Wednesday, 26 August 2020

மனிதனும் மிருகமும் :

மனிதனும் மிருகமும் :

( தெய்வத்தின் குரல் - முதல் பகுதி )

மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் ‘திர்யக்’ என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெறவேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.

இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான்; பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம்; இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

Saturday, 22 August 2020

தத்துவமயமான விநாயகர் :

தத்துவமயமான விநாயகர் :

( தெய்வத்தின் குரல் )

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதை இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்” என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, ‘வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்’ என்று தெரிந்தது.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை! சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுவாமி எதை வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கும் கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.

ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது. நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.

நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்; ஆறாத ஆசையின் தத்துவம். அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை. இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் “பிள்ளையார்”, “பிள்ளையார்” என்றே விசேஷித்து அழைக்கிறோம்.

எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

விநாயகர் : ( தெய்வத்தின் குரல் )

விநாயகர் :

( தெய்வத்தின் குரல் )

தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகக் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய

சேரர்….

என்பதில் சொல்லாமல் சொல்கிறார். “அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே” என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கெனவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.

Saturday, 8 August 2020

மதத்தின் பயன்

மதத்தின் பயன் :

(தெய்வத்தின் குரல் - முதல் பகுதி)

தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்களுக்கு ஸாதனமாக இருப்பது மதம். இந்த நான்கையும் புருஷார்த்தங்கள் என்பார்கள்.

‘தர்மம்’ என்பதைப் தமிழில் ‘அறம்’ என்பார்கள். ‘அர்த்தம்’ என்பதைப் ‘பொருள்’ என்று சொல்லுவார்கள். ‘காமம்’, ‘மோக்ஷம்’ என்பவைகளை முறையே ‘இன்பம்’, ‘வீடு’ என்பார்கள். “புருஷார்த்தம்” என்பதில் ‘அர்த்தம்’ என்னும் வார்த்தை இருக்கிறது. முன்பு சொன்ன நான்கிலும் தர்மத்துக்கு அடுத்ததாக ஓர் ‘அர்த்தம்’ இருக்கிறது. ‘அர்த்தத்தில்’ என்றால், ‘வேண்டுமென்று நினைத்தல்’. புருஷன், அதாவது மனிதர்களாகப் பிறந்தவர்கள், தமக்கு வேண்டுமென்று எவைகளை நினைக்கிறார்களோ அவைகள்தாம் புருஷார்த்தங்கள். எதை மனிதன் வேண்டுமென்று நினைக்கிறான்? பொதுவாக, நாம் உள்ள பக்குவக் குறைவான நிலையில் பணமும் பொருளும்தான் வேண்டுமென்று நினைப்பதால், இதற்கே ‘அர்த்தம்’ என்ற பெயர் வந்துவிட்டது. பொருளாதார நூலை ‘அர்த்தசாஸ்திரம்’ என்கிறோம். ஆனால் நம் ஆச்சார்யாளோ இந்த அர்த்தம்தான் பெரிய அனர்த்தம் என்று “பஜகோவிந்த”த்தில் சொல்லிவிட்டார் ஏனென்றால், ரொம்பவும் தற்காலிகமான நிறைவை அல்பாயுஸான ஸந்தோஷத்தை மட்டுமே இந்தப் பொருளானது நமக்குக் கொடுத்து, சாசுவத நிறைவான மோக்ஷத்தைப் பறித்து விடுகிறது என்பதால் அப்படிச் சொன்னார்.

உண்மையில், எப்போதும் குறைவில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் மனிதன் நினைக்கிறான். சந்தோஷம் என்பது இரண்டுவிதம். கொஞ்ச நாழிகை இருப்பது ஒரு விதம்; எப்பொழுதும் குறையாமல் இருப்பது மற்றொரு வகை. கொஞ்ச நாழிகை சந்தோஷம் உண்டாக்குவதுதான் இன்பம் அல்லது காமம். காமம் என்பது எல்லா வித உலக ஆசைகளையும் குறிக்கும். இப்படிக் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போய்விடாமல், ஒருமுறை வந்துவிட்டால், எந்தக் காலத்திலும் போகாமல் நிலைத்திருக்கிற பேரின்பமே மோக்ஷம்—வீடு. அந்தப் பேரின்பத்தின் பெருமை தெரியாததால்தான் காமம் என்ற சிற்றின்பம் வேண்டுமென்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.

