Monday, 7 March 2016


மஹா சிவராத்ரி ( 7-3-2016 )






சிந்திக்காமலே பல பெற்று வாழ்கிறோம்
சிந்தித்து, உணர்ந்து, பெற்றால் கேட்க்கவா வேண்டும்
சிவராத்திரி என்றால் அதை மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியை மட்டுமே குறிக்கும் என கருதுகிறார்கள். உண்மையில், மாதத்திற்கு ஒரு சிவராத்திரி வரும். இதை மாத சிவராத்திரி என்பர். இதுதவிர பட்சராத்திரி, யோக சிவராத்திரி ஆகியவையும் வருகின்றன. அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
பட்ச சிவராத்திரி:
 தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து 15 நாட்கள் தொடர்ந்து வருவது பட்ச சிவராத்திரி எனப்படும். இந்த நாட்களில் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று பகலில் சாப்பிடாமலும், இரவில் கண்விழித்தும் விரதம் இருந்து மறுநாள் அமாவாசையன்று விரதத்தை முடிப்பது பட்ச சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி:
 24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகையாகப் பிரித்தார்கள். ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். 60 நாழிகைக்கு 1440 நிமிடம். ஒருநாளுக்கு 1440 நிமிடம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* இதில் சூரிய உதயம் முதல் இரவு வரை அமாவாசை திதி இருந்தால் அந்தநாள் யோக சிவராத்திரி.
* இதுபோல திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரி தான்.
* திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் (அதிகாலை பொழுது) அமாவாசை திதி அரை நாழிகை (12 நிமிடம்) இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படும். சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.
* யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால் அது மூன்று கோடி மகா சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி விரதங்களை அனுஷ்டித்ததற்கு சமமாக இருக்கும்.
மாத சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தியநாள் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினம் மாத சிவராத்திரியாக இருக்கும்.
மகா சிவராத்திரி :
மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி தினம் மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம்
யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காக்கும் சிவனுக்காக ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி இது.


மகாசிவராத்திரி இரவில் நான்கு ஜாம காலத்தில் விடிய விடிய சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். அது குறித்த விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள் :
முதல் யாமம் :
◾வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
◾அபிஷேகம் - பஞ்சகவ்யம்
◾அலங்காரம் - வில்வம்
◾அர்ச்சனை - தாமரை, அலரி
◾நிவேதனம் - பருப்பன்னம்
◾பழம் - வில்வம்
◾பட்டு - செம்பட்டு
◾தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
◾மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
◾புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
◾ஒளி- புட்பதீபம்
இரண்டாம் யாமம் :
◾வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
◾அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
◾அலங்காரம் - குருந்தை
◾அர்ச்சனை - துளசி
◾நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
◾பழம் - பலா
◾பட்டு - மஞ்சள் பட்டு
◾தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
◾மணம் - அகில், சந்தணம்
◾புகை - சாம்பிராணி, குங்குமம்
◾ஒளி- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம் :
◾வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
◾அபிஷேகம் - தேன்,பாலோதகம்
◾அலங்காரம் - கிளுவை, விளா
◾அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்
◾நிவேதனம் - எள்அன்னம்
◾பழம் - மாதுளம்
◾பட்டு - வெண் பட்டு
◾தோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி
◾மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
◾புகை - மேகம், கருங் குங்கிலியம்
◾ஒளி- ஐந்துமுக தீபம்
நான்காம் யாமம் :
◾வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
◾அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
◾அலங்காரம் - கரு நொச்சி
◾அர்ச்சனை - நந்தியாவட்டை
◾நிவேதனம் - வெண்சாதம்
◾பழம் - நானாவித பழங்கள்
◾பட்டு - நீலப் பட்டு
◾தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
◾மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
◾புகை - கர்ப்பூரம், இலவங்கம்
◾ஒளி- மூன்று முக தீபம்
மகா சிவராத்திரி பற்றிய ஐதீகங்கள்  :
* மகா பிரளயத்தில் உலகம் அழிய... மீண்டும் உலகைப் படைக்க வேண்டி, உமையவள் சிவனாரை நோக்கி கடுந்தவமிருந்தது இந்தத் திருநாளில்தான்!
* ஈசன், லிங்கத்தில் பிரசன்னமானது இந்த நாளில்!
* அடி- முடி தேடிய விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சிவனார் காட்சி தந்த நன்னாளும் இதுவே!
* பாற்கடலில் கடையும்போது வெளியான விஷத்தை சிவபெருமான் சாப்பிட... அதை விழுங்காதபடி தடுத்தார் உமையவள். இதனால், ஈசனுக்கு நஞ்சுண்டன், நீலகண்டன் எனும் திருநாமங்களைப் பெற்றார். அந்த நாளும் மகாசிவராத்திரிதான்!
* அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் எனும் அஸ்திரத்தைப் பெற்றது இந்த நாளில்!
* பகீரதன் ஒற்றைக் காலில் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்!
* திருக்கடையூர் திருத்தலத்தில்... மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த அற்புதமான நாளும் இதுவே!
* கண்ணப்ப நாயனாரின் கதை தெரியும்தானே. சிவனாருக்காக, தன் கண்ணையே பெயர்த்தெடுத்துத் தந்தாரே... அது இந்த நாளில்தான்!
* ஸ்ரீபார்வதிதேவி தவமிருந்து வழிபட்டு சிவனில் பாதியைப் பெற்ற புனித நாளும் மகா
சிவராத்திரியில்தான்!
- இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது.
அப்படி பட்ட நாளில் கருணையையும் திருவருளையும் போற்றி துதித்தால்
வள்ளல் கருணையை கேட்கவும் வேண்டுமோ ?????!!!!!!!!!!!!!!!!!!
ஓம் ஶிவாய நம: