Thursday, 28 January 2016

Chandeswara Nayanar - சண்டேசுவர நாயனார்

Chandeshwara nayanar guru poojai  -  today 28-1-2016.

சண்டேசுவர நாயனார் :




                  திருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது. பண்ணிற்கு மெல் இசையும், பாலிற்கு நல்ல இன்சுவையும், கண்ணிற்குப் பயன் ‌பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுந்தும், விண்ணிற்கு மழையும், வேதத்திற்குச் சைவமும் பயனாவன போல் மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞ்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெரும் சிறப்பினைப் பெற்றிருந்தது இத்திருத்தலம் !முன்னொரு காலத்தில் அமரர்களுக்குத் தொல்லை கொடுத்த சூரபதுமன் முதலிய அசுரர்களை வென்று அமரர்களின் அல்லலை நீக்கியப் முருகப்பெருமான் அமரர்களும், பூதகணங்களும் பின்தொடர மண்ணியாற்றின் கரையை அடைந்து, எழில் மிகும் திருநகரம் ஒன்றை நிர்மாணித்தார். அந்நகரில் கந்தவேள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடும் செய்தார். இக்காரணம் பற்றி‌யே இந்நகரம் திருச்‌‌சேய்ஞ்ஞலூர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. இப்படிப்பட்ட இந்த நகரில் அந்தணர்கள் மிகுந்து இருந்தார்கள்.

அந்தணருள் ஒருவர்தான் எச்சத்தன் என்பவர். அவர் மனைவியின் பெயர் பவித்திரை. அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர்தான் விசாரசருமன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த விசாரசர்மன், ஐந்து வயது பிராயத்தை அடைந்தார். முற்பிறப்பில் வேதாகமங்களில் பெற்றிருந்த நல்லுணர்ச்சியின் தொடர்பினால் இப்பிறப்பிலும் வேதாகமங்களின் உட்பொருள்களில் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டானது. அரும்பில் நிறைந்துள்ள மணம், மலரும் தருணம் வெளிப்படுவது போல், கல்வி பயில ஆரம்பித்தபோதே இவரது சிவாகம உணர்ச்சி பெரிதும் விளங்கலாயிற்று. அவர் சிந்‌தையில் எந்நேரமும், பரமனின் பொற்பாதத்தின் நினைவே தான் இருந்தது. முக்கண்ணனின் மலர்ப்பாதங்களின் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் இச்சிறு பிராயத்திலேயே, பேரின்ப வீட்டைப் பெற்ற பெருமிதம் பூண்டார் அந்த அந்தணர் குலக்கொழுந்து!

விசாரசருமருக்கு ஏழாண்டுகள் நிரம்பின. பெற்றோர்கள். அப்பருவத்தில் அவருக்கு உபநயனம் செய்து மகிழ்ந்தனர். குல ஒழுக்கப்படி வேதம் ஓதுவித்தனர். அவரோ ஆசான் வியக்கும் வண்ணம் தேர்ச்சி பெற்று விளங்கினார். ஒரு நாள் விசாரசர்மன் வேதம் ஓதும் அந்தணச் சிறுவர்களுடன் மண்ணியாற்றின் கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். அவ்வழியே ஓர் சிறுவன் பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்டியது. சிறுவனுக்குக் கோபம் வந்தது. பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, விசாரகுமார் திடுக்கிட்டார். அவர் மனம் இளகியது. அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சிறுவனிடம் விரைந்து சென்றார். அவன் பசுவை மேலும் அடிக்காதவாறு தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றிக் கூறலானார். ஐயையோ ! எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ? உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையனவல்லவா ? அரனார் பொன்மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் திருமுடியில் அபிஷேகம் செய்யத்தக்க பஞ்ச கவ்யத்தை அளிக்கும் உரிமையும் அருமையும் ஆவினத்தைச் சேர்ந்ததல்லவா ? எம்பெருமான் உமாதேவியாருடன் எழுந்தருள் இடபத்தின் திருக்குலத்தைச் சேர்ந்த காமதேனு என்று ஆவினத்தை அழைப்பார்களே ! பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே ! பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், தேவதேவாதியர்களும், முனிவர்களும் வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத்தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் பாதுகாப்போடு மேய்ப்பதல்லவா நம் கடமை, ஆவினங்களைக் காப்பது ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனிமேல் இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டு அச்சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான். அவன் விசாரசருமரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான்.

விசாரசருமர் பசுக்களை மேய்க்கப் போகும் விஷயத்தை மறையவர்களிடம் சொல்லி அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அனுதினமும் விசாரசருமர் கோலும், கயிறும் ஏந்திக்கொண்டு, ஆவினங்களோடு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்படுவார். பசுக்களை நல்ல பசுமையான புற்கள் உள்ள இடத்தில் மேய விடுவார். நல்ல நீர் உள்ள இடத்தில் நீர் அருந்தச் செய்வார். பசுக்கள் மேய முடியா‌த இடத்தில் கல்லையும், முள்ளையும் பொருட்படுத்தாமல் அவரே, புற்களைச் சுத்தபடுத்தி அவைகளுக்கு ஊட்டுவார். பெற்றோர்கள் தான் பெற்ற செல்வங்களைக் காப்பதுபோல் கோகுலங்களைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார் விசாரசருமர். ஐந்தறிவு படைத்த அந்த ஜீவன்கள் இவரது அன்பிற்குக் கட்டுப்பட்டு அச்சம் என்பதே இல்லாமல் இவருடன் பழகின. நல்ல வெயில் வந்துவிட்டால் மட்டும் மரநிழலில் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து இளைப்பாற்றுவார் விசாரசருமர் ! மாலை நேரம் வந்ததும் வேண்டிய அளவு விறகு, சமிதை சேமித்துக் கட்டாகக் கட்டி வைத்துக் கொண்டு ஆநிரைகளுடன் வீட்டிற்குப் புறப்படுவார். இவர் ஆநிரைகளை அன்புடனும், ஆதரவுடனும், பொறுப்புடனும், பெருமகிழ்ச்சியுடனும் மேய்த்து வந்தார். விசாரசருமரின் பராமரிப்பில் பசுக்கள் முன்னிருந்ததைவிட நல்ல வளத்தோடும், புஷ்டியோடும் இருந்தன. அது மட்டுமின்றி முன்னைவிட அதிகமாகப் பாலையும் சுரந்தன. அதுமட்டுமல்ல, ஆநிரைகளான அவைகள் விசாரசருமரை அடிக்கடி சென்று உராய்வதும் நாவால் நக்கிக் கொடுப்பதுமாக இருந்தன. புல் மேயும் இடத்தில் விசாரசருமர் வெயிலில் நின்று கொண்டிருந்தால் இவைகள் கூட்டமாகச் சென்று நின்று அவருக்கு உட்காருவதற்கான நிழலைத் தரும். சில சமயங்களில் கன்றைக் கண்ட தாய் பசு, பால் சுரப்பது போல் விசாரசருமரைப் பார்த்ததும் ஆவினங்கள் பால் பொழியும். தனது அரு‌கே வந்து பசுக்கள் பால் பொழிவதைக் கண்ட விசாரசருமர் அப்பாலை வீணாக்காமல் பரமன் இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் என்ன? என்று எண்‌ணலானார். அத்தி மரத்தடியில் குளிர்தரும் நிழலைக் கண்டார். ஆண்டவனுக்கு அநத இடத்திலேயே கோயில் ஒன்றை அமைக்கச் சித்தம் கொண்டார். மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணல் எடுத்து வந்து லிங்கம் ஒன்றை வடித்தார்.