ஆகவே, நாம் உண்மையில் வேண்டுமென்று நினைக்க வேண்டியது நான்காவதாகிய வீடு. இப்பொழுது நடைமுறையில் வேண்டுமென்பதோ மூன்றாவதாகிய இன்பம். நாம் விருந்து சாப்பிடுவதனால் ஆனந்தம் உண்டாகிறது. அது ஓர் இன்பம். ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக இருந்தால் அதுவும் ஒரு வகை இன்பம். நமக்கு நல்வரவு பத்திரம் (Welcome address) வாசித்துக் கொடுத்தால் ஓர் ஆனந்தம்; அதுவும் இன்பந்தான். இந்த இன்பங்கள் சாசுவதமல்ல. இந்தச் சில்லறை இன்பத்தை எதனால் சம்பாதிக்கிறோமோ அது பொருள். அது தானியமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், மனிதர்களாக இருக்கலாம். பொருளே இன்பத்துக்குச் சாதனம். இந்த இன்பத்தைச் சிறிது பொழுதில் அநுபவித்துத் தீர்த்து விடுகிறோம். மறுபடி இன்பம் வேண்டும் என்ற தவிப்புத் தொடங்குகிறது.

இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே மோக்ஷம். அதுதான் வீடு. நாம் ஊரெல்லாம் சுற்றுகிறோம். அலைந்து கஷ்டப்படுகிறோம். நாம் வந்து அடைய வேண்டியது சொந்தவீடு. ஜெயிலில் ஒருவன் இருக்கிறான். அதிலிருந்து அவன் வெளியே வந்தால் வீட்டுக்குப் போகிறான். ‘வீடு’ என்பதற்கே விடுதலை என்று அர்த்தம். இப்பொழுது மாம்ஸமாகிய ஜெயிலுக்குள் இருக்கிறோம். இந்த உடம்பேதான் நாம் என்று எண்ணி இருக்கிறோம். அது சரியில்லை. உடம்பு நமக்கு ஜெயில். நம் நிஜமான வீடு ஆனந்தமான மோக்ஷம்தான். நாம் ஜெயிலை விட்டுச் சொந்த இடத்தில் இருக்க வேண்டும். பாபகர்மா என்ற குற்றத்துக்கு தண்டனையாக நம்மை உடம்பு ஜெயிலில் போட்டுவிட்டார் ஸ்வாமி. புண்ணியகர்மா செய்தால் அவர் சிக்ஷைக் காலத்தைக் குறைத்து (Condone பண்ணி) வெளியே அனுப்பிவிடுவார். ஜெயிலிலிருந்து கொண்டு புது பாபத்தைப் பண்ணித் தண்டனைக் காலத்தை நாம் ஜாஸ்தியாக்கிக் கொள்ளக்கூடாது; விடுதலையாகி ஸ்வாமிக்குள் போய் இருக்கிற நம் நிஜ வீட்டை அடைய முயல வேண்டும். அந்த வீடுதான் எல்லையற்ற இன்பம். உலகிலே காலம், தேசம், வஸ்து—இந்த மூன்றிலும் குறையாமல் நிறைந்து இருக்கும் பேரின்பம்.

புருஷார்த்தங்களில் முதலாவதாக ‘தர்மம்’ என்பதைப் பற்றிக் கடைசியில் சொல்கிறேன். எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம். தமிழில் ‘அறம் செய விரும்பு’ என்று முதலில் சொன்னார்கள். நல்லதாகச் செய்வதெல்லாமே தர்மம் என்றாலும், பொதுவிலே தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. ‘தர்மம் போடப்பா, தர்மத்தாயே’ என்றுதான் பிச்சைக்காரர்கள் யாசிக்கிறார்கள். தான-தர்மம் என்று சேர்த்தே சொல்கிறோம். தமிழிலும் தான சாஸனங்களை அறக்கட்டளை என்றே சொல்லுகிறார்கள். இப்படிப் பார்த்தால் நம் ‘பொருளை’, ‘அர்த்தத்தை’ இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம். ஆனால் இப்படிக் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் நாம் அர்த்தத்தை (பொருளை) மற்றவருக்குக் கொடுத்து தர்மம் செய்திருந்தால்தான் அது மறு ஜென்மத்தில் குட்டி போட்டுக் கொண்டு நமக்குக் கிடைக்கும். தர்மத்தினுடைய பிரயோஜனமே பொருள். இன்பத்துக்குப் பொருள் ஸாதனமாக இருப்பதுபோல் பொருளுக்குத் தர்மம் ஸாதனமாக இருக்கிறது. ஈகை மட்டுமல்ல! எவ்விதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு என்ன நல்லது செய்தாலும் பலனாகப் பொருள் கிடைக்கும்.

