Tuesday, 28 April 2020

Sri Rudraashtakam - Sloka 8

Sri Rudraashtakam  -  Sloka 8

॥ श्री रुद्राष्टकम‌् ॥

|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||

|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||

न जानामि योगं जपं नैव पूजां नतोऽहं सदा सर्वदा देव तुभ्यम् ।
जरा जन्म दुःखौघ तातप्यमानं प्रभो पाहि आपन्नमामीश शम्भो ॥ ८॥

ந ஜாநாமி யோக³ம் ஜபம் நைவ பூஜாம் நதோঽஹம் ஸதா³ ஸர்வதா³ தே³வ துப்⁴யம் ।
ஜரா ஜந்ம து:³கௌ²க⁴ தாதப்யமாநம் ப்ரபோ⁴ பாஹி ஆபந்நமாமீஶ ஶம்போ⁴ ॥ 8॥

na jānāmi yogaṃ japaṃ naiva pūjāṃ nato'haṃ sadā sarvadā deva tubhyam ।
jarā janma duḥkhaugha tātapyamānaṃ prabho pāhi āpannamāmīśa śambho ॥ 8॥

न जानामि योगं जपं नैव पूजां  -  ந ஜானாமி யோக³ம்ʼ ஜபம்ʼ நைவ பூஜாம்ʼ  -  நான் யோகம், ஜபம், பூஜை முறைகளையும்கூட அறியேன்.

देव  -  தே³வ  -  ஹே தேவா !

अहं सदा सर्वदा तुभ्यं नतः  -  அஹம்ʼ ஸதா³ ஸர்வதா³ துப்⁴யம்ʼ நத꞉:  -  நான் எப்பொழுதும் உங்களையே  வணங்குகிறேன்,

जरा जन्म दुःख-औघ तातप्यमानं  -  ஜரா ஜன்ம து³꞉க²-ஔக⁴ தாதப்யமானம்ʼ  -  மூப்பு பிறப்பு துக்க வெள்ளத்தில் மாட்டிக் தவித்துக் கொண்டிருக்கும்,

आपन्न मां पाहि  -  ஆபன்ன மாம்ʼ பாஹி  -  ( உன் திருவடிகளில் ) சரணடைந்த என்னைக் காப்பாற்றுவாய்,

प्रभो  -  ப்ரபோ⁴  -  ஹே ப்ரபோ  ! (எம்பெருமானே)

ईश  -  ஈஶ  -  ஹே ஈசா ! (அனைத்தையும் ஆள்வோனே)
ஶம்போ⁴  - 

शम्भो  -  ஶம்போ⁴  -  ஹே சம்போ ! (அனைவருக்கும் மங்களம் தருபவரே).

பொருள் :

நான் யோகம், ஜபம், பூஜை முறைகளையும்கூட அறியேன். ஹே தேவா ! நான் எப்பொழுதும் உங்களையே  வணங்குகிறேன், மூப்பு-பிறப்பு-துக்க வெள்ளத்தில் மாட்டிக் தவித்துக் கொண்டிருக்கும்,( உன் திருவடிகளில் ) சரணடைந்த என்னைக் காப்பாற்றுவாய்; ஹே ப்ரபோ  ! (எம்பெருமானே)  ஹே ஈசா ! (அனைத்தையும் ஆள்வோனே) ஹே சம்போ ! (அனைவருக்கும் மங்களம் தருபவரே).   8

Meaning :

8.1: (Salutations to Sri Rudra) I do Not Know how to perform Yoga, Japa or Puja.

8.2: I Always at All Times only Bow down to You, O Shambhu(another name of Sri Shiva),

8.3: Please Protect me from the Sorrows of Birth and Old Age, as well as from the Sins which lead to Sufferings,

8.4: Please Protect me O Lord from Afflictions; Protect me O My Lord Shambhu.

பாடபேதம் —

न जानामि योगं जपं नैव पूजां नतोऽहं सदा सर्वदा शम्भु तुभ्यम् ।
जरा जन्म दुःखौघ तातप्यमानं प्रभो पाहि शापान्नमामीश शम्भो ॥ ८॥

ந ஜாநாமி யோக³ம் ஜபம் நைவ பூஜாம் நதோঽஹம் ஸதா³ ஸர்வதா³ ஶம்பு⁴ துப்⁴யம் ।
ஜரா ஜந்ம து:³கௌ²க⁴ தாதப்யமாநம் ப்ரபோ⁴ பாஹி ஶாபாந்நமாமீஶ ஶம்போ⁴ ॥ 8॥

