இருந்து காட்டுகிறார். அப்படியே ‘காப்பி’ பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அங்கே வலது பக்கம் புருஷ ரூபம், இடது ஸ்த்ரீ என்றிருந்தால் இவரோ வலது பக்கம் தந்தமில்லாமல் பெண் யானையாகவும் இடது பக்கம் தந்தமுள்ள ஆண் யானையாவுமிருக்கிறார்!
முதலில் ஸுமுகர் — அழகான வாய் உள்ளவர்; அடுத்தாற் போல ஏகதந்தர் — அந்த வாயிலே உள்ள தந்தத்திலே ஒன்று இல்லாதவர். குழந்தை என்றால் அதற்குப் பல் விழுந்திருக்கணும்தானே? பொக்கை வாய்ச் சிரிப்பு என்று அதைத் தான் விசேஷித்துச் சொல்வது. ஜகத்தின் மாதா பிதாக்களான பார்வதீ – பரமேச்வரர்களின் முதல் குழந்தை ஒரு தந்தம் போன பொக்கை வாயுடன் ஸுமுகமாகச் சிரித்துக் காட்டுகிறது.
விக்நேச்வர காயத்ரீ :
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரியதாக ஒரு காயத்ரீ மந்த்ரமுண்டு. உபநயனம் பண்ணி, ப்ரஹ்மோபதேசம் என்று செய்கிற காயத்ரீ மந்த்ரம் ஸூர்ய ஜ்யோதிஸ்ஸில் இருக்கப்பட்ட பரமாத்ம சக்தியான ஸவிதா என்கிற தெய்வத்திற்கான காயத்ரீ. காயத்ரீ என்பது 24 எழுத்துக் கொண்ட ஒரு மந்த்ரம். அந்த எண்ணிக்கையில் எல்லா தேவதைகளுக்கும் மந்த்ரங்கள் இருக்கின்றன. இந்த மந்த்ரங்கள் எட்டெட்டு எழுத்துள்ள மூன்று பாதங்களாகப் பிரியும். ஒவ்வொரு பாதத்திலும் அந்த மந்த்ரம் எந்த தேவதைக்கானதோ அந்த தேவதையின் ஒவ்வொரு பெயரைச் சொல்லியிருக்கும். முதல் பாதத்தில் ஒரு பெயரைச் சொல்லி, ‘அப்படிப்பட்டவரை அறிவோம்’ என்று வரும். இரண்டாம் பாதத்தில் அந்த தெய்வத்திற்கே இன்னொரு பெயரைச் சொல்லி, ‘அப்படிப்பட்டவரை தியானிப்போம்’ என்று வரும். மூன்றாம் பாதத்தில் மூன்றாவதாக இன்னொரு பெயரைச்சொல்லி, ‘அப்படிப்பட்டவர் நம்மை நல்ல வழியில் தூண்டி விடட்டும்!’ என்று பிரார்த்தனை வரும்*. மஹா நாராயணோபநிஷத்தில் உள்ளபடி, லோக வழக்கில் பிரஸித்தமாகவுள்ள இந்த காயத்ரி மந்த்ரங்களில் பரமசிவன், விக்நேச்வரர், ஸுப்ரம்மண்யர், நந்திகேச்வரர் ஆகிய நாலு பேரின் காயத்ரிகளிலும் முதல் பெயராக ‘தத்புருஷ’ என்பதைத்தான் சொல்லியிருக்கிறது. ஆனால், விக்நேச்வரரைக் குறித்ததாகவே அதர்வ வேதத்தில் ஒரு உபநிஷத் இருக்கிறது. ‘கணபத்யதர்வசீர்ஷம்’ என்று அதற்குப் பெயர். அதில் ஒரு கணபதி காயத்ரீ கொடுத்திருக்கிறது! இந்த காயத்ரீயில் முதல் பெயராக ‘ஏகதந்த’ என்பதைத்தான் சொல்லியிருக்கிறது.
* ஸவிதாவுக்கான காயத்ரியில் முதலிரு பாதங்களுக்குமாகச் சேர்த்து ‘தியானிப்போம்’ என்று வரும். மூன்றாம் பாதத்தில் இன்னொரு பெயர் சொல்லாமலே, ‘நம் அறிவைத் தூண்டட்டும்’ என வரும்.
एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि ।
तन्नो दन्ती प्रचोदयात् ॥ (गणपत्यथर्वशीर्ष)
ஏகத³ந்தாய வித்³மஹே வக்ரதுண்டா³ய தீ⁴மஹி ।
தன்னோ த³ந்தீ ப்ரசோத³யாத் ॥ (க³ணபத்யத²ர்வஶீர்ஷ)
ஏகதந்தரிடத்தில் ( புத்தியை வைத்து ) அறிவோம்,
வக்ரதுண்டரிடத்தில் ( மனதை வைத்து ) த்யானம் செய்வோம்,
அந்த தந்தர் ( விநாயகர் ) நம் சித்தத்தை ஒளிர்விப்பாராக.
ॐ श्री एकदन्ताय नमः॥
ஓம்ʼ ஶ்ரீ ஏகத³ந்தாய நம:॥
OṂ ŚRĪ EKADANTĀYA NAMAḤ॥