நாம் செய்யும் தர்மத்தை ‘இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்; ஈசுவரன் நினைத்ததைக் கொடுக்கட்டும்’ என்று பலனை எதிர்பாராமல் அர்ப்பணம் பண்ணிவிட்டால், அப்போது நம்மிடத்தில் உள்ள அழுக்கு போய் பேரின்பம் கிடைக்கும். பொருளைத் தரும் தர்மமே அப்பொழுது பரம்பொருளைத் தரும் வீட்டுக்கு ஸாதனமாகிவிடும். இப்படி தர்மமானது பொருளுக்கு ஸாதனமாகவும், அதன் மூலம் இன்பத்துக்கு ஸாதனமாகவும், பற்றின்றி நிஷ்காம்யமாகச் செய்யப்பட்டால் வீட்டுக்கு ஸாதனமாகவும் ஆகிறது. தர்மம் செய்தால் பிரதியாகப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளைக் கொண்டே மறுபடியும் தருமம் செய்யலாம். இப்போது அர்த்தமே தர்மம் செய்ய ஸாதனமாக இருக்கிறது. இன்பம் ஒன்று தான் தன்னாலும் நிறைவுபடுவதில்லை; பிறவற்றுக்கும் ஸாதனமாக இருப்பதில்லை. கொதிக்கிற மணலில் விட்ட ஜலம் உடனே சுவறிப்போவதுபோல் ‘இன்பம்’ என்பது, தன்னாலும் நிறைவின்றி, வேறெதற்கும் ஸாதனமாகவும் இன்றி, தர்ம சிந்தனை, பொருள், மோக்ஷம் எல்லாவற்றையும் நாசம் பண்ணிவிட்டுத் தானும் நசித்துப் போகிறது. ஆனாலும், இந்த இன்பத்தை இப்போதே விட்டு விடுவோம் என்றால் முடிய மாட்டேன் என்கிறது. அதை அடியோடு விடாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பபடுத்தித் தரவும், பிறகு படிப்படியாக இந்தச் சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்துக்கு அழைத்துச் செல்லவுமே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது. முதலில் இதுதான் அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன இன்பங்களை எல்லாம் தொலைத்து, நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே மதம்.

பந்தத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்மா பூரண சுதந்திரத்துடன் எந்நாளும் ஆனந்தமாக இருக்கிற நிலையே மோக்ஷம். இதை நமக்குக் கிட்டச் செய்வதற்கே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.

மநுஷ்யர்கள் இப்போது சாசுவதமான சுகத்தைப் பெறவில்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. இவர்களை அப்படிப்பட்ட சுகத்தில் சேர்க்கவே எல்லா மதங்களும் தோன்றியிருக்கின்றன. இந்த சாசுவத சௌக்கிய நிலைக்குத் தான் மோக்ஷம் என்று பெயர். இந்திரியங்களால் பெறும் அர்த்தசௌக்கியத்தைத் தேடிப்போகிறதைத் தொலைத்தால்தான் சாசுவத சௌக்கியம் கிடைக்கும். இம்மாதிரி இந்திரிய சுகத்தைத் தொலைக்கவும், சாசுவத சௌக்கியம் கிடைக்கிற வரைக்கும் அதற்கு அநுகூலமாக சமூக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமே தர்ம நியதிகள் எல்லாம் வேண்டியிருக்கின்றன. மோக்ஷத்தை லட்சியமாகக் கொண்ட மதமே இந்த தர்மங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டியதாகிறது. இதனால்தான் தர்மம் என்றாலே அதற்கு மதம் என்றுதான் பெரியோர்கள் பொருள் கொண்டார்கள்.

ஏதோ ஒரு மாயா சக்தியால் இப்படி மநுஷ்யர்களாகியிருக்கிற நாம் பொருளையும், சிற்றன்பங்களையுமே வேண்டுமென்று நினைக்கிறோம். எதை வேண்டுமென்று நினைக்கிறோமோ அதுதான் அர்த்தம். வாஸ்தவத்தில் நம் நிறைவான நல்லதற்குப் பொருளும் காமமும் வேண்டாதவை என்றாலும் மநுஷ்ய ஸ்வபாவத்துக்கு (Human nature- க்கு) விட்டுக் கொடுத்து இவற்றையும் நம் பெரியவர்கள் புருஷார்த்தங்களில் சேர்த்தார்கள். ஆரம்பத்திலேயே, எல்லாக் காரியங்களுக்கும் அடிப்படையாக தர்ம உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு விட்டால், அப்புறம் பொருளும் காமமும்கூட நம்மை ஒரேயடியாகப் கெடுத்துவிடாதபடி, இவற்றைக் கட்டுப்பாட்டில் அளவறிந்து வைத்திருக்கும் என்பதால் தர்மத்தை முதல் புருஷார்த்தமாகச் சொன்னார்கள். பொருளையும் காமத்தையும் நாம் அர்த்திப்பது (வேண்டுமென்று நினைப்பது) போலவே தர்மத்தையும் அர்த்திக்க வேண்டும். அப்போது அது பொருள், இன்பம் இவற்றின் விஷப் பல்லைப் பிடுங்கி விடும்; முடிந்த முடிவாக நாம் அர்த்திக்க வேண்டிய வீட்டில் நம்மைச் சேர்த்துவிடும்.