Saturday, 25 April 2020

Viradha Stuti - விராத ஸ்துதி

Viradha Stuti  -  விராத ஸ்துதி

ஸ்ரீராமர், ஸீதா,லக்ஷ்மணர்கள் வனவாஸத்தின்போது அத்ரி மஹரிஷியை தரிசித்துவிட்டு தண்டகாரண்யம் சென்றார்கள். அப்போது இராமன் லக்ஷ்மணனிடம் சொன்னார், 'இதற்குமேல் வில்லில் நாணேற்றி கைகளில் அம்புகளை வைத்துக்கொண்டு கவனமாக என்னுடன் வரவேண்டும். முதலில் நான் செல்கிறேன். கடைசியாக வில்லேந்திய கையனாக நீ வருவாய். இருவருக்குமிடையில் ஸீதை  வருவாள். ' இதன்படி பயணித்தனர்.
வழியில் ஒரு தடாகத்தில் நீரருந்திவிட்டு இளைப்பாறினர்.

அப்பொழுது ஓர் அரக்கன் அவர்கள் வழியில் வர, அவனே விராதன் என்றறிய, அந்த விராதன் ஸீதாராம லக்ஷ்மணர்களைப் பார்த்து, 'நீங்கள் இருவரும் இன்னும் உயிரோடிருக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் சீதையை விட்டுவிட்டு, ஆயுதங்களையும் போட்டுவிட்டு ஓடிப் போய்விடுங்கள் இல்லையென்றால், உங்கள் இருவரையும் இப்போதே நான் தின்று விடுவேன்' என்று சொல்லிக் கொண்டே சீதையைப் பற்றுவதற்காக ராட்சஸன் குதித்தோடி வந்தான்.

ராமன், மெல்லப் புன்னகைத்தவாறே, விளையாட்டு அவனுடைய புஜங்களை அம்பினால் வெட்டித் தள்ளினார். கோபக்கனலால் கொதித்துக் கொண்டிருந்த அவன், முகத்தைப் பயங்கரமாக சுழித்துக் கொண்டு ராமனை நோக்கி ஓடினான். ஓடிவரும் விராதனின் இருகால்களையும் ராமன் வெட்டி வீழ்த்தினார்.

கால்களையும், கைகளையும் இழந்த அவன், ஒரு சர்ப்பம் போல, தன் வாயினாலேயே ராமனை விழுங்க முயன்றான்; அப்போது, அரைவட்ட வடிவம் கொண்ட பாணத்தால், அவனுடைய பெரிய தலையை வெட்டித் தள்ளினார்; ரத்தம் பெருக்கெடுத்து அவன் தரையில் வீழ்ந்தான். உடனே, சீதை, ரகுகுல திலகமான ராமனை கட்டித் தழுவி மிகவும் பாராட்டினார். அவ்வமயம், ஆகாயத்தில் தேவகணம் துந்துபி முழங்கின; மனமகிழ்ச்சியோடு அப்சரசுகள் நடனமாடினார்கள்; கந்தர்வர்களும் கின்னரர்களும் கானம் செய்தார்கள்.

விராதனுடைய உடலிலிருந்து மிக அழகான தோற்றமுடைய, தூய உடைகள் அணிந்த, உருக்கி வார்த்த தங்கத்தாலான அணிகலன்கள் பூண்ட, வானத்துச் சூரியனைப் போன்ற ஒருவர் வெளிப் போந்தார். தன்னை வணங்குபவர்களின் துயரங்களைப் போக்குபவரும் உலக வாழ்க்கையாகிற நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்துபவரும் இரக்க சித்தமுடையவருமான ஸ்ரீராமனை, பேருவகையோடு அவரை வணங்கினார்; மீண்டும் மீண்டும் வணங்கினார்; அடைக்கலம் புகுந்தவர்களின் அனைத்துத் துன்பங்களையும் போக்கும் அவர் முன்பாக கட்டை போல் விழுந்து சேவித்தார். ஸ்துதித்தார்.

விராதன் சொன்னது —

ஸ்ரீராமா! தாமரை இதழ் போன்ற கண்களுடையவரே! அப்பழுக்கற்ற ஒளிவீசும் வித்யாதரன், நான், முன்னர் ஒரு காலத்தில், காரணம் ஏதுமில்லாமலே பெருங்கோபம் அடையக்கூடியவரான துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டேன் : இப்போது உங்களால் விமோசனம் பெற்றேன்!

