Thursday, 30 January 2020

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 23

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 23

गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् ।
गुरुमन्त्रसमो नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ७९॥

கு³ருராதி³ரநாதி³ஶ்ச கு³ரு: பரமதை³வதம் ।
கு³ருமந்த்ரஸமோ நாஸ்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 79॥

gururādiranādiśca guruḥ paramadaivatam ।
gurumantrasamo nāsti tasmai śrīgurave namaḥ ॥ 79॥

பொருள் :

23. ஆதியும் அனாதியும் குருவே; பரதெய்வமும் குருவே; குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை; அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   79

Sunday, 26 January 2020

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 6

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  6

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

6. विकटः  -   விகட​:   -   VIKAṬAḤ   :-

कट वर्षावरणयोरिति धातोरनावृतेः ।
विभुत्वाद् विकटः प्रोक्तः स यस्य विगतः कटः ॥

கட வர்ஷாவரணயோரிதி தா⁴தோரனாவ்ருʼதே​: |
விபு⁴த்வாத்³ விகட​: ப்ரோக்த​: ஸ யஸ்ய விக³த​: கட​: ||

விகட​:  -  மறைப்பில்லாதவர்.

எங்கும் நீக்கமற நிரம்பியவர். அவரை மறைக்க எதனாலும் இயலாது ( கட  - மறைப்பு ).

கணேச வழிபாட்டில் குரு பரம்பரையில் மூன்றாமவர். ஆவரண தேவதைகளில் ஒருவருமாவார்.  விஷ்ணுவிற்கு ஜலந்திரனின்மனைவி பிருந்தா தேவியைக் கண்டதும் காமமேற்பட அந்தக் காமத்தில் உண்டானவன் காமாஸுரன். தவத்தால் சிவனருள் பெற்று அண்டங்கள் அனைத்தையும் வென்றான். அவனது கொடுமையிலிருந்தும் தப்ப , தேவர்கள் மயூரேசத்தில் தவமிருக்க அங்கு தோன்றியவர் விகடர். மயிலை வாகனமாகக் கொண்டவர். காமாஸுரன்  இவரது பெருமையறிந்து சரணடைந்து பக்தனானான்.

விகடர் :  ( தெய்வத்தின் குரல் )
 
அடுத்த பேர் ‘விகடர்’. அப்படிச் சொன்னாலே எல்லோருக்கும் வாரப் பத்ரிகை ஞாபகம்தான் வரும்! ஹாஸ்யத்திற்கு, பரிஹாஸம் – கேலி சிரிக்கச் சிரிக்கப் பண்ணுவதற்கு ‘விகடம்’ என்று பேர் சொல்கிறோம். அந்த ஹாஸ்யத்திலே புத்தி சாதுர்யமும் இருக்கும். ‘விகடகவி’ என்று வேடிக்கை வேடிக்கையாக வார்த்தை விளையாட்டுப் பண்ணுபவரைச் சொல்லியிருக்கிறது. அந்தப் பேரிலேயே வார்த்தை விளையாட்டு இருக்கிறது. பின்னாலிருந்து திருப்பிப் பார்த்தாலும் ‘விகடகவி’ என்றே வரும்! ஸாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுப் பண்ணுவதை ‘அகடவிகடம்’ என்பார்கள். ஏமாற்று என்றாலும் அதிலிருக்கிற ஸாமர்த்தியத்தில் ஆச்சர்யப்பட்டு சிரிக்கும் படியும் இருக்கும். விகடக் கலை என்றே இருக்கிறது. அதிலே தேர்ச்சி பெற்று ‘மிமிக்ரி’ முதலான அயிட்டங்களைக் கச்சேரியாகவே செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஸம்ஸ்கிருத டிக்ஷனரியில் ‘விகட’ என்பதற்கு அர்த்தம் பார்த்தால் ஹாஸ்யம், தமாஷ் என்று இருக்காது. கோரம், பயங்கரம் என்றுதான் போட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் ஹாஸ்யம் பண்ணுவது, சிரிக்க வைப்பது, சிரிக்கும் படியாக ஏமாற்று ஸாமர்த்தியம் செய்வது – இதெல்லாந்தான் விகடம். விதூஷகன் – ‘காமிக்’ பாத்திரமென்று இந்த நாளில் சொல்கிறார்கள் – அவன்தான் விகடன் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். டிக்ஷனரி அர்த்தப்படி ‘ப்ரதிநாயகன்’ அதாவது ‘வில்லன்’ என்று இருக்கிற பாத்திரம்தான் விகடன் – கோர ரூபத்தோடும், க்ரூரமான கார்யத்தோடும் இருப்பவன்.

ஆராய்ச்சிக்காரர்கள், “ஆதிகாலத்தில் விநாயகர் க்ரூரமான உக்ர தேவதையாகக் குரூபமாகத்தான் இருந்தார். அப்புறந்தான் அவரை ஸெளம்ய மூர்த்தியாக்கியது” என்று சொல்வதுண்டு. நமக்கு அந்த ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்! நாம் உருப்பட, நம்முடைய உயிருக்கு ஒரு நிறைவும் நல்ல வழியிலான ஆனந்தமும் பெறுவதற்கு வேண்டியது பக்திதான். நம்முடைய அலைபாய்கிற அசட்டு மனஸை இழுத்து நிறுத்தி வைத்து அதற்கு நிறைவும், ஆனந்தமும் கொடுக்கிற ஒரு மூர்த்தி கிடைத்தால்தான் நமக்கு பக்தி சுரக்கிறது. விசாலமான யானை முகமும், தொப்பை வயிறுமாக இருக்கும் விநாயக மூர்த்தியைப் பார்த்தவுடனேயே நம் மனஸுக்கு இவை கிடைத்து தன்னால் பக்தி உண்டாகிறது. இந்த ப்ரத்யக்ஷமாகத் தெரிகிற ஸமாசாரம். விக்நேச்வர மூர்த்தியைப் பார்த்தால் ஒரு குரூபியை அல்லது க்ரூர ஸ்வபாமுள்ளவரைப் பார்க்கிற மாதிரியா அருவருப்போ பயமோ ஏற்படுகிறது? கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம். ப்ரத்யக்ஷ அநுபவத்திற்கு எந்த ஆராய்ச்சியைக் கொண்டும் நிரூபணம் வேண்டாம்! ஆகையால் அறிவாளிகள் என்கப்பட்டவர்கள் நம்மை மண்டு எனறு சொன்னாலும் சொல்லிவிட்டு போகட்டும். லோக வழக்கில் ‘விகடம் பண்ணுவது’ என்றால் ஹாஸ்யம் பண்ணுவது என்று இருக்கற அர்த்தத்திலேயே நாம் விக்நேச்வரரை விகடனாக வைத்துக் கொள்வோம். அவர் நம்மை ஆனந்தமாகச் சிரிக்கப் பண்ணுகிற அழகு மூர்த்தியாக ப்ரத்யக்ஷத்தில் தெரிகிறபோது, ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பதற்காக அவர் பயமுறுத்துகிறவர், அசிங்கமாகத் தெரிகிறவர் என்று ஒப்புக் கொண்டால் அதுவும் மண்டுத்தனம் தான்.

விக்நேச்வரர் நிறைய விகடம் பண்ணுபவர். அப்பா அம்மா ஸாக்ஷாத் பார்வதீ பரமேச்வராள் ஊடல் பண்ணிக் கொண்டு கோபமும் தாபமுமாக இருக்கும்போது அவர் ஏதாவது வேடிக்கை, குறும்பு பண்ணி அவர்களை ஒன்று சேர்த்து விடுவார்.* காக்காயாகப் போய் அகஸ்தியரை விகடமாக ஏமாற்றி நமக்குக் காவேரி கிடைக்கும்படிப் பண்ணுவார். பிரம்மச்சாரியாகப் போய் விபீஷணரை ஏமாற்றி காவேரி தீரத்தில் ஸ்ரீரங்கநாதர் ப்ரதிஷ்டையாகும்படி லீலை பண்ணுவார். கோகர்ண க்ஷேத்ரத்திலே அவனுடைய அண்ணாவான ராவணனையும் இதே மாதிரி அவர் ஏமாற்றி விளையாட்டுப் பண்ணிதான் சிவலிங்கம் பிரதிஷ்டையாகும்படிச் செய்திருக்கிறார். இதெல்லாம் விகடர் பண்ணின Practical jokes – அதாவது அவர் விளையாட்டாகப் பண்ணினதே இன்னொருத்தருக்கு வினையாக முடிந்தது. ஆனாலும் ஒரு அகஸ்தியர், ஒரு ராவணன், ஒரு விபீஷணன் ஏமாந்தாலும், இந்த லீலைக்கெல்லாம் நோக்கம், இந்த லீலைகளுடைய விளைவு லோக கல்யாணம்தான். காவேரியும், ஸ்ரீரங்கநாதரும், கைலாஸ லிங்கமும் யாரோ ஒரு தனி மநுஷ்யருக்கு உடைமையாக இல்லாமல் லோகம் முழுதற்கும் ப்ரயோஜனப்படுகிற விதத்தில் அவர் செய்த அருள் லீலை! விகடமாகப் பண்ணிவிட்டார்!

ॐ श्री विकटाय नमः॥
ஓம்ʼ ஶ்ரீ விகடாய நம​:॥
OṂ ŚRĪ VIKAṬĀYA NAMAḤ॥

Friday, 24 January 2020

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 22

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 22

मन्नाथः श्रीजगन्नाथो मद्गुरुः श्रीजगद्गुरुः ।
ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः ॥ ७८॥

மந்நாத:² ஶ்ரீஜக³ந்நாதோ² மத்³கு³ரு: ஶ்ரீஜக³த்³கு³ரு: ।
மமாத்மா ஸர்வபூ⁴தாத்மா தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 78॥

mannāthaḥ śrījagannātho madguruḥ śrījagadguruḥ ।
mamātmā sarvabhūtātmā tasmai śrīgurave namaḥ ॥ 78॥

பொருள் :

22. என்னுடைய நாதனே உலகத்தின் நாதன்; என்னுடைய குருவே உலகின் குரு; என்னுடைய ஆத்மாவே எல்லா பிராணிகளின் ஆத்மாவும் என்று விளக்கும், அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   78

Sunday, 19 January 2020

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 21

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 21

न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः ।
न गुरोरधिकं ज्ञानं तस्मै श्रीगुरवे नमः ॥ ७७॥

ந கு³ரோரதி⁴கம் தத்த்வம் ந கு³ரோரதி⁴கம் தப: ।
ந கு³ரோரதி⁴கம் ஜ்ஞாநம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 77॥

na guroradhikaṃ tattvaṃ na guroradhikaṃ tapaḥ ।
na guroradhikaṃ jñānaṃ tasmai śrīgurave namaḥ ॥ 77॥

பொருள் :

21. குருவைக் காட்டிலும் மேலான தத்துவம் இல்லை; குருவைக் காட்டிலும் மேலான தவம் இல்லை; குருவைக் காட்டிலும் மேலான ஞானமும் இல்லை; அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குழுவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   77

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 5

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  5

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

5.  लम्बोदरः  -  லம்போ³த³ர​:  -    LAMBODARAḤ  :-

ब्रह्माण्डालम्बनं यस्य कुक्षिर्लंबोदरस्तु सः।

ப்³ரஹ்மாண்டா³லம்ப³னம்ʼ யஸ்ய குக்ஷிர்லம்போ³த³ரஸ்து ஸ​:|

லம்போதரர் - சரிந்து தொங்குகின்ற வயிறுள்ளவர்.

பலகோடி அண்டங்களுக்கு இடமளித்துப் பெருவயிறரான ( 8. மஹோதரர் ) பின்னரும் மனநிறைவு பெறாமல் மேலும் தோன்றவிருக்கிற கோடிக்கணக்கான அண்டங்களுக்கும் இடம் தருகிற அளவில் வெற்றிடம் கொண்டிருப்பதால் வயிறு சரிந்து தொங்குவதால்  தொந்திக் கணபதி என்று செல்லமாக அழைக்கப்பெறுபவர்.

இவரும் அவதாரமாகவே வந்தவரே. சிவபெருமான் விஷ்ணுவின் மோகினி நிலையைக் கண்டு மோகித்தார். விஷ்ணு அந்நிலையை மாற்றத் தன் சுய உருவம் கொண்டார். வெகுண்ட சிவனின் கோபத்தில் உதித்தவன் குரோதாஸுரன். சுக்ரன் காட்டிய வழியில் ஸூர்யனைக் குறித்துத் தவமிருந்து அவரருளால் வலிவு பெற்று மூவுலகத்தையும் வாட்டினான்.  அவனை அடக்கக் கணேசர் எடுத்த அவதாரம் லம்போதரர். பெருமெலி ( பெருச்சாளி ) வாகனம், யானைமுகம், முக்கண்கள்,  இருபக்கங்களிலும் ஸித்தியும் புத்தியும் - குரோதாஸுரனுக்குப் பகவான் உண்மைநிலையைக் காட்டியதும் அவன் இவரைச் சரணடைந்து தன் குரோதநிலையை இழக்கிறான். இவரே ஆதிசேஷனுக்கு மகனாகத் தோன்றி மாயாஸுரனை அழித்தார்.

லம்போதரர் : ( தெய்வத்தின் குரல் )
 

அடுத்த பேர் ‘லம்போதரர்’ ‘தொங்குகிற வயிற்றுக்காரர்’ என்று அர்த்தம். ‘லம்பம்’ – தொங்குவது. ‘உதரம்’ – வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். பிள்ளையார் என்றாலே வெள்ளைக்காரர்கள் ‘Pot-bellied’ என்று அவருடைய பானை வயிற்றைத்தான் சொல்கிறார்கள். ‘பேழை வயிறும்’ என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மோதகத்தை வைத்திருப்பவர், தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற்றோடு இருக்கிறார். நல்ல நிறைவைக் காட்டுவது அது. அண்டாண்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அதுவும் அண்ட ரூபத்தில் உருண்டையாயிருக்கிறது.

மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை மா(வு) மூடியிருக்கிறது. ‘மோதகம்’ என்றால் ஆனந்தம், ஆனந்தம் தருவது. விக்நேச்வரரே அப்படிப்பட்ட ஒரு மோதகம்தான். ஆனந்தமாயிருப்பவர். அன்பு என்ற தித்திப்பான வஸ்துவை (ப்ரேமையை மதுரம் என்று சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட மதுரமான ப்ரேமையை) மற்றவர்களுக்கும் வழங்கி ஆனந்தமூட்டும் மோதகம் அவர். ‘மா’ என்றால் ஆண் யானை என்றும் அர்த்தம். மோதகத்தில் மதுரமான வெல்லப் பூர்ணத்தை மூடிக்கொண்டு மா(வுச்) சொப்பு இருக்கிற மாதிரி ப்ரேம ரஸம் நிறைந்த பூர்ண வஸ்துவான ப்ரம்மத்தின் மேல் ஆனை என்ற ‘மா’வின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு ஆனந்த ஸ்வரூபியான விக்நேச்வரர் உருவமெடுத்துக் கொண்டிருக்கிறார்! உள்ளே பரம மதுரமான அன்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டவே உருண்டைக் கொழுக்கட்டை உருவத்தில் வயிற்றை லம்போதகராக வைத்துக் கொண்டிருக்கிறார். உருண்டைக்கு ஆரம்பம், முடிவு சொல்ல முடியாது. அதனால் அது ப்ரம்மத்துக்கு ரூபகம் [உருவகம்]. அதைக் காட்ட உருண்டையான தொப்பை வயிற்றோடு லம்போதரர் என்று விளங்குகிறார்.

தொப்பையும் தொந்தியுமாக உள்ள ஒருத்தரைப் பார்த்தாலே நமக்கு ஒரு புஷ்டி, ஸந்துஷ்டி உண்டாகிறது. அதிலும் ஒரு குழந்தை அப்படி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்! எலும்பும் தோலுமாக நோஞ்சானாக உள்ள ஒருவரைப் பார்த்தால் நமக்கு இப்படி ஸந்தோஷம் உண்டாவதில்லை. ஸ்தூல சரீரம், க்ருசமான (ஒல்லியான) சரீரம் ஆகியவற்றை குணங்கள் ஸம்பந்தப்படுத்தியும் சொல்கிறோம். தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர் வஞ்சனை இல்லாதவர், அப்பாவி, வெகுளி என்று சொல்வார்கள். அதோடு, தொப்பையும் தொந்தியுமாக இருப்பவரைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. சிரிப்பாக வருகிறது. ஸுமுகரான பிள்ளையார் நாமெல்லாமும் சிரித்துக்கொண்டு ஸுமுகமாக இருக்க வேண்டுமென்றே தொப்பையப்பராக இருக்கிறார். ‘எத்தனையோ தினுஸுக் கஷ்டங்களில் மாட்டிக் கொண்டு ஜனங்கள் தின்டாடுகிறதுகளே! அவர்களுக்கு ஃபிலாஸஃபி, கிலாஸஃபி சொல்லிக் கொடுத்தால் ஏறும், ஏறாதிருக்கும். அதனால் பார்த்த மாத்திரத்தில் ஒரு வேடிக்கை விநோதமாக அவர்கள் சிரித்து மகிழும்படி நாம் இருப்போம்’ என்றும் பிள்ளையார் லம்போதரராக இருக்கிறார்.

அதிலும் குழந்தைகளுக்குத்தான் பஹு ஸந்தோஷம். தொப்பைக் கணபதியைப் பார்ப்பதில். அதற்கேற்றாற்போல் (புரந்தர) தாஸர் ஸங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும் போது பிள்ளையார் கீதத்தை “லம்போதர லகுமிகரா”  என்றே ஆரம்பித்திருக்கிறார். ‘லகுமிகரா’ என்றால் ‘லக்ஷ்மிகரா’; ஸெளபாக்கியங்களை உண்டாக்குபவர்.

ॐ श्री लम्बोदराय नमः॥
ஓம்ʼ ஶ்ரீ லம்போ³த³ரா​ய நம​:॥
OṂ ŚRĪ LAMBODARĀYA NAMAḤ॥

Sunday, 12 January 2020

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 4

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  4

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

4.  गजकर्णकः   -   க³ஜகர்ணக​:   -   GAJAKARṆAKAḤ  :-

यस्य कर्णौ गजस्येव तेनासौ गजकर्णकः।

யஸ்ய கர்ணௌ க³ஜஸ்யேவ தேனாஸௌ க³ஜகர்ணக​:|

யானையின் ( க³ஜ ) செவி ( கர்ண ) போன்ற செவி உள்ளவர். ஆகவே கஜகர்ணர் எனப்படுகிறார். பெருங்காதுகள் எப்போதும் பனைவிசிறி போல் அசைந்து கொண்டிருக்கும்.

கஜகர்ணகர் :

( தெய்வத்தின் குரல் )

நான்காவது நாமா — அடுத்த பேர் ‘கஜகர்ணகர்.’ அப்படியென்றால் ‘யானைக் காது உள்ளவர்’. கஜமுகர் என்று முகம் முழுதையும் சொல்லிவிட்டால் போதாது. அவருடைய காதும் யானைக் காதுதான் என்று பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும் என்கிறாற்போல் இப்படிப் பேர் சொல்லியிருக்கிறது.

யானைக் காதிலே அப்படி என்ன விசேஷம்?

மற்ற ஸ்வாமிக்கெல்லாம் காதைச் சுற்றிப் பெரிஸாக ஒரு கால் வட்டம் மாதிரிப் போட்டுத் தோளோடு சேர்த்தே விக்ரஹங்கள் பண்ணியிருக்கும். இந்த வட்டப் பிரபைக்கு உள்ளேயும், கிரீடத்துக்குக் கீழேயும் அந்த ஸ்வாமியின் காது எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக் கண்டு பிடிக்கும் படியே இருக்கும். அநேகமாக, பெரிசாகத் தொங்கும் குண்டலத்தை வைத்துத்தான் காதைத் தெரிந்து கொள்ள முடியும். விக்நேச்வரர் ஒருத்தர்தான் இதற்கு விலக்கு. அவருடைய யானைக் காது அவருடைய பெரிய முக மண்டலத்துக்கு ஸம அளவாக இரண்டு பக்கமும் விரிந்து விசாலமாக ப்ரகாசிக்கிறது.

நாம் பண்ணும் பிரார்த்தனையையெல்லாம், நம்முடைய முறையீட்டையெல்லாம் கேட்க வேண்டியது ஸ்வாமியின் காதுதானே? அந்தக் காது தெரிந்ததும் தெரியாமலும் இருந்தால் என்னவோபோல்தானே இருக்கிறது? கஜகர்ணகரான விக்நேச்வரர்தான் தன்னுடைய பெரிய காதை நன்றாக விரித்துக்கொண்டு மற்ற தெய்வங்களுடையதைப் போல் மண்டைப் பக்கமாக ஒட்டிக் கொள்கிற மாதிரி இல்லாமல் முன் பக்கமாக விரித்துக்கொண்டு – ‘நம் ப்ரார்த்தனைகளை நன்றாகக் கேட்டுக் கொள்கிறார்’ என்ற உத்ஸாஹத்தை நமக்குக் கொடுக்கிறார்.

மற்ற எல்லாப் பிராணிகளுக்கும் காது குழிவாகக் கிண்ணம் மாதிரி இருக்கிறது. யானைக்குத்தான் flat-ஆக விசிறி மாதிரி இருக்கிறது. கேட்கிற சப்தம் சிதறிப் போகாமல் பிடித்து உள்ளே அனுப்புவதற்காகவே மற்ற ப்ராணிகளுக்கு குழிந்து இருப்பது. யானைக்குக் கூர்மையான ச்ரவண சக்தி [கேட்கும் ஆற்றல்] இருப்பதால் சிதறாமல் பிடித்து உள்ளே அனுப்பணும் என்கிற அவசியம் இல்லை. பிள்ளையார் நம் வேண்டுதல்களை நன்றாகக் கேட்டுக் கொள்வார்.

யானை பெரிய காதை விசிறி மாதிரி ஆட்டிக் கொள்வது ரொம்ப அழகு. பிராணி வர்க்கத்திலேயே யானை ஒன்றால்தான் இப்படிக் காதால் விசிறி போட்டுக்கொள்ள முடிவது. ஏதாவது பூச்சி பொட்டை விரட்டுவதற்காக ஒரு தரம், இரண்டு தரம் வேண்டுமானால் மாடுகூடக் காதை ஆட்ட முடியுமே தவிர, யானை மாதிரி ஸதா பண்ண முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டுவதற்குக்கூட ‘ஸ்ட்ரெய்ன்’ பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைதான் அநாயாஸமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக்கொண்டே இருப்பது. ‘கஜாஸ்பாலம்’ [கஜ ஆஸ்பாலம்], ‘கஜதாளம்’ என்றே அதற்குப் பேர் கொடுத்து வைத்திருக்கிறது. தாளம் என்றால் பனை, அதாவது விசிறி. பாட்டுக்கு விரலால் போடுவதும் தாளம். ஆனை விசிறி மாதிரியுள்ள காதை ஒரே சீராகத் தாளம் போடுகிற மாதிரி அசைத்துக்கொண்டே இருக்கிறது!

மனிதர்கள் யானை மாதிரிக் காதை ஆட்டுவது சிரம ஸாத்தியமான ஒரு பெரிய வித்தை. அதைத்தான் “கஜகர்ணம் போட்டாலும் நடக்காது” என்று சொல்கிறோம். ‘கஜகர்ணம்’ என்பதை ‘கஜகரணம்’ என்று நினைத்துக்கொண்டு யானை மாதிரி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காதாக்கும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். அது ஸரியில்லை. யானை மாதிரி காதை ஆட்டுகிற வித்தைதான் ‘கஜகர்ணம்’.

‘கஜகர்ணம், கோகர்ணம் போடுவது’ என்பது முழு வசனம். ‘கோகர்ணம்’ என்கிற வார்த்தையில் ‘கர்ணம்’ என்றால் காது என்று அர்த்தமில்லை. ‘கர்ண’ என்பது க்ரியா பதமாக [வினைச் சொல்லாக] வரும்போது துளைப்பது, குத்துவது என்று அர்த்தம். ஒரு மாட்டின் உடம்பில் விரலாலோ தார்க்குச்சியாலோ குத்தினால் உடனே அதன் உடம்பு முழுக்க சுழி சுழியாக அலை மாதிரி ஒரு சலனம் பரவும். இதே மாதிரி ஒரு மநுஷ்யர் பண்ணிக் காட்டுகிற அபூர்வமான வித்தைத்தான் ‘கோகர்ணம்’. கஜகர்ண வித்தையும் அதே மாதிரிதான், ஸுலபத்தில் கற்றுக் கொள்ள முடியாதது.

நமக்கு ரொம்ப சிரமமாயிருப்பதை விக்நேச்வரர் விளையாட்டாகப் பண்ணுவதை “கஜகர்ணர்” என்ற பேர் காட்டுகிறது.

யானை காதை ஆட்டுவதில் அழகு இருப்பதோடு ஒரு ‘பர்பஸும் இருக்கிறது. மதம் பிடிக்கிற காலத்தில் அதன் முகத்தில் கன்னப் பிரதேசத்தில் மத ஜலம் ஸதாவும் துளித்துக் கொண்டிருக்கும். அதற்காக ஈ, எறும்புகள் ஏகமாக மொய்க்க வரும். அதுகளை விரட்டுவதற்கு வசதியாகவே பகவான் யானைக்கு விசிறிக் காதைக் கொடுத்து, அதனால் விசிறிக் விட்டுக் கொள்ளும் திறமையையும் கொடுத்திருக்கிறார்.

விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆசார்யாள் “கபோல தான வாரணம்” என்று [கணேச பஞ்சரத்தினத்தில்] சொல்லியிருக்கிறார். ‘கபோலம்’ என்றால் கன்னம். ‘தானம்’ என்றால் மத ஜலம்.

பிள்ளையார் பெருக விடும் மத ஜலம் என்பது ஆனந்த தாரைதான், க்ருபா தாரைதான்! பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் அது. அந்த மாதூர்ய மத நீரை ருசி பார்ப்பதற்காக வண்டுகள் ஏகமாக வரும். இதையும் ஆசார்யாள் ஒரு ஸ்தோத்திரத்தில்* சொல்லியிருக்கிறார்.

“கலத்-தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்”

மத ஜலத்தை மொய்க்கும் வண்டுகளை விரட்டுவதற்காகப் பிள்ளையார் விசிறிக் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். கோபத்தில் விரட்டுவதல்ல. குழந்தை ஸ்வாமிக்கும் இது ஒரு விளையாட்டுதான். வண்டுகளும் அவரிடத்தில் இந்த விளையாட்டுக்காகத்தான் வருவது. அவருடைய தர்சனமே அவற்றுக்கு அம்ருத பானமாக இருக்குமாதலால் மத ஜலத்தைக் குடிக்க வேண்டுமென்பதில்லை. விளையாடணும், அவர் தங்களுக்கு விசிறி விடணும் என்றேதான் அதுகள் கன்னத்தண்டை வந்து மொய்க்கும். நாம் குழந்தை காதில் விளையாட்டாக ‘டுர்ர்’ என்று கத்தி அது மயிர்கூச்சலெடுப்பதைப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோமோல்லியோ? அந்த மாதிரிப் பிள்ளையாருடைய பெரிய காதிலே அதிர அடிக்கிற மாதிரி தங்களுக்கே உரிய ஜங்கார சப்தம் போட்டு வேடிக்கை பண்ணணும் என்றே வண்டுக் கூட்டம் வரும். அந்த வேடிக்கை விளையாட்டை புரிந்து கொண்டு அவரும் காதை ஆட்டி ஆட்டி அதுகளை விரட்டுகிற மாதிரிப் பண்ணுவார். அந்தக் காற்றிலே அதுகள் மாற்றி மாற்றி ஒடிப் போவதும், மறுபடி வந்து மொய்ப்பதுமாக அமர்க்களம் பண்ணும், மதஜலத்திலே விசிறிக் காதின் காற்றுப் பட்டு ஸ்வாமிக்கு ஜில்லென்று ஆனந்தமாயிருக்கும்.

ராகவ சைதன்யர் என்று ஒருத்தர் “மஹாகணபதி ஸ்தோத்ரம்” என்று செய்திருக்கிறார். அதில் மந்த்ர சாஸ்த்ர விஷயங்களெல்லாம் வருவதோடு அழகான கவிதா வர்ணனையும் அழகான வாக்கில் வருகிறது. விக்நேச்வரர் விசிறிக் காதை ஆட்டி வண்டுக் கூட்டத்தை விரட்டுவது போல விளையாடுவதை அதில் நீள நெடுக வார்த்தைகளைக் கோத்து அழகாகச் சொல்லியிருக்கிறது!

दानामोदविनोदलुब्धमधुपप्रोत्सारणाविर्भव-
त्कर्णान्दोलनखेलनो विजयते देवो गणग्रामणीः ॥ ८॥

தா³நாமோத³-விநோத³-லுப்³த⁴-மது⁴ப-ப்ரோத்ஸாரணாவிர்ப⁴வத்

கர்ணாந்தோ³லந-கே²லநோ விஜயதே தே³வோ க³ணக்³ராமணீ: ॥ 8॥

‘தான ஆமோதம்’ என்றால் மதஜலத்தின் ஸுகந்தம். ஸ்வாமி பெருக்கும் மத ஜலம் கமகமவென்று வாஸனை அடிக்கிறது. அந்த விநோதமான, அதாவது இன்பமூட்டுகிற வாஸனையை மோந்ததில் வண்டுகளுக்கு ஒரே பேராசை உண்டாகிறது. மத ஜலத்தை அப்படியே குடித்துவிட வேண்டுமென்று! ‘லுப்த மதுப’ என்றால் பேராசை கொண்ட வண்டுகள். அல்லது வாஸனையில் மயங்கிப்போன வண்டுகள் என்றும் அர்த்தம் பண்ணலாம். அந்த வண்டுகளை விரட்டணுமென்று ஸ்வாமி நினைக்கிறார். ‘ப்ரோத்ஸாரணம்’ என்றால் விரட்டுவது, விலக்குவது. இந்த நினைப்பிலிருந்து ஒரு விளையாட்டு ஆவிர்பாவமாகிறது, விளைகிறது. ‘கேலனம்’ என்றால் விளையாட்டு. என்ன விளையாட்டு! ‘கர்ணாந்தோலன கேலனம்’, ‘கர்ண ஆந்தோலனம்’ என்றால் காதை முன்னேயும் பின்னேயுமாக ஆட்டுவது.

ஊஞ்சலுக்கு ஆந்தோலம் என்று பெயர். தோலம் என்று மட்டும் சொன்னாலும் அதே அர்த்தம்தான். தோல உத்ஸவத்தைத்தான் ‘டோலோத்ஸவம்’ என்று சொல்லி ஊஞ்சல் போட்டு ஸ்வாமியை ஆட்டி ஸந்தோஷப்படுகிறோம். ‘டோலி’ கூட இதோடு ஸம்பந்தப்பட்டதுதான்.

காதை ஆட்டி வண்டை விரட்டி விளையாடும்போது விக்நேச்வரர் கூடுதலான அழகாக விளங்குகிறார். ‘விஜயதே’ – அழகாக விளங்குகிறார், வெற்றி வீரராக விளங்குகிறார். படையெடுக்கும் வண்டுக் கூட்டத்தை விரட்டியடிக்கும் வெற்றி வீரராக விளங்குகிறார்.

இங்கே பிள்ளையாரை ‘கணக்ராமணி’ என்ற பெயரில் குறிப்பிட்டிருக்கிறது. ‘க்ராமணி’ என்றால் ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைவர். கிராமம் என்றால் சின்ன ஊர் என்பது பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் அர்த்தம். அதில் தலையாரியாக இருப்பவர் கிராமணி. அப்படியிருந்தவர்களின் வம்சத்தினர்தான் இப்போதும் ஜாதிப் பெயராக ‘கிராமணி’ என்று போட்டுக் கொள்கிறார்கள். சிவ கணங்களுக்குத் தலைவராக, கணபதி-கணேசன்-கணாதிபன் கணநாயகன் என்றால்லாம் சொல்லப்படுபவரை இங்கே ‘கணக்ராமணி’ என்று அழகான வார்த்தை போட்டுச் சொல்லியிருக்கிறது.

கணக்ராமணியாக ஏகப்பட்ட பரிவார கணங்கள் சூழ இருக்கிறவரானாலும், அவர்கள் யாரும் தனக்குச் சாமரம் போட வேண்டுமென்றில்லாமல் தானே தன் காதுகளையே ஆட்டிப் போட்டுக் கொள்கிறார். “சாமர கர்ணர்” என்று அதனால் பேர்.

மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண….”

கஜகர்ணகராக இருப்பதால்தான் அப்படித் தனக்குத் தானே தன்னாலேயே சாமரம் போட்டுக்கொண்டு கரணம், காரணம், கர்த்தா, கருவி எல்லாமே தாம்தான் என்று காட்டுகிறார்.

* சிவ புஜங்கத்தில் முதல் ச்லோகம்.

ॐ श्री गजकर्णकाय नमः॥
ஓம்ʼ ஶ்ரீ க³ஜகர்ணகாய நம​:॥
OṂ ŚRĪ GAJAKARṆAKĀYA NAMAḤ॥