மண்ணாலே மதிற்சுவர்ளோடு கூடிய சிறு கோயிலைக் கட்டினார். கோபுரமும் அமைத்தார். மணமிகுந்த நறுமலர்ச் செடி‌களையும், கொடிகளையும் அழகிற்காகக் கொண்டு வந்து வைத்தார். அக்கோயிலையும் சிவலிங்கத்தையும் பார்த்து ஆனந்தக் கூத்தாடினார். அவர் உடம்பிலே பக்தி வெள்ளம் பெருகியது. அவர் சிந்தை மகிழ்ந்தார். அடுத்தாற்போல் பரமனுக்கு பூஜையும், அபிஷேகமும் செய்ய வேண்டுமென்று எண்ணினார். அர்ச்சனைக்காக மலர்களைப் பறித்துக்கொண்டு வந்தார். அபிஷேகம் செய்வதற்காகப் பாலைப் புதிய பாண்டங்களில் ‌சேமித்தார். வேதம் ஓதி அபிஷேகம் செய்தார். மலர்களால் சிவலிங்கத்தை அன்போடு அர்ச்சனை செய்தார். சேய்ஞ்ஞலூர் அரனாரை முருகன் வழிபட்டாற்‌பால் மண்ணியாற்றங்கரை லிங்கத்தை இன்று விசாரசருமர் வழிபட்டார். இந்த வழிபாடு தினந்தோறும் தவறாமல் நடந்து வந்தது. இவர் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பாலும் அர்ச்சனை செய்யும் மலரும் சேய்ஞ்ஞலூர் பரமனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. அரனார் அந்தணச் சிறுவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார். பெரிய திருக்‌கோயிலிலே எழுந்தளருளியிருந்த எம்பெருமான் மண்ணியாற்றங்கரையிலுள்ள இச்சிறு மண்கோயிலிலும் எழுந்தருளினார். இறைவன் வழிபாட்டிற்கு பால் சுரக்கும் ஆநிரைகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட சற்றும் குறைவின்றி முன்னைவிட அதிகமாகவே பாலைப் பொழிந்தன. ஒருநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பாலைக் குடம் குடமாக லிஙகத்தின் மீது அபிஷேகம் செய்வதும் மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். இவரது ஒவ்வொரு செயலையும் நெடுநேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அறிவிலியொருவன், வேகமாக இவரிடம் வந்து என்ன காரியம் செய்கிறாய் ? உன்னை நம்பி மாடு மேய்க்க அனுப்பினால் நீ மாட்டின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே. இது அடுக்குமா என்று கேட்டான். அவன் வார்த்த‌கைள் இவரது காதுகளிலே விழவே இல்லை. எப்படி விழும் ? இவர்தான் ஐம்புலன்களையும் அடக்கி அருந்தவசியைப்போல் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாரே ! விசாரசருமர் மவுனம் சாதிப்பது கண்டு ஆத்திரம் அடைந்த அவன் அக்கணமே ஊருக்குள் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌லே கண்ட காட்சியைப் பற்றி அனைவரிடமும் கூறினான். அனைவருக்கும் சினம் பொங்கியது. எச்சத்தனிடம் சென்றனர். விஷயத்தை விளக்கி மகனைக் கண்டிக்குமாறு கூறினர். எச்சத்தன் கடு்ம் கோபம் கொண்டான். மகனைக் கண்டிப்பதாகச் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான் மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தான் எச்சத்தன்.
மறுநாள் காலை விசாரகுமார் வழக்கம்‌போல் ஆவினங்களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். எச்சத்தன் மகன் அறி‌யாதவாறு பின்னால் தொடர்ந்து சென்றார். மண்ணியாற்றின் கரையை அ‌டைந்த எச்சத்தன் அங்குள்ள ஒரு குரா மரத்தில் மீது ஏறி மறைவாக அமர்ந்து கொண்டான். விசாரசருமர் வழக்கம்போல் மண்ணியாற்றில் நீராடி நமசிவாய மந்திரம் ஜபித்து திருவெண்ணீறு பூசி மலரைக் கொய்துகொண்டு பச்சிலைகளையும் பறித்துக் கொண்டு வந்தார்.

மண்ணால் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். குடம், குடமாகப் பாலைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். விசாரகுமார் பக்தியில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. ஜோதி உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. பாற்குடங்களில் பால் நுரையோடு பொங்கி வழிந்து இருப்பதுபோல் ! விசாரசருமர், ஆவாகனம் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத் தொடங்கினார். பசுவின் பாலை ‌எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தனுக்குக் கோபம் எல்லை மீறியது. உலக மாயையிலே மூடிக்கொண்டிருந்த அவனுக்கு அகக்கண்களும் மூடிக்கிடந்தன. பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாத எச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்தான். சினத்தால் பொங்கி எழுந்தான். மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டான். தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கினான். கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தான் எச்சத்தன் ! விசாரசருமருக்கு அடிபட்டும் எவ்வித உணர்வும் ஏற்படவில்லை. பூஜையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சத்தன் அடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி வெளிவந்தன. இவையெல்லாம் விசாரசருமர் காதுகளில் விழுந்தால்தானே! விசாரசருமர் தந்தையின் இடையூறுளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்தார்.

எச்சத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌கோபத்தை உண்டுபண்ணியது. பால் நிரப்பி வைத்திருந்த திருமஞ்சனப் பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அதுவரை பூஜையில் மெய்மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப் பாலைக் கொட்டிக் கவிழ்த்தது கண்டு கோபம் கொண்டார். வழிபாட்டிற்குக் குந்தகமாக இத்த‌கைய நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தைதான் என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டித்தார். அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளிய தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சத்தன் உயிரை இழந்தான். இதுவரை நடந்தவற்றைப் பற்றி ஒன்றுமே தம் புலன்களுக்குப் புரி‌யாத நிலையில் இருந்த விசாரசருமர் மீண்டும் சிவ வழிபாட்டில் ஈடுபடலானார். அவ்வமயம் வானவெளியில் பேரொளி பிறந்தது. ஒளி நடுவே, ஒளிப்பிழம்பாக இறைவன் உமாதேவியுடன் விடையின் மேல் எழுந்தருளினார். பக்தியால் உலகை மறந்திருந்த விசாரசருமர் பேரொளிப் பிழம்பாக காட்சியளித்த பரமனைப் பார்த்ததும் பேருவகை கொண்டார். கரம்கூப்பி நிலந்தனில் விழுந்து வணங்கி எழுந்தார். வானத்தினின்றும் வையகத்துக்கு எழுந்தருளிய பரமசிவனும், பார்வதியும் விசாரசருமர் வாரி அணைத்து, உச்சிமோந்து மகிந்தனர். இறைவன் அன்பு மேலிட அவரைத் தழுவி மகனே! எம்மீது பூண்டுள்ள அன்பின் மிகுதியால் பெற்றவன் என்றும் பாராமல் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப்பட்டோம். உனக்குத் தந்தையும் நானே, தாயும்நானே ! என்று திருவாய் மலர்ந்தார். விசாரசருமரின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அம்மையப்பரின் அரவணைப்பிலே அந்தணர் குல மைந்தார் சிவப் பழமானார். எம்பெருமான் விசாரசருமருக்கு அருள் செய்தார். நம் அடியார்களுக்கெல்லாம் தலைவனாகிவிட்டாய் நீ ! நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பரிகலமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு சண்டீசபதம் வழங்கினோம் என்று அருளினார் பெருமான் ! இறைவன் தம் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்தார். அன்புச் சிறுவனின் கழுத்தில் தம் திருக்கைகளாலேயே அணிவித்தார்.


சண்டீசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை, வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள். சிவ சண்டீசபதத்தில் இருப்பவர் தொனிச் சண்டர் எனத் திருநாமம் பெறுவர். உருத்திரருடைய கோபாம்சத்தில் தோன்றியவரே சண்டேசுரர். (சண்டம்-கோபம்) எச்சத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையைத் தன் மகன் கையாலேயே பெற்று, பின்னர் அவனால் பாவம் நீங்கி, சிவலோக பிராப்தியை அடைந்தான். விசாரசருமர் மகேசுவரனிடம் திருவருள் அணைப்பிலே என்றும் அவரது மைந்தராய் தோன்றிப் பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவருட்தாளினை அடைந்தார்.


சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத் தந்தை எனவே அறிந்தவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால் முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால் வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும்- 1256, திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.

As he thus spilt it away the holy child looked at him
For a while and knew the evil one to be his own father;
Yet as he spilt the milk consecrated for the Lord
He was out to punish him; he took a stick
Which lay nearby, and behold, it duly became
An axe in his hand; with that when he cut away
His feet, down fell the Brahmin, on the earth.
- 1256 , Periyapuranam.

அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்- 1261 , திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.

The God of gods made him the Lord of Devotees;
He said: “We confer on you the beatitude of Chandesa;
Our Nirmalya -- food, garment and wreath --,
Shall all be yours only.” Thus saying, the Lord
From off his matted hair where shines the crescent,
Took out a wreath of konrai and garlanded Him.
- 1261, Periyapuranam.


மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் 
               - திருத்தொண்டத்தொகை.

“He truly hailed the Lord in pooja; when his father
Grew wroth at this he cut off his feet
With an axe; he is motherly Chandi
Devoted to the hallowed feet of the Lord;
I am a servitor of this lord.”
- The Tiru-th-Tonda-th-Tokai.



न शक्नोमि कर्तुं परद्रोहलेशंकथं प्रीयसे त्वं न जाने गिरीश ।तथाहि प्रसन्नोऽसि कस्यापि कान्ता-सुतद्रोहिणो वा पितृद्रोहिणो वा ॥ १३ ॥- शिवभुजङ्गम्

“Na shaknomi kartum paradrohalesham
Katham priyase tvam na jane girisha
Tatha hi prasannosi kasyapi kanta
Sutadrohino vaa pitrdrohino vaa.”
- shiva bhujangam - shankara bhagavatpAda.

[O Lord of mountains! I canst not cause the least harm to others. I know not why Thou dost not like me. It is widely known that Thou didst bestow grace on him that harmed his wife, on him that wronged his son and on him that harried his father.

Friday, 22 January 2016

Arivaattaaya Nayanar - அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார் :



பெயர்: அரிவாட்டாய நாயனார்

குலம்: வேளாளர்

பூசை நாள்: தை திருவாதிரை

அவதாரத் தலம்: கணமங்கலம்

முக்தித் தலம்: கணமங்கலம்


                         சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.

                          இத்திருத்தொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழிதெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் உமையொருபாகருக்குத் தாம் முன்செய்துவந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு  தாம் உண்டு வந்தார்.

                          இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன. அவற்றை அறுத்த நெற்கூலியினைக் கொண்டு “இது அடியேன் செய்த புண்ணியமே ஆகும்” என்று சிந்தை மகிழ்ந்து, அக்கூலியெல்லாம் திருவமுதுக்கே ஆக்கினார். தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரை வகைகள் தீரவே அருந்ததி அனைய மனைவியார் தண்ணீரை வார்க்க அதனை அன்பாளர் அமுது செய்து முன்போலப் பணிசெய்து வந்தனர்.

                            ஒருநாள் தொண்டனார் இறைவர்க்கு ஊட்ட அவரது அன்புபோன்ற தூய செந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென்கீரையும் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்பு மட்கலத்தில் ஆனைந்து ஏந்திச் சென்றனர்.
                           இவ்வாறு செல்லும் பொழுது திருமேனி வாடியதனால் கால் தளர்ந்து தப்பித் தாயனார் வீழ்ந்தார். மட்கலம் மூடும் கையினால் காதல் மனைவியார் அணைத்தும், கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார். “அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார். 

                            அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.
                             அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார். தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார்.


மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்
 ஆசில்வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்
 வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்
 ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே.
            - 920, திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.

To prevent the act of the fierce and flawless hand
 Of the blemishless servitor who wielded the sawing sickle,
 The sticking out of the Gracious hand of the Dancer-Lord
 And the sound of Videl-Videl of biting
 And cracking the tender mango, was seen and heard
 Simultaneously from the fissure.
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
 பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
 வரிவடு விடேலெனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
 அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.
         -  922, திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.
As the devotee of loving chinta felt that the Supreme Ens
 -- The Great One --, could not be by him fed,
 And as he set his sickle on his tough neck and began
 To saw it, before he could hearken to the cracking sound
 Of videl of the tender mango (from the fissure(,
 He came to be called by the holy name Arivattayar.



“எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
"I am a servitor to the servitors of Vattayan
  Who desired to perish when his service failed."

     - The Tiru-th-Tonda-th-Tokai.

Thursday, 21 January 2016

கண்ணப்ப நாயனார் Kannappa Nayanar


கண்ணப்பநாயனார் குருபூஜை இன்று – 21-1-2016.

அவர் வரலாறு உணர்த்தும் உண்மை :

பெற்ற அறிவுகொண்டு ஆராயாமல் தூய அன்புடன், மாறபற்றுடன் செல்லுதும் பக்திக்கு ஈசன் அடிமை என்று உணர்த்துவது

கண்ணப்ப நாயனார் :

உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் புரியும் இவ்வேடர் குலத்திற்குத் தலைவனாக இருந்தவன்தான் நாகன். இவனது மனைவி தத்தை என்பவள். வாள் வலிமையும், தோள் வலிமையும் ஒருங்கே பெற்ற நாகன், குற்றம் புரிவதையே தொழிலாகக் கொண்டவன். அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போலவே வீரமும், வலிமையும் கொண்டு, பெண் சிங்கம் போலிருந்தாள். இருவரும் பல்வகைச் சிறப்புக்களோடும் வாழ்ந்து வந்தனரே தவிர, அவர்களுக்கு மன நிம்மதியில்லை. நாகனுக்கும், தத்தைக்கும் திருமணமாகிப் பல காலமாகியும் மக்கட்பேறு இல்லை. அதற்காக இருவரும் பக்தர்கள் குறை தீர்க்கும் எல்லாம்வல்ல முருகக் கடவுளைப் பல வழிகளில் அனுதினமும் வழிபட்டு வந்தனர். இவர்களது இடையறாத பக்திக்கு சுந்தரக் கடவுளும் கருணைக் காட்டினார். குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரவேள், நாகனுக்கும், தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார். முருகப் பெருமானின் திருவருளால் மறவர்குடி மங்காது விளங்க, தத்தை ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து மகிழ்ந்தாள். பிறக்கும்போதே குழந்தையைக் கைகளில் தூக்கமுடியாத அளவிற்குத் திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று சிறப்புப் பெயர் வைத்தனர். வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரித்தனர். புலிக்குட்டிபோல் வீரத்தோடு பிறந்த திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரலானான். வேடர் குல முறைமைக்கு ஏற்ப உரிய பருவத்தில் திண்ணன் வில் வித்தையை முறையோடு பயின்று, உரிய காலத்தில் வல்லவனாக விளங்கினான்.பிரபஞ்சம் திண்ணனைப் பதினாறு பிராயம் நிரம்பப் பெற்ற வாலிபனாக்கியது. முதுமையை அடைந்த நாகன், தலைமைப் பதவிக்குத் தன் மகனை மாற்ற எண்ணி அதனை வேடர்களிடம் தெரிவத்தான். அவர்களும் நாகனின் விருப்பப்படியே திண்ணனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள இசைந்தனர். திண்ணனாரும் வேடர்களுக்கு ஈடு இணையற்ற வீரத்தலைவர் ஆனார்.

உள்ளமும், உடலும் பூரித்துப்போன நாகன், தேவதைகளுக்குப் பூசை செய்யும் தேவராட்டியை வரவழைத்து குல வழக்கத்திற்கு ஏற்பத் தேவதைகளுக்குப் பூஜை செய்யுமாறு கட்டளையிட்டான். தேவராட்டி வழிபாடு செய்து, திண்ணன் தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி கூறினாள். ஒருநாள் குல வழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட எண்ணினார் திண்ணனார். இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்களோடு வேட்டைக்குப் புறப்பட்டார். மேகம் போல் வேடர் கூட்டம் சூழ, திண்ணனார் வேட்டையாடக் காட்டிற்குள் புகுந்தார். குகைவிட்டுக் கிளம்பும் கொடும் புலியைப்போல் திண்ணனார் வேட்டையாடத் தொடங்கினார். பறவைகளும், கொம்புகளும் பெரு முழக்கமிட்டன. வேடர்களால் வாயால் சீழ்க்கையடித்தனர். கைகளைத் தட்டி ஓசை எழுப்பினர். வேடர்களின் ஆர்ப்பாட்டத்தில் காடே அதிர்ந்தது சிங்கங்கள் கர்ஜித்து வந்து, வேடர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியாயின. பாய்ந்து வந்து புலிகள் அம்பினால் தாக்கப்பட்டு உயிர் நீத்தன. துள்ளித் துள்ளி வந்த மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. மற்றும் பல வனவிலங்குகளும் வேடர்களின் கணைகளுக்குப் பலியாயின. இந்தச் சமயத்தில் திடுக்கிடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. வலையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய பெரிய பன்றி ஒன்று வேட்டை நாய்களிடமிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டதோடல்லாமல் வேடர்கள் கணைகளுக்கும் தப்பி அதி வேகமாக ஓடத் தொடங்கியது. வேடர்கள் பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடினர். பன்றி சிக்கவில்லை. அனைவரும் களைப்பு மேலிடப் பின்தங்கினர். ஆனால் திண்ணனார் மட்டும் உறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் காட்டு முயல்போல் பாய்ந்தோடியவாறு பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். திண்ணனின் மெய்க்காவலர்களாகிய நாணன், காடன் என்ற இருவர் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். எல்லோரையும் ஏமாற்றிவிட்டுக் காற்றினும் கடுகப் பாய்ந்தோடிய பன்றியைப் பிடித்தார். உடைவாளால் வெட்டி, அதனைத் துண்டு துண்டாக்கினார் திண்ணனார். திண்ணனாரின் பின்னால் ஓடிவந்த நாணனும், காடனும் திண்ணனார் இருக்குமிடத்தை அடைந்து, தலைவரது ஆற்றலைக் கண்டு வியந்தனர். திண்ணனாரின் வீரத்திற்குத் தலைவணங்கிய அவ்விருவரும், அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினர். அம் மூவருக்கும் நேரம் அதிகமானதாலும் ஓடிவந்த களைப்பினாலும் பசி மேலிட்டது.
மூவரும் பன்றியை நெருப்பில் சுட்டு தின்று, தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். ஆனால் திண்ணனாருக்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற ஐயம் எழவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கு முன், பல தடவை வேட்டைக்கு வந்து பழக்கப்பட்ட நாணன், திண்ணனிடம், சற்று தொலைவில் உள்ள தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால் குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடுகிறது. என்று விளக்கினார். நாணனின் பேச்சைக் கேட்டு பூரித்துப்போன திண்ணனார், அப்படியா ! நாம் அனைவரும் அங்கேயே போவோம். இந்த பன்றியையும் தூக்கிச் செல்வோம் என்று சொல்லி முன்னால் புறப்பட, நாணனும் காடனும் பன்றியைத் தூக்கிக் கொண்டு திண்ணனாரை வழிநடத்திச் சென்றனர். செல்லும் வழியே திண்ணனார் காளத்தி மலையைக் கண்டார். திண்ணனார் ஒரு வினாடி அப்படியே அசைவற்று நின்றார். காளத்தி மலையைப் பார்க்க பார்க்க அவருக்கு மெய் சிலிர்த்தது. எதனாலோ, அவர் உடம்பில் புதுச் சக்தி பிறந்தது. மலை மீது ஒளிப்பிழம்பு தெரிவது போன்ற பிரமை அவரைப் பற்றிச் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது. குன்றின் அழகையே பார்த்துக் கொண்டிருந்த திண்ணனார் செவிகளில் மட்டும் விழும்படியாக, மலைமீது ஐந்த தேவ துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. அந்த ஒலியைக் கேட்கும் பேறு பெறாத நாணன் செவிகளில், தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டும் எழுப்பும் ஓசைதான் ஒலித்தது. திருமலையில் திருவுள்ளம் பதிந்து போன திண்ணனார், நாணா ! அக்குன்றுக்குச் செல்வோமா ? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி ஒன்று திண்ணனாரைத் தடுத்தாட்கொண்டது. ஓ, போகலாமே ! அம்மலையிலே நல்ல காட்சிகள் பலவற்றைக் காணலாம், அத்தோடு அம்மலையிலுள்ள குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வராலம் என்று நாணன் கூறினான். அவன் மொழிந்தது கேட்டு திண்ணனார் களிப்படைந்தார் அவர் உடம்பில் பேரின்பச் சக்தி பிறந்தது. திண்ணனாருக்குச் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. மலையைப் பார்க்கப் பார்க்க உலக பாõரம் குறைவது போன்ற ஒரு புத்துணர்வு திண்ணனாருக்கு ஏற்பட்டது. குடுமித்தேவரைக் காணவேண்டும் என்ற ஆசை பள்ளத்தில் பாய்ந்த வெள்ளம்போல் அவர் உள்ளத்தில் புகுந்து ஓடியது.
குடுமித் தேவரைக் கும்பிட வேண்டுமென்ற எண்ணம், அவரை மேலும் விரைந்து செல்லத் தூண்டியது. நடந்து சென்று கொண்டிருந்த திண்ணனார், ஆசை மேலிட, ஆவல் உந்திட, ஓட ஆரம்பித்தார். நாணனும் காடனும் கூடவே விரைந்தனர். சற்று நேரத்தில் மூவரும் பொன் முகலி ஆற்றின் கரையை அடைந்தனர்.திண்ணனார், காடனை நோக்கி, காடா ! நீ, தீ மூட்டி, இப்பன்றியைச் சுட்டுச் சாப்பிடுவதற்குப் பக்குவமாகச் செய்து வை. அதற்குள் நானும், நாணனும் மலைக்குப் போய் வருகிறோம் என்று கூறினார். திண்ணனாரும், நாணனும் வேக வேகமாக பொன்முகலி ஆற்றைக் கடந்து மகிழ்ச்சியுடன் திருக்காளத்தி மலைச்சாரலை அடைந்தனர்.பகலெல்லாம் பாரிலே பவனி வந்த பகலவன் கடமையை முடித்த களிப்பிலே, களைப்பு நீங்கக் கடல் வாயிலை அடைந்து கொண்டிருக்கும் நேரம் !மாலைக் கதிரவனின் மஞ்சள் வெயில் திருக்காளத்தி மலையைப் பொன்மயமாக்கியது. நாணன், திண்ணனாருக்குப் பாதை காட்டும் பொருட்டு முன்னால் நடந்து சென்றான். திண்ணனார் அவனைப் பின் தொடர்ந்தார். மலையின் மீது படிகளைக் கடந்து செல்லும் நேரம் உலகத் தத்துவங்கள் என்னும் படிகளைக் கடப்பது போன்ற ஒருவித மன உணர்வு பூண்டார் திண்ணனார். வேணிநாதரின் முடி மேலிருக்கும் வெண்ணிலாவின் தன்மைபோல் திண்ணனார் நெஞ்சம் குளிர்ந்தது. ஒவ்வோர் படி மீதும் அடி எடுத்து வைக்கும் போதும், அவரது உள்ளத்தில் எதனாலோ பக்தி வளர்ந்தது. முருகனைப் போற்றும் திண்ணனார், சிவத்தை சாரும் சிவயோகி போலானார். திண்ணனார், முற்பிறப்பில் செய்த தவத்தின் பெருக்கம் அவரது உள்ளத்தில் அன்பைப் பெருக்கியது. ஆண்டவன் மீது ஆராக காதலைப் பொங்கி எழச் செய்தது. காளத்தி மலையின் உச்சியில் முழுங்கும் பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்க கேட்க ஆசை பொங்கி வழிந்தது. உள்ளம் ஏதோ ஒரு சொல்ல முடியாத விருப்பத்தை அடைந்தாற்போல் தோன்ற மெய் சிலிர்த்தது. மலை மீதேறிய திண்ணனார் அங்கு எழுந்தருளியிருக்கும் குடுமித் தேவரைக் கண்டார். அவரது வடிவெல்லார் புளகம் பொங்கியது. அருள் வழிகளில் ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் பாய்ந்தது.
திண்ணனார் முகத்திலே புதிய பிரகாசம் ஒன்று ஏற்பட்டது. எம்பெருமானின் கருணை கூர்ந்த அருட்திருநோக்கம் அவர் மீது பட்டது. திண்ணனார் ஒப்பற்ற அன்பு வடிவமாய்த் திகழ்ப் புதுப்பிறவி எடுத்தாற்போல் ஆனார். ஞாயிறு தோன்ற நலியும் இருள்போல திண்ணனார் நெஞ்சத்தில் தோன்றிய அருள், அஞ்ஞானத்தை அறவே நீக்கியது. ஞானத்தை ஊட்டியது. சிவகொழுந்தை அப்படியே பார்த்துக் கொண்டேயிருந்தார். அன்பினாலும் பேருவகையினாலும் ஈர்க்கப்பெற்ற திண்ணனார் ஆசை பொங்கி மேலிட அருள் வடிவமான அம்மையப்பரைக் கட்டித் தழுவினார். முத்தமாரி பொழிந்தார். பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். விழி இரண்டும் அருவி போல் ஆனந்த நீரைச் சிந்தின. திண்ணனார் மதுவுண்ட வண்டுபோல் ஆனார் அவரது மொழி குழறியது. உடல் குளிர்ந்தது. உள்ளம் பேருவகை எய்தியது. திண்ணனார் அன்பே உருவானார். அகில உலகத்தையும் மறந்து சிலைபோலானார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு பெற்றார். இந்த ஏழைக்கு இவர் அகப்பட்டார். இப்பிறப்பில் நான் பெற்ற பேற்றை வேறு எவருமே பெற்றிருக்க முடியாது என்று உணர்ச்சி பொங்கக் கூறிய திண்ணனார், எல்லையில்லா ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். இறைவனைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, நெற்றி சிவக்க நிலத்தில் வீழ்ந்து சிவலிங்கத்தை வணங்கினார். திண்ணனாரின் மனத்திலே திடீரென்று ஒரு கலக்கம் குடிபுகுந்தது. அவரது பிஞ்சு மனத்திலே ஒரு கேள்வி பிறந்தது. கரடியும், வேங்கையும், கடும்புலியும், வாழும் இக்கொடிய கானகத்தில் குடுமித் தேவர், துணை எதுவுமின்றித் தனித்து இருக்கிறாரே ! வனவிலங்குகள் வந்து என் எம்பிரானுக்கு ஏதாகிலும் துன்பத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? என்னால் அக்கொடுமையைக் கண்டுகொண்டு எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் ? இப்படி தமக்குள் எண்ணிப் பார்த்த திண்ணனார், தாங்க முடியாத வேதனையால் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டார், அவரது கையில் இருந்த வில், தானாக நழுவி நிலத்தில் வீழந்தது. அப்பொழுது திண்ணனார் இறைவனின் திருமேனியில் பச்சிலையும், நீரும் இருப்பதைப்பார்த்து, என் ஐயனை இப்படியெல்லாம் செய்தவர் யாராக இருக்கலாம் என்று தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். உண்மையை அறிய விரும்பிய திண்ணனார் இதே கேள்வியை நாணனிடம் கேட்டார். நாணன் திண்ணனாரை நோக்கி தலைவா ! இதெல்லாம் யாருடைய வேலை என்பதை நான் நன்றாக அறிவேன் முன்னொரு முறை, நான் உங்கள் தந்தையுடன் இக்கோவிலுக்கு வந்திருந்தேன். அது சமயம் பார்ப்பனர் ஒருவர் இக்குடுமித் தேவருக்குப் பச்சிலையிட்டு நீரை வார்த்துச் செல்வதைக் கண்டேன். இன்றும் அவர்தான் இவ்வாறு செய்திருத்தல் வேண்டும் என்றான்.
நாணன் கூறியதைக் கேட்டு திண்ணனார் இவ்வாறு செய்வதுதான் குடுமித் தேவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய செய்கைகள் ஆகும் என்பதை உணர்ந்தார். தாமும் அவற்றைக் கடைப்பிடித்து அவ்வழி செல்ல முடிவுகட்டினார். ஏன் நாணா !அப்படி என்றால், நாம் அன்போடு எதைச் செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறதே ! என்று ஒன்றுமறியாப் பாலகனைப் போல் கேட்டார். திடீரென்று திண்ணனாருக்குத் தாம் இறைவனைப் பட்டினி போட்டு விட்டோமோ ? என்ற ஐயமும் எழுந்தது. உண்மையிலேயே இறைவன் பசியுடன் தான் இருப்பார் என்ற முடிவிற்கும் வந்தார் திண்ணனார். குடுமித் தேவரே ! என் இறைவனே ! நீர் இங்கு தனியாக அல்லவா இருக்கிறீர் ? உமக்குப் பன்றி இறைச்சியும், குளிர்ந்த தண்ணீரும் கொடுப்பவர் யார் ? என்று புலம்பத் தொடங்கிவிட்டார். உடனே விரைந்து சென்று, இறைவனுக்கு இறைச்சியும், தண்ணீரும் கொண்டு வரும் நோக்கோடு முன்னால் இரண்டடி எடுத்து வைத்தார். சட்டென்று எதையோ மனதில் எண்ணியவாறு ஓடிவந்து இறைவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, இந்த இடத்தை விட்டுப் பிரிந்து நான் எங்குமே போகமாட்டேன். ஒரு அடி கூட நான் நகர மாட்டேன். என் ஐயனைப் பிரிந்துருக்கவே முடியாது என்று கூறியவாறு இறைவனை விடாது அணைத்தடியே இருந்தார். அந்த இடத்தை விட்டுப் போகவே அப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. அப்படியே சென்றாலும் சற்று அடி எடுத்து வைப்பார். மீண்டும் வருவார். சிவலிங்கத் திருமேனியைத் தழுவுவார். உச்சிமோந்து நிற்பார். பேரன்போடு திரும்பிப் பார்த்து நிற்பார். மீண்டும் ஓடிச்சென்று இறைவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். இறைவனைக் கட்டித் தழுவி, குழந்தைப் போல் கொஞ்சிக் குழைவார். தாய்ப் பசுவை விட்டுப் பிரிய முடியாமல் துடிக்கும் கன்று போல், திண்ணனார் குடுமித்தேவரை விட்டுப் பிரிய முடியாமல் மனம் வாடினார். பிறை சூடிய பெருமானை நினைத்து, புலம்பிப் புலம்பி கலங்கி நின்ற திண்ணனார், பித்தனாகவே மாறிவிட்டார். இறுதியில் எப்படியோ மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இறைவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வழி நடந்தார். திண்ணனாரின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டே இருந்த நாணன், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ ? என்று மனதில் எண்ணியவாறே திண்ணனாரைப் பின் தொடர்ந்து சென்றான். திண்ணனார் பற்றற்ற பரம ஞானியைப் போல் நடந்து கொண்டிருந்தார். அவரது கால்கள்தான் நடந்து கொண்டிருந்தனவே தவிர, அவரது எண்ணமெல்லாம் காளத்திமலைக் கோயில் மீதுதான் இருந்தது.
பொன் முகலி ஆற்றைக் கடந்து, காடன் எதிரில் வந்து நின்றதுகூட அவரது உணர்வுக்கு அப்பாற்பட்ட செயலாகவே இருந்தது. அந்த அளவிற்கு அம்பலத்தரசரின் அருள் கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தார் திண்ணனார். திண்ணனாரைப் பார்த்த காடன், அன்போடு தலைவரை எதிரில் வந்து தொழுதான்.நாணன் அவனிடம், குடுமித்தேவரை நம் தலைவர் உடும்புப் பிடியாக அல்லவா பிடித்துக்கொண்டு விட்டார் ! இப்போது இங்கு வந்திருப்பது கூட வீட்டிற்கு போவதற்காக அல்ல; குடுமித்தேவருக்குப் பன்றி இறைச்சியைப் பக்குவப்படுத்திக் கொண்டு போவதற்காகத்தான். தெய்வ மயக்கம் தலைக்கேறிக் குடுமித்தேவரோடு ஐக்கியமாகிவிட்டார் என்று கூறினான். நாணன் மொழிந்ததைக் கேட்டு காடன் நிலை குலைந்தான். நமக்கெல்லாம் தலைவராக இருக்கும் இவர் எதனால் இப்படி மாறிவிட்டார் ? என்று தனக்குள் வேதனையோடு கேட்டுக் கொண்டான். நாணனும், காடனும், திண்ணனாரிடம் நாட்டிற்குப் புறப்படலாம் என்று பல தடவைகள் கேட்டனர் ! திண்ணனார் மவுனமாகவே இருந்தார்.இறைவனின் அருள் வெள்ளத்திலே மூழ்கிய திண்ணனார் இவர்களது கூற்றையெல்லாம் சற்றும் செவி சாய்த்துக் கேட்காது இறைச்சியைப் பக்குவப்படுத்து வதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அம்பினால் பன்றியைக் கிழித்து இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டினார். அவற்றைக் நெருக்கமாக அம்பிலே கோர்த்து, நெருப்பில் நன்றாகக் காய்ச்சித் தக்கபடி பக்குவமாகச் சமைத்தார்.அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துப் பார்த்தார். வாய்க்குச் சுவையாக இருந்த நல்ல இறைச்சித் துண்டுகளை எல்லாம் தேக்கிலையால் செய்த தொன்னையிலே எடுத்துக் கொண்டார்.திண்ணனாரின் இச்செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த காடனுக்கும், நாணனுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. நாகனையும், தேவராட்டியையும் அழைத்து வந்து தக்க முடிவு காணலாம் என்ற எண்ணத்தோடு, திண்ணனாரிடம் கூடக் கூறலாம் புறப்பட்டனர். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இறைவன் அன்பு மயக்கத்தில் ஐம்புலனையம் ஒருமைப்படுத்தித் தம்மை மறநந்திருந்த திண்ணனார், இவர்கள் பேசியதையும் கவனிக்கவில்லை; இவர்கள் சென்றதையும் கவனிக்கவில்லை. திண்ணனார் தொன்னையில் பன்றி இறைச்சியை நிரப்பிக் கொண்டார். இறைவனை நீராட்டுவதற்காக பொன் முகலி நீரை வாயில் நிறைய முகந்து கொண்டார். பூசிப்பதற்குத் தேவையான நறுமலர்களைக் கால்களினால் பறித்து வந்து தலைமீது ஏந்திக் கொண்டார். ஒரு கையிலே வில், மற்றொரு கையிலே ஆற்றுநீர், தலையிலே மலர்கள், இதயத்திலே இறைவனைப் பற்றிய சிந்தை ! இப்படியாக, சிவ வழிபாட்டிற்குப் புறப்பட்ட திண்ணனார், காளத்தி மலையை நோக்கி வேகமாக ஓடினார். சிவலிங்கப் பெருமானின் திருச்சன்னிதானத்தை அடைந்தார்.
முதல் வேலையாக அரசார் திருமேனியிலிருக்கும் மலர்களையும், பச்சை இலைகளையும் செருப்புக் காலால் அகற்றினார். வாயிலிருந்த பொன் முகலி ஆற்று நீரை ஆண்டவன் மீது உமிழ்ந்தார். இதயத்திலுள்ள எல்லையில்லா அன்பை அரனார் மீது சொரிவதுபோல தலைமீது சுமந்து வந்து நறுமலர்களை இறைவன் மீது பொழிந்தார். கையில் கொண்டு வந்திருந்த ஊன் நிறைந்த தொன்னையை தெய்வத்தின் திருமுன் பயபக்தியோடு வைத்தார், தேவரும், பூதகணங்களும் முனிவரும் போற்றி வணங்கும் மறைமுதல்வன், முன்னால் வைத்த இறைச்சியை, திருவமுதூட்டச் சித்தம் கொண்டார் திண்ணனார்.ஐயனே ! இந்த இறைச்சியை அம்பிலே கோர்த்து, நன்றாக நெருப்பிலிட்டுப் பக்குவமாகச் சமைத்துள்ளேன். அதிலும் நானே நாவால் சுவைத்துப் பார்த்துச் வையுள்ள இறைச்சியை மட்டும் தங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எம்பெருமானே ! இந்த ஏழையின் ஆசையைப் பூர்த்திசெய்யத் திருவமுது செய்து அருளவேண்டும் என்று மொழிந்தவாறே, ஊனை இறைவனுக்கு அன்போடு ஊட்டத் தொடங்கினார் திண்ணனார். உலகமெங்கும் கங்குல் அரசன் தனது ஆட்சியைத் தொடங்கினான். திண்ணனாருக்குப் பயம் ஏற்பட்டது. ஏற்பட்ட பயமோ தம்மைப்பற்றி அல்ல ! தமது அன்பு அணைப்பிலே அழுந்தி நிற்கும் இறைவனைப் பற்றித்தான்.இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத் துனன்புறுத்தக்கூடுமோ? என்ற பயத்தால் கலங்கிய திண்ணனார், செவ்விய அன்பு தாங்கிய திருக்கையில் வில்லைத் தாங்கிக் காளத்தியப்பரின் அருகினிலேயே அசையாமல் இரவெல்லாம் கண் இமைக்காமல் நேசமுறக் காவல் காத்து நின்றார். மூங்கில்கள் சொரியும் முத்துக்களின் ஒளியாலும், பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மாணிக்கக் கற்களின் பேரொளியினாலும் ஒளி வீசும் சோதி மரங்களின் விளக்கத்தாலும், குரங்குகள் பொதும்பில் அவைகட்கு விளக்காக வைத்த மணிவிளக்குகளின் ஒளியினாலும், ஐம்புலன்களை அடக்கிய முனிவர்கள்பால் எழும் அரிய பெரிய ஜோதி மயத்தாலும் எங்கும் ஒளிச்சுடர் படர்ந்த வண்ணமாகவே இருந்தன. இருள் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன. வேள்விச் சாலைகளில் அந்தணர்களின் வேதபாராயணம் ஒலித்தன. ஆலயங்களில் காலை முரசம் முழங்கின. செங்கதிரோன் குணதிசை எழுந்து தனது விரிக்கதிர்களைப் பாரிலே பரப்பினான். அவனது செம்மையான கதிர்கள் திண்ணனார் மீது பட்டன. உறங்காமல் காவம் புரிகின்ற பக்திச் செம்மல் இறைவனைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி கொண்டார். அப்பொழுது அவரது மனதில் இறைவனுக்குத் திரும்பவும் பசி எடுக்குமே! அதற்குள் விரைந்து சென்று இறைச்சியைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினார். வேகமாகப் புறப்பட்டார்.
திண்ணனார் திருக்கோயிலை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கம்போல் பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் வழிபாடு செய்வதற்காக மலரும் நீரும் நறுமணப் புகைப்பொருளும் எடுத்து வந்தார். உள்ளே வந்த அந்தணர் இறைவன் திருமுன்னால் இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடப்பதைக் கண்டு பதறினார். ஐயையோ ! இத்தகைய இழிவுச் செயல்களைச் செய்தவர் எவரோ ? என்று நிலத்தில் வீழ்ந்து அலறினார். செய்வதறியாது திகைத்தார். கலங்கினார். வேடர்குலத்தவர்தான் இத்தகைய கொடிய பாதகச் செயல்களைச் செய்திருக்க வேண்டும் ! என்று மனதில் எண்ணியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். பொன் முகலிக்குச் சென்று நீராடித் திரும்பி வந்தார் அந்தணர். என்றும் போல் வேதம் ஓதி சைவாகம முறைப்படி இறைவனை நீராட்டினார். மலரிட்டு நறுமணப் புகை காட்டி வழிபட்டார். மனவேதனையோடு தமது வீட்டிற்குத் திரும்பினார். காளத்திமலையை விட்டுப் புறப்பட்ட திண்ணனார். அரனாருக்குப் பலவகை விலங்குகள் மாமிசத்தைச் சமைத்து அமுதூட்ட எண்ணினார். அதற்காக மான், பன்றி, காட்டுமான் முதலியவற்றை வேட்டையாடினார் திண்ணனார். அதன்பிறகு, முந்தைய நாள் போல், அவற்றை அம்பிற் கோர்த்து தீயிலிட்டு வதக்கி எடுத்தார். சுவைத்துப் பார்த்துக் தொன்னை நிறையச் சேர்த்துக் கொண்டார். தேன் அடைகளை பிழிந்து ஊனை கலந்தார். தலையில், மலரையும், வாயில் நீரையும் எடுத்துக் கொண்டு காளத்தியப்பரின் பசியைப் போக்கப் புறப்பட்டார் திண்ணனார். ஆலயத்தை அடைந்த திண்ணனார் இறைவன் முன்னால், பச்சிலையும், தண்ணீரும் இருப்பது கண்டு திகைத்தார். முன்போலவே அவற்றைச் செருப்பு கால்களால் சுத்தம் செய்தார். வாயில் இருந்த தண்ணீரை உமிழ்ந்து இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தலையிலிருந்து மலரை உதிர்த்து அர்ச்சனை புரிந்தார். அன்போடு அமுதூட்டி உளம் மகிழ்ந்தார். இப்படியாக தினமும் திண்ணனாரும், சிவகோசரியாரும் மாறி மாறி சிவபூஜை செய்து வரலாயினர்.திண்ணனாரின் ஊன் அமுதும் அன்பும் கலந்த பூசையும், சிவகோசரியாரின் சிவாகமமுறை வழிபாடும் நாள்தோறும் இடைவிடாமல் நடந்த வண்ணமாகவே இருந்தன. இதற்குள், நாணனும், காடனும் ஊருக்குத் திரும்பி நாகனிடம், திண்ணனாரின் நிலையைப் பற்றி விளக்கிக் கூறினர். நாகன் அரவம் தீண்வினாற்போல் துடித்தான். மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று அஞ்சி நடுங்கினான். நாகன் தேவராட்டியையும், தத்தையயும் அழைத்துக் கொண்டு, திண்ணனாரைப் பார்க்கக் காளத்தி மலைக்கு புறப்பட்டான். திண்ணனார் குடுமித்தேவரை அணைந்த வண்ணம் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த நாகனும், தத்தையும் திண்ணனாரிடம், பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். பழகிப் பார்த்தார்கள். அவரைப் பிடித்திருக்கும் சாமிப் பைத்தியம் மட்டும் விட்ட பாடில்லை என்பதை உணர்ந்து வருந்தினார்கள். தேவராட்டிøயும் முயற்சித்துத் தோல்வியுற்றாள். நாகனும் தத்தையும் மனம் வருந்தினர். மகனைத் தன்னோடு அழைத்துச் செல்வது என்பது இயலாத காரியம் என்பதைத் திடமாகக் கொண்டனர். இறைவனது கருணைக் கயிற்றிலே கட்டுண்ட திண்ணனார் இவர்கள் முன்னால் வெறும் ஜடமாகவே காணப்பட்டார். அவர்கள் திண்ணனாரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று வருத்தத்துடன் வந்த வழியே திரும்பினார்கள். குடுமித்தேவருக்கு வேடர் வழிபாடும், வேதியர் வழிபாடும் நான்கு நாட்களாகக் கலந்து கலந்து நிகழலாயின. ஐந்தாம் நாள் வந்தது. அன்றும் வழக்கம்போல், திண்ணனார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் வந்த சிவகோசரியார் இறைவன் முன்னால் தினமும் காலை தான் வரும்பொழுதெல்லாம் இறைச்சி சிதறிக் கிடப்பதை எண்ணி மனம் தாளாமல் இறைவனிடம் இறைஞ்சினார்.
எம்பிரானே ! தம்பிரானே ! திருக்காளத்தி அப்பனே ! அபச்சாரம். தினம் தவறாது எலும்பையும் இறைச்சியையும் உமது திருமுன்னால் வாரி இறைத்து மாசுபடுத்துவது இன்னாரென்று யான் அறியேனே !தேவரீர் ! திருஉள்ளம் கனிந்து இத்தகைய கொடுமையை இனியும் நேராத வண்ணம் எம்மைக் காத்தருள வேண்டும் என்று பரமனிடம் பிரார்த்தித்தபடியே வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அன்றிரவு அவரது கனவில் செஞ்சுடர் வண்ணர் எழுந்தருளினார்.இச்செயலை யாரோ வேடுவன் வேண்டுமென்றே, என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறான் என்று மட்டும் எண்ணிவிடாதே. அவனது வடிவமெல்லாம் எப்பொழுதும் நம் பக்கம் அன்பு செலுத்தும் தன்மையானதே.அவனுடைய அறிவும் உணர்வும் நம்மை அறியும் அறிவே ! அவனுடைய செயல் ஒவ்வொன்றும் நமக்கு இனிமை பயக்கக்கூடியதாகும். அவனது செருப்புக் கால்கள் என் மீது தேய்த்துச் சுத்தப்படுத்தும் போது எனக்கு மழலைகளின் சேவடிகள் தடவிச் செல்வது போன்ற இன்பப் பெருக்கை ஏற்படுத்துகிறது. கங்கை, காவிரி முதலிய தூய நதிகளின் நீரைவிடத் தூய்மையான அவன் தனது வாயினின்றும் உமிழ்கின்ற திருமஞ்சன நீர். அவனது முடியிலிருந்து உதிர்ந்து விழும் நறுமலர்கள், அவன் எம்மீது கொண்டுள்ள உயிருக்கு உயிரான அன்பு மலர்ந்து, நம்மீது நழுவி விழுவதைப் போலாகும், அம்மலர்களுக்குத் தேவதேவாதியர்கள் இடும் பாரிஜாத மலர்கள் கூட ஒவ்வா. அவன் ஊட்டும் இறைச்சி மறைவிதிப்படி அளிக்கும் அவிர்பாகத்தைவிடச் சிறந்ததாகும். வேத முனிவர்கள் ஓதும் தோத்திர நாமங்களை விட, அவன் அகம் குளிர அன்புருகிக் கூறும் மொழிகளே மிகமிக நல்லவை; எனக்கு இன்பம் தரத்தக்கவை. அவனது இத்தகைய உயர்ந்த அன்புச் செயலை உனக்குக் காட்டுகிறேன். இதற்காகக் கலங்காதே என்று திருவாய் மலர்ந்தார் எம்பெருமான் ! சிவகோசரியார் கனவு கலைந்து திடீரென்று விழித்தெழுந்தார். எம்பெருமானைப் போற்றி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதன் பின்னர் உறக்கம் எப்படி வரும் ! கனவில் கண்ட பெருமானின் திருக்கோலத்தை எண்ணியபடியே விடியும்வரை விழித்திருந்தார். அன்று ஆறாம் நாள் ! வழக்கம்போல் திண்ணனார் வேட்டைக்குப் புறப்பட்டார். அந்தச் சமயத்தில் அந்தணர் மன நிறைவோடு திருக்கோயிலுக்கு வந்தார். வழக்கப்படி வேதாகம வழிபாடுகளைச் செய்தார். அதன் பிறகு இறைவன் கனவில் எழுந்தருளி மொழிந்ததற்கு ஏற்பச் சிவலிங்கத்தின் பின்புறமாக ஓரிடத்தில் மறைந்து கொண்டார். வழக்கம்போல், தொன்னையில் இறைச்சியும், தலையில் நறுமலரும், வாயில் பொன்முகலி ஆற்றுத் தெளிந்த நீரும் எடுத்துக் கொண்டு திண்ணனார் திருச்சன்னிதிக்குள் வந்தார். 

 திண்ணனாரின் பக்தியை உலகோர்க்கு உணர்த்தவும், இறைவன் மீது கொண்டுள்ள அன்பை சிவகோசரியாருக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் வேண்டி குடுமித் தேவர், அந்த ஆனந்தமலை மீது ஓர் அற்புத விளையாடலைத் தொடங்கினார். எம்பெருமான், தமது சிவலிங்கத் திருமேனியில் வலக்கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைப் போல் காட்டினார்.

 சிவபெருமானுடைய திருவிழிகளிலிருந்து குருதி கொட்டுவது கண்டு மதிமயங்கிய திண்ணனார் செயலிழந்தார். வாயிலிருந்த பொன்முகலியாற்று நீர் கீழே விழுந்து சிதறியது. வில்லும் கீழே நழுவின. குடுமியில் சுமந்து வந்த நறுமலர்கள் சோர்ந்தன. அருள் மிகுதியால் நிலை தளர்ந்த திண்ணனர் பதைபதைத்துக் கீழே விழுந்தார். அவரது உள்ளமும், உடலும் நடுங்கியது. நடுக்கத்தால் உடல் வியர்த்தது. அவர் கண்ணீர் வடித்தார் ! கதறினார் ! திடுக்கிட்டு எழுந்தார். எம்பெருமானின் குருதி வழியும் திருக்கண்ணை தமது கையால் துடைத்தார். குருதி மட்டும் நின்றபாடில்லை. செய்வதறியாது, செயல் மறந்து நிலத்தில் வீழ்ந்தார். மீண்டும் எழுந்தார்.எம்பெருமானுக்கு இத்தகைய கொடிய துன்பத்தை செய்தது யார்? காட்டு விலங்குகளானாலும் சரி, மாறாக வேடர்கள் ஆனாலும் சரி, என் ஐயனுக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்ததை மட்டும் என்னால் பொறுக்கவே முடியாது. இப்பொழுது பழி வாங்கி வருகிறேன் என்று கர்ஜித்த திண்ணனார் கோபத்துடன் எழுந்தார். வில்லும் அம்பும் எடுத்தார். வில்லில் நாணேற்றி குன்றின் சாரலில் அங்குமிங்குமாக நெடுந்தூரம் தேடித் தேடி அலைந்தார்.

 தேடிய இடங்களிலெல்லாம் விலங்குகளையோ வேடர்களையோ காணாது வேதனையோடு திரும்பி வந்தார்.எம்பெருமானின் இரத்தம் சிந்தும் விழிகளைப்ப பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தார். குடுமித்தேவரை இறுகக் கட்டித் தழுவினார். அன்பும் அருளும் இணைந்தன. பக்தியும், சக்தியும் கலந்தன.வேடர்கள் மூலிகைகளைக் கொண்டு புண்களை ஆற்றுவது திண்ணனார் நினைவிற்கு வந்தது. உடனே காளத்தி மலை அடிவாரத்திற்குச் சென்று தமக்குத் தெரிந்த சில பச்சிலை மூலிகைகளைப் பறித்து வந்தார். அப்பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாற்றை இறைவன் திருவிழிகளில் பிழிந்தார். அப்படியும் பெருகி வந்த இரத்தம் மட்டும் சற்றுகூட நிற்கவே இல்லை.அந்த சமயத்தில், ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற ஆன்றோர்களின் சித்தாந்த மொழி அவரது சிந்தைக்கு எட்டியது.எம்பெருமானுடைய விழிக்கு நேர்ந்த விபத்தைத் தீர்ப்பதற்கு, தம்முடைய விழிகளில் ஒன்றைத் தோண்டி எடுப்பது இரத்தம் சிந்தும் இறைவனின் திருவிழிகளில் வைப்பது என்ற கருத்தினைக் கொண்டார் திண்ணனார். சற்றும் தாமதிக்காமல் கூரிய அம்பினால் தமது வலக்கண்னைத் தோண்டி எடுத்தார். காளத்தி அப்பனின் ரத்தம் வழியும் வலக்கண்ணில் அப்பினார் திண்ணனார். அக்கண்ணில் இருந்து ரத்தம் வழிவது நின்றது. திண்ணனாரின் கண்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அவர் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. வேதனையைப்பற்றி சற்றுகூட எண்ணிக் கதறவில்லை. தாம் தக்க சிந்தனையோடு செய்த செயல் பரமனின் கண்களைக் குணப்படுத்திவிட்டதே என்ற களிப்பில் மலையை ஒத்த தமது தோள்களைத் தட்டிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். 

திண்ணனாரின் தெளிந்த பேரன்பின் பெருக்கினை மேலும் சோதிக்க தொடங்கிய சிவனார். தமது இடக்கண்ணிலிருந்தும் ரத்தம் வழியுமாறு செய்தார்.
ஆனந்தக் கூத்தாடிக் களித்து நின்ற திண்ணனார் இறைவனின் இடக்கண்ணிலிருந்து ரத்தம் பெருகி வருவது கண்டு, அப்படியே அசைவற்று நின்றார். கண்ணுக்குக் கைகண்ட மருந்தைக் கண்ட பின்னர் திண்ணனார் எதற்காக கண்ட கண்ட மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடி அலையப் போகிறார் ! அக் கண்ணிலிருந்து வரும் இரத்தத்தையும் தடுத்து நிறுத்த அப்பொழுது தமது மறுகண்ணையும் அம்பினால் தோண்டி எடுத்து அப்புவது என்ற முடிவிற்கு வந்தார். மறுகண்ணையும் எடுத்துவிட்டால், இறைவனது கண் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமே என்று நினைத்து தமது காலை, இறைவனின் குருதி கொட்டும் இடக் கண்ணருகே பலமாக ஊன்றிக் கொண்டார்.அம்பை எடுத்தார். அம்பு எடுத்த அன்பர், காளத்தியப்பரை அன்பின் பெருக்கிலே ஒருமுறை பார்த்தார். இந்தக் கண்ணையும் பறித்து இறைவனுக்கு வைத்து விட்டால் பிறகு இறைவனைக் கண்ணால் பார்க்கவே முடியாதே - அன்பு வடிவமான இறைவனின் அருள் முகத்தைக் காணவே முடியாதே ? என்று எண்ணினாரோ என்னவோ, இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.பார்த்துப் பார்த்து மனம் உருகினார்.இனிமேல் என்றும், எப்பொழுதும், ஞானக்கண்களால் இறைவனைக் கண்டுகளிக்கப் போகும் திண்ணனார். தமது ஊனக் கண்களைப் பற்றி கவலைப்படவில்லை. அம்பை எடுத்தார். இடக்கண்ணில் ஊன்றி கண்ணைத் தோண்டப் போனார். இதற்கு மேல் காளத்தியப்பர். தமது அன்புத் தொண்டனைத் துன்புறுத்த விரும்பவில்லை. அருள் வள்ளலார், திண்ணனாரின் அன்பிற்கு அடிமையானார்.

 அன்பர்களைக் காக்கும் அம்பத்தரசன் - கருணைக் கடலான சந்திரக்காலாதரன் - வேதமுதல்வன் திண்ணனாரைத் தடுத்தாட் கொண்டார். எம்பெருமான் தமது திருக்கையால் திண்ணனாரின் கரத்தைப் பற்றினார். 

நிற்க கண்ணப்ப ! நிற்க கண்ணப்ப ! அன்புருவே நிற்க !  

என்று தமது அமுத வாக்கால் திருவாய் மலர்ந்து அருளினார் எம்பெருமான்.தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். ஆலயம் எங்கும் புத்தொளி பிறந்தது. வேதம் முழங்கியது. திண்ணனார் இறைவனின் அருளிலே அன்பு வடிவமாய், பேரின்பப் பெருக்கெடுத்து நின்று கொண்டிருந்தார்.இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவகோசரியார் திண்ணனாரின் பக்திக்கு தலை வணங்கினார். இறைவன் திருவருளினாலே திண்ணனார், இழந்த கண்ணைப் பெற்றார். கண் பெற்றதோடு கண்ணப்பர் என்ற திருநாமத்தையும் பெற்றார்.கண்ணப்பரின் உண்மையான பக்தியையும், இறைவனின் திருவருளையும் என்ணிப் பார்த்தார் அந்தணர். ஆயுள் எல்லாம் அரனாரை வழிபட்டேன்; என்னால் அவரது அருளைப்பெற முடியவில்லை. ஆறுநாள் பூஜையிலே ஆண்டவனின் அருகிலேயே இருக்கும் இன்பப் பேற்றினைப் பெற்றார் திண்ணனார். அதற்குக் காரணம் வெறும் பூஜை மட்டுமல்ல ! உண்மையான அன்புதான். அன்வே சிவமானார். அன்பில்லாத வழிபாட்டால் ஒரு காரியமும் நடக்காது. இறைவனின் அருளைப் பெறவும் முடியாது.இம்மையில் யாம் முக்தி பெற, இனிமேல் காளத்தியப்பரோடு கண்ணப்பரையும் சேர்த்து வழிபடுவதே சிறந்தது ! என்று உறுதிபூண்டார் வேதியர். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அருந்தவத்தோர்க்கும் கிட்டாத பரம்பொருளாகிய எம்பெருமான் திருவாய் மலர்ந்து, ஒப்புயர்வற்ற கண்ணப்பா ! நீ எமது வலப்பக்கத்திலே எப்பொழுதும் நிற்பாயாக ! என்று திருவருள் புரிந்தார்.திண்ணனார் கண்ணப்பர் ஆனார். கண்ணப்பர் பரமனுக்குக் கண்கொடுத்து பக்திக்குக் கண்ணாக விளங்கினார்.

நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே.
                                                - திருத்தொண்டர் திருவந்தாதி.12


मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते
गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३॥

                  - श्रीशिवानन्द लहरी

மார்கா³வர்திதபாது³கா பஶுபதேரங்க³ஸ்ய கூர்சாயதே
க³ண்டூ³ஷாம்பு³னிஷேசனம் புரரிபோர்தி³வ்யாபி⁴ஷேகாயதே ।
கிஞ்சித்³ப⁴க்ஷிதமாம்ஸஶேஷகப³லம் நவ்யோபஹாராயதே
ப⁴க்தி: கிம் ந கரோத்யஹோ வனசரோ ப⁴க்தாவதம்ஸாயதே ॥ 63॥

                   - ஶ்ரீஶிவானந்த³ லஹரீ

mArgAvartitapAdukA pashupatera~Ngasya kUrchAyate
gaNDUShAmbuniShechanaM puraripordivyAbhiShekAyate |
ki~nchidbhakShitamAMsasheShakabalaM navyopahArAyate
bhaktiH kiM na karotyaho vanacharo bhaktAvataMsAyate || 63||

                    - shrIshivAnanda laharI
The way faring sandals become the kusa crown of Pasupathi,
The gargled mouthful of water become the holy water of bath ,
To him who destroyed the three cities,
The just tasted pieces of the remaining meat ,
Become the holy offering to the Lord,
And wonder of wonders,the hunter who lives in the forest
Becomes the king of devotees.
What is there in this world that devotion to the Lord cannot do?

(This sloka refers to the devotion shown by Kannappa a hunter
devotee of Lord Shiva.In the forest he used to remove his sandals and place it
on the top of the idol, bring water in his mouth to bathe the idol and offer to the lord
the meat pieces which he found were tasty.)