इतः परं त्वच्चरणारविन्दयोः
               स्मृतिः सदा मेऽस्तु भवोपशान्तये ।
त्वन्नामसङ्कीर्तनमेव वाणी
               करोतु मे कर्णपुटं त्वदीयम् ॥ ३९॥

कथामृतं पातु करद्वयं ते
               पादारविन्दार्चनमेव कुर्यात् ।
शिरश्च ते पादयुगप्रणामं
               करोतु नित्यं भवदीयमेवम् ॥ ४०॥

இத: பரம் த்வச்சரணாரவிந்த³யோ:
               ஸ்ம்ருʼதி: ஸதா³ மேঽஸ்து ப⁴வோபஶாந்தயே ।
த்வந்நாமஸங்கீர்தநமேவ வாணீ
               கரோது மே கர்ணபுடம் த்வதீ³யம் ॥ 39॥

கதா²ம்ருʼதம் பாது கரத்³வயம் தே
               பாதா³ரவிந்தா³ர்சநமேவ குர்யாத் ।
ஶிரஶ்ச தே பாத³யுக³ப்ரணாமம்
               கரோது நித்யம் ப⁴வதீ³யமேவம் ॥ 40॥

39,40. இனி, மண்ணுலகில் மீண்டும் பிறப்பு ஏற்படாமலிருக்க, தங்கள் தாமரைத் திருவடிகளில் எப்போதும் என் மனம் ஈடுபட்டிருக்க வேண்டும்; என்னுடைய வாய், எப்போதும் உங்கள் நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்க வேண்டும்; என் செவிகள் தங்கள் அமுதக் கதைகள் கேட்க வேண்டும்; என் கைகள் இரண்டும் தங்கள் அரவிந்தப் பாதங்களில் அருச்சனை செய்து கொண்டிருக்க வேண்டும்; அவ்வாறே, என் தலை தங்கள் பாதங்களில் பணிந்து கொண்டிருக்க வேண்டும்.

नमस्तुभ्यं भगवते विशुद्धज्ञानमूर्तये ।
आत्मारामाय रामाय सीतारामाय वेधसे ॥ ४१॥

நமஸ்துப்⁴யம் ப⁴க³வதே விஶுத்³த⁴ஜ்ஞாநமூர்தயே ।
ஆத்மாராமாய ராமாய ஸீதாராமாய வேத⁴ஸே ॥ 41॥

41. பகவானே! மிகத் தூய ஞானவடிவே! உலகங்களைப் படைப்பவரே! சீதாராமனே!  ராமனே! ஆத்மாராமனே! தங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

ராமா! அடைக்கலம் கோரும் என்னைக் காப்பாற்று. ரகுகுல சிரேஷ்டனே! இனி என்னை மாயை சூழலாகாது என்று வேண்டுகிறேன். நான் தேவலோகம் சொல்வதற்கு உத்திரவு கொடுங்கள், ராமா!'

இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்ட பேரறிவாளன் ராமன், மிகவும் மகிழ்ச்சியுடன் விராதன் கோரிய வரத்தைத் தந்தருளினார். 'சென்று வா, வித்யாதரனே! மாயையின் குணதோஷங்கள் எல்லாவற்றையும் வென்று விட்டாய்! ஞானியரில் சிறந்தவனாகி விட்டாய். என்னைத் தரிசித்து விட்டதால் இந்த விநாடியிலேயே நீ விடுதலை பெற்றுவிட்டாய்.

'மண்ணுலகில், என்னிடம் பக்தி செலுத்துவது என்பது எளிதில் பெற முடியாதது. ஏனென்றால், பக்தி ஏற்பட்டுவிட்டால், முக்திகிடைத்துவிடுமே! ஆகவே, மிகவும் பக்திமானான நீ, என் அருளாணையால் மிக மேலான உலகை அடைவாயாக'

இவ்வாறு, பயங்கர (விராத) ராட்சஸனை ராமன் கொன்றதையும், அவரை சாபத்திலிருந்து விடுவித்ததையும், அவன் வேண்டிய வரனை அளித்ததையும், அவனுக்கு மறுபடியும் வித்யாதர நிலையை அளித்ததையும் நெஞ்சார நினைத்து ராமனைத் தோத்தரிக்கிறவர், எல்லா விருப்பங்களையும் அடைவார்.

( உமா-மகேசுவரர்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலாக ) ஸ்ரீமத் அத்யாத்ம ராமாயணம் ஆரண்ய காண்டத்தில் முதலாவது ஸர்கத்தில் இஃது இடம்பெற்றுள்ளது.

Tuesday, 21 April 2020

Sri Rudraashtakam - Sloka 7

Sri Rudraashtakam  -  Sloka 7

॥ श्री रुद्राष्टकम‌् ॥

|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||

|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||

न यावदुमानाथपादारविन्दं भजन्तीह लोके परे वा नराणाम् ।
न तावत्सुखं शान्ति सन्तापनाशः प्रसीद प्रभो सर्वभूताधिवास ॥ ७॥

ந யாவது³மானாத²பாதா³ரவிந்த³ம்ʼ ப⁴ஜந்தீஹ லோகே பரே வா நராணாம் ।
ந தாவத்ஸுக²ம்ʼ ஶாந்தி ஸந்தாபனாஶ꞉ ப்ரஸீத³ ப்ரபோ⁴ ஸர்வபூ⁴தாதி⁴வாஸ ॥ 7॥

na yāvadumānāthapādāravindaṃ bhajantīha loke pare vā narāṇām ।
na tāvatsukhaṃ śānti santāpanāśaḥ prasīda prabho sarvabhūtādhivāsa ॥ 7॥

यावत्  -  யாவத்  -  எதுவரை,

उमानाथ-पाद-अरविन्दं  -  உமானாத²-பாத³-அரவிந்த³ம்ʼ  -  உமாநாதருடைய ( சிவபெருமானுடைய ) பாத கமலங்களை,

न भजन्ति  -  ந ப⁴ஜந்தி  -  பஜிக்கவில்லையோ, *

तावत्  -  தாவத்  -  அதுவரை,

नराणां  -  நராணாம்ʼ  -  நரர்களுக்கு,

इह लोके परे वा  -  இஹ லோகே பரே வா  -  இவ்வுலகிலோ பர உலகிலோ,

न सुखं शान्तिः सन्तापनाशः  -  ந ஸுக²ம்ʼ ஶாந்தி꞉ ஸந்தாபனாஶ꞉:  -  சுகம், அமைதி, தவிப்பிலிருந்து விடுதலை கிடைக்காது., #

प्रभो  -  ப்ரபோ⁴  -  ஹே எம்பெருமானே !

सर्वभूताधिवास  -  ஸர்வபூ⁴தாதி⁴வாஸ  -  ஹே எங்கும் நீக்கமற நிறைந்தவரே !

प्रसीद  -  ப்ரஸீத³  -  அருளுங்கள்.

பொருள் :

எதுவரை உமாநாதருடைய ( சிவபெருமானுடைய ) பாத கமலங்களை, பஜிக்கவில்லையோ ( பக்தி செய்யவில்லையோ ), அதுவரை நரர்களுக்கு ( மனிதர்களுக்கு ) இவ்வுலகிலோ பரவுலகிலோ, சுகம், அமைதி, தவிப்பிலிருந்து விடுதலை கிடைக்காது., ஹே எம்பெருமானே !  ஹே எங்கும் நீக்கமற நிறைந்தவரே ! அருளுங்கள் (பிரீதி அடையுங்கள்).   7

Meaning :

7.1: (Salutations to Sri Rudra) As Long as the Lotus Feet of the Lord of Uma ...

7.2: ... is not Worshipped in This World or Later by the Human Beings, ...

7.3: ... So Long (i.e. Till then) Joy, Peace and End of Sorrows will not be experienced in life.

7.4: Therefore O Lord, Please be Gracious, You Who Reside within All Beings.

* பஜிக்க - அன்பு செலுத்த, வழிபட, பூஜிக்க, தொண்டு செய்ய.,

# சுகம் - அளவான இன்பம். ஒருவருக்கு சுகம் என்பது மற்றவர்களுக்கு துக்கமாக அமையலாம்;   சாந்தி - அமைதி / நிறைவு. ஞானத்தினால் தான் ஏற்படக்கூடியது;   ஸந்தாப நாசம் - தொல்லை தவிப்பு துக்கம் நீங்குவதால் ஏற்படுகிற சுகம்.

பாட பேதம் --

न तावत्सुखं शान्ति सन्तापनाशं प्रसीद प्रभो सर्वभूताधिवासम् ॥ ७॥

ந தாவத்ஸுக²ம் ஶாந்தி ஸந்தாபநாஶம் ப்ரஸீத³ ப்ரபோ⁴ ஸர்வபூ⁴தாதி⁴வாஸம் ॥ 7॥

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  Phalashruti

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  Phalashruti

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

षोडशैतानि नामानि यः पठेच्छृणुयादपि ।
विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा ।
सङ्ग्रामे सर्वकार्येषु विघ्नस्तस्य न जायते ॥

ஷோட³ஶைதானி நாமானி ய​: படே²ச்ச்ருʼ²ணுயாத³பி |
வித்³யாரம்பே⁴ விவாஹே ச ப்ரவேஶே நிர்க³மே ததா² |
ஸங்க்³ராமே ஸர்வகார்யேஷு விக்⁴னஸ்தஸ்ய ந ஜாயதே ||

( 1.சுமுகர், 2.ஏகதந்தர், 3.கபிலர், 4.கஜகர்ணகர், 5.லம்போதரர், 6.விகடர், 7.விக்னராஜர்,   8.விநாயகர், 9.தூமகேது, 10.கணாத்யக்ஷர், 11.பாலச்சந்தரர், 12.கஜானனர், 13.வக்ரதுண்டர், 14.சூர்பகர்ணர், 15.ஹேரம்பர், 16.ஸ்கந்த பூர்வஜர். ) இவ்வாறு பதினாறு பெயர்கள் வாய்ந்தவர் விக்னேச்வரர். கல்வியைத் தொடங்கும் பொழுதும், திருமணத்திலும், புதுமனை புகும்போதும், பயணத்திலும், போரிலும், எல்லா நற்செயல்களிலும் இந்த பதினாறு பெயர்களைப் பாராயணம் செய்பவனுக்கு , கேட்பவனுக்கோகூட எவ்வகையான தடையும் ஏற்படாது.

பலச்ருதியின் அனைத்துப் பயனும் பெற்ற முருகன் : ( தெய்வத்தின் குரல் )
 
ரஸமாக ஒன்று தோன்றுகிறது:

இந்த ஷோடச நாமாக்களைச் சொல்கிறவருக்கு, “வித்யாரம்பே” [கல்வி கற்கத் தொடங்கும்போது] , “விவாஹே” [கலியாணத்தின் போது] “ப்ரவேசே” [ஓரிடத்திற்குள் செல்லும்போது] , “நிர்கமே” [ஓரிடத்திலிருந்து புறப்படும்போது] , “ஸங்க்ராமே” [சண்டை சச்சரவுகளில்] “ஸர்வ கார்யேஷு” [எல்லாக் கார்யங்களிலுமே] விக்கினம் உண்டாகாது என்று பலன் சொல்லியிருக்கிறது. இந்த ஒவ்வொன்றுக்குமே ஸ்கந்த சரித்திரத்தில் proof, சான்று, இருப்பதாகத் தெரிகிறது.

“வித்யாரம்பே:”  பரமேச்வரனின் ஞான நேத்ர ஜ்யோதிஸிலிருந்து உண்டான ஸுப்ரம்மண்யருக்கு அக்ஷராப்யாஸம் என்ற அர்த்தத்தில் வித்யாரம்பம் அவசியமேயில்லை. அவரே “ஓம் இத்-யேகாக்ஷரம்” என்ற பிரணவத்திற்கு அர்த்தமாக இருந்து கொண்டு, அதைப் பிதாவுக்கு உபதேசம் பண்ணினவர். ஆனபடியால் அவர் விஷயத்தில் வித்யாரம்பம் என்பது ப்ரஹம் வித்யையை அநுபவமாக அநுஷ்டிக்கும் ஸந்நியாஸத்தை ஸ்வீகரிப்பதுதான். அப்படி அவர் ஸந்நியாஸி ஆனதற்கு விக்நேச்வரர் பழப் போட்டியில் ஜயித்ததுதான் காரணம்.*

“விவாஹே”: வள்ளி கல்யாண ஸமாசாரம். அதில் அண்ணாக்காரரின் முக்யமான பங்கை முன்னாலேயே பார்த்து விட்டோம்.

தம்பியின் இல்லறம், துறவறம் இரண்டிற்குமே அவர் தான் key கொடுத்திருக்கிறார்! தம்பி குழந்தையாயிருந்த போது அவரை ஸந்நியாஸியாக்கி, அப்புறம் யௌவனத்தில் கிருஹஸ்தராக்கியிருக்கிறார்! தம்முடைய பரமபக்தையான ஒளவையையோ அவள் நல்ல யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டிய ஸமயத்தில் கிழவியாக்கி ஒரு ஸந்நியாஸினி மாதிரி செய்திருக்கிறார்! பெரும்பாலும் பால ப்ரஹ்மசாரியாகவே நாம் பூஜிக்கும் ஸ்வாமியின் லீலை இப்படி வேடிக்கையாக இருக்கிறது!

“ப்ரவேசே”: இந்த லோகத்தில் இப்படி ஸுப்ரஹ்மண்யம் என்று ஒரு திவ்ய மங்கள் மூர்த்தி பிரவேசிப்பதற்கு-தோன்றுவதற்கு-காரணம் சூரபத்மாவின் நிபந்தனைப்படி விக்நேச்வரர் அவனுடைய ஸம்ஹாரத்திற்கு ‘டிஸ்க்வாலிஃபை’ ஆகியிருந்ததுதான். அதாவது, ‘நெகட்டிவ்’ ஆக ஸுப்ரஹ்மண்ய ப்ரவேசத்திற்குக் காரணம் அவர்தான்.

“நிர்கமே”: ‘ப்ரவேசம்’ என்றால் ஒன்றில் புகுவது, ‘நிர்கமம்’ என்றால் ஒன்றைவிட்டுப் போய்விடுவது. வள்ளி கல்யாணம், பிள்ளையார் நடத்திக் கொடுத்து முடிந்தவுடன் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தாம் பிரவேசித்திருந்த இந்த உலகத்தை விட்டுவிட்டு ஸ்கந்த லோகம் என்கிற தம்முடைய நித்யவாஸ ஸ்தானத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார். இரண்டு பத்னிகளோடும் புறப்பட்டுப் போய் விட்டார். வள்ளி கதை வருவதற்கு முந்தியே தேவஸேனா கல்யாணமாகி இருந்தது.

அவர் லோகத்தில் அவதாரம் பண்ணியதற்கு இரண்டு காரணம். சூரஸம்ஹாரம் ஒன்று. இன்னொன்று, அவருடைய மாமா மஹாவிஷ்ணுவின் இரண்டு பெண்களில் ஒருத்தி தேவராஜன் பெண்ணாகவும், மற்றவள் வேடராஜன் பெண்ணாகவும் வளர்ந்து வந்தவர்களை அவர் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது.

முதலில் திருச்செந்தூர் தாண்டி ஸமுத்ரத்தில் போய் அஸுரஸம்ஹாரம் முடித்தார். அப்புறம் திருப்பரங்குன்றத்தில் தேவஸேனையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங்கே அவளோடு இருந்து கொண்டிருக்கும்போது நாரதர் வந்து சித்தூரில் வள்ளி அவரே நினைவாக ப்ரேமையில் உருகிக் கொண்டிருப்பதை சொன்னார். ஆகையால் திருப்பரங்குன்றம் கோவிலில் அவர் வல்லீ-தேவஸேனா ஸமேதராக இல்லாமல், ஒரு பக்கம் தேவஸேனையும், மறுபக்கம் வள்ளிக்குப் பதில் அவளுக்காகத் தூது சொல்ல வந்த நாரதருமாகத்தான் இருக்கிறார். ஸத்குருவானவர் ஜீவாத்மாவிடம் பரமாத்மாவின் க்ருபையை திருப்பி விடுவதற்கு ரூபகமாக நாரதர் வள்ளியிடம் ஸுப்ரம்மண்யரைத் திருப்பிவிட்டார். அதனால் சிவனுக்கும் குருவான ஸ்வாமி, நாரத குருவுக்குத் தன்னுடைய ஸந்நிதியிலேயே ஒரு பக்கம் இடம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

நாரதர் சொன்னதன் மேல் அவர் புறப்பட்டுப் போய் வேடன், விருத்தன், வேங்கைமரம் எல்லாமாக வேஷம் போட்டு அப்புறம் அண்ணாவின் அருளால் வள்ளியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் புக்தி – முக்தி என்கிற இம்மை-மறுமைத் தத்வங்கள் இரண்டோடும் சேர்ந்துள்ள தம்முடைய ஸாந்நித்யம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என்று இரண்டு பத்னிகளோடும் ‘ஹனிமூன்’ மாதிரிக் கொஞ்சநாள் திருத்தணியில் இருந்தார். பிற்பாடு ஸ்கந்தலோகம் போய்விட்டார். அது தான் நிர்கமம். அதற்குப் படி போட்டுக் கொடுத்தது வள்ளி கல்யாணம். அதோடு அவருடைய அவதாரத்தின் இரண்டாவது ‘பர்ப’ஸும் நிறைவேறி விட்டது.

வள்ளி கல்யாணத்திற்குப் படி போட்டுக் கொடுத்தவர் யானையாக வந்து அவளைத் துரத்திய பிள்ளையாரேயாகையால், ஸுப்ரஹ்மண்யர் நம் லோகத்திலிருந்து ஸ்கந்த லோகத்திற்கு ‘நிர்கமம்’ பண்ணவும் அவர்தான் உதவி இருக்கிறார்.

“ஸங்க்ராமே:” ஸங்க்ராமம் என்றால் சண்டை, யுத்தம். “ஸங்க்ராம சிகாவல” என்று ‘கந்தரநுபூதி’யில்கூட வருகிறது. யுத்தத்தில் மஹா பராக்ரமம் காட்டிய ஸுர ஸேநாதிபதி ஸுப்ரம்மண்யர். அப்படி யுத்தம் ஆரம்பிக்கிறதற்கு முன்னால் அவர் நிச்சயமாக விக்நேச்வர பூஜை பண்ணித் தானிருப்பார். ஏனிப்படிச் சொல்கிறேனென்றால் விக்நேச்வர பூஜை செய்யாமல் த்ரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தகப்பனார், பண்டாஸுர ஸம்ஹாரத்திற்குப் புறப்பட்ட தாயார் ஆகியவர்களுக்கும் விக்கினங்கள் ஏற்பட்டு, அவர்கள் அந்தப் பூஜை பண்ணிய பிறகுதான் விக்கினம் நிவிருத்தியாயிற்று என்பதால் தம்பிக்காரர் முதலிலேயே ஜாக்ரதையாக முழித்துக் கொண்டு பூஜை பண்ணித்தானே இருப்பார்? அது மாத்திரமில்லை. சூரஸம்ஹாரத்திற்கு இவர் புறப்படுவதற்கு முன்னாடி அவரோடு பழத்துக்குப் போட்டி போட்டு பந்தயம் வந்ததில் தோற்றே போயிருக்கிறார். அந்த விரக்தியில் ஆண்டியானார். அந்த ஆண்டி வாழ்க்கையிலாவது ஜயித்தாரா, அதாவது அது தக்கி நின்றதா என்றால் இல்லை. மாதா பிதாக்கள் வந்து கேட்டுக் கொண்டு, அஸுர ஸம்ஹாரத்திற்காகவே அவர் அவதரித்திருப்பதை ஞாபகப் படுத்தியவுடன், ஸந்நியாஸத்திற்கு முழுக்கு போட்டுவிட்டுச் சண்டைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. அதனால் அண்ணா அநுக்ரஹம் இருந்தால்தான் கார்யம் ஸித்தியாகும் என்று இப்போது அவருக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனபடியால் அவரைப் பூஜை பண்ணிவிட்டுதான் புறப்பட்டிருப்பார்.

“ஸர்வ கார்யேஷு”: அண்ணாவுக்குப் போட்டியாகப் பழத்துக்குப் பந்தயம் புறப்பட்டது பலிக்கவில்லை. அவரைப் பிரார்த்திக்காமல் ஆண்டியானதும் நிற்கவில்லை என்பதால் யுத்தத்திற்குப் போகும் போது அவரைப் பூஜை பண்ணினாலும் பிற்பாடு வள்ளியை அடைவதற்காகப் போனபோது அவரை மறந்துவிட்டார். ஆசைவேகம் எத்தனை பொல்லாதது என்று லோகத்திற்குக் காட்டுவதற்காகவே இப்படி ஏற்பட்டது. விக்னமும் நிறைய வந்தது. அப்புறம் அவரை ப்ரார்த்தித்தே கார்யஸித்தி பெற்றார். அதனால் அதற்கப்புறம் “ஸர்வ கார்யேஷு” என்றபடி எந்தக் கார்யமானாலும் அதை ஆரம்பிப்பதற்கு முன்னால் விக்நேச்வர பூஜை பண்ணித்தானிருப்பார். அதைப் பற்றி ஸந்தேஹமேயில்லை.

ஆகையாலேயே பிள்ளையாரின் ஷோடச நாமாக்களை முடிக்கிறபோது, அதற்குப் பலச்ருதியில் சொல்லப்படும் அத்தனை விதங்களிலும் விக்நேச்வரரின் அநுக்ரஹத்தைப் பெற்ற ஸ்கந்தரைக் குறிப்பிட்டு, அவருடைய பூர்வஜரென்று பூர்த்தி பண்ணியிருக்கிறது.

* விக்நேச்வரருக்கு ‘குமார குரு’ என்று ஒரு நாமமிருப்பது ஸ்ரீசரணர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டு, இதிலிருந்து அவர் ஏதோவொரு சமயத்தில் முருகனுக்கு வித்யாரம்பம் செய்தவராகவே தெரிகிறதென விண்ணப்பிக்கப்பட்டது. உடனே அவர்கள் “குமார குரு என்று தூர்வாயுக்ம அர்ச்சனையில்தானே வருகிறது?” என வினவினார்கள். ஆம், இரட்டை அருகம்புற்களால் 21 முறை அர்ச்சனை செய்வதற்கு ஏற்பட்ட 21 நாமாவளியில்தான் இந் நாமம் வருகிறது. (தூர்வா – அருகம்புல், யுக்மம் – இரட்டை.)

Monday, 13 April 2020

Sri Rudraashtakam - Sloka 6

Sri Rudraashtakam  -  Sloka 6

॥ श्री रुद्राष्टकम‌् ॥

|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||

|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||

कलातीत कल्याण कल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी ।
चिदानन्द संदोह मोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी ॥ ६॥

கலாதீத கல்யாண கல்பாந்தகாரீ ஸதா³ ஸஜ்ஜநாநந்த³தா³தா புராரீ ।
சிதா³நந்த³ ஸந்தோ³ஹ மோஹாபஹாரீ ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ மந்மதா²ரீ ॥ 6॥

kalātīta kalyāṇa kalpāntakārī sadā sajjanānandadātā purārī ।
cidānanda saṃdoha mohāpahārī prasīda prasīda prabho manmathārī ॥ 6॥

कला-अतीत  -  கலா-அதீத  -  ஹே தெளிவளிக்கும் புத்திக்கு அப்பாற்பட்டவரே,

कल्याण  -  கல்யாண  -  ஹே மங்களம் செய்பவரே,

कल्प-अन्तकारी  -  கல்ப-அந்தகாரீ  -  ஹே கல்பங்களை ( கால அளவு ) முடிப்பவரே, *

सदा सज्जन-आनन्द-दाता  -  ஸதா³ ஸஜ்ஜன-ஆனந்த³-தா³தா  -  ஹே எப்பொழுதும் சாதுக்களுக்கு ஆனந்தத்தையே அளிப்பவரே,

पुरारी  -  புராரீ  -  ஹே திரிபுரங்களை அழித்தவரே,

चिदानन्द संदोह  -  சிதா³னந்த³ ஸந்தோ³ஹ  -  ஹே சைதன்ய ஆனந்தத்தைத் தொகுத்து அளிப்பவரே,  #

मोह-अपहारी  -  மோஹ-அபஹாரீ  -  ஹே மோஹத்தை அபஹரிப்பவரே,  <<

मन्मथारी  -  மன்மதா²ரீ  -  ஹே மன்மதனுக்கு எதிரியானவரே,

प्रभो  -  ப்ரபோ⁴  -  ஹே எம்பெருமானே

प्रसीद प्रसीद  -  ப்ரஸீத³ ப்ரஸீத³  -  அருளுங்கள் ! அருளுங்கள் !

பொருள் :

ஹே தெளிவளிக்கும் புத்திக்கு அப்பாற்பட்டவரே !  ஹே மங்களம் செய்பவரே !  ஹே கல்பங்களை ( கால அளவு ) முடிப்பவரே !  ஹே எப்பொழுதும் சாதுக்களுக்கு ஆனந்தத்தையே அளிப்பவரே !  ஹே திரிபுரங்களை அழித்தவரே !  ஹே சைதன்ய ஆனந்தத்தைத் தொகுத்து அளிப்பவரே !  ஹே மோஹத்தை அபஹரிப்பவரே !   ஹே மன்மதனுக்கு எதிரியானவரே !  ஹே எம்பெருமானே ! அருளுங்கள் !  அருளுங்கள் !   6

Meaning :

6.1: (Salutations to Sri Rudra) Whose Auspicious Nature is Beyond the Elements of the gross material world and Who Brings an End to a Kalpa (a cycle of creation when all gross elements are dissolved),

6.2: Who Always Give Great Joy to the Wise Men and Who is the Enemy (signifying Destroyer) of the Tripurasuras (who represents Adharma),

6.3: By Taking Away the Great Delusion, He plunges the prepared Soul in the Fullness of Cidananda (the Bliss of Brahman or Pure Consciousness),

6.4: O, the Enemy (signifying Destroyer) of Manmatha; Please be Gracious to me; Please be Gracious to me, O Lord.

*  கல்பம் - பிரம்மாவின் ஒரு பகல் ( 1000 சதுர்யுகங்கள் ).,
கல்பம் - நம் மனத்தில் தோன்றிக்கொண்டேயிருக்கின்ற ஸங்கல்பங்களை அழிப்பவரே ! என்றும் கொள்ளலாம்.

#  நான் சிரிக்கிறேன்; நான் அழுகிறேன்; நான் தவிக்கிறேன் போன்ற பலவிதமான உணர்ச்சிகளின் கேந்த்ரியமாக இருக்கிற ' நான் ' என்னும் போதத்தைக் கறந்து ( பசு பலவண்ண வஸ்துக்களை விதவிதமாக உண்டபோதிலும் அவை செரிமானப்பட்டு, பால் மாத்திரம் கறப்பவரால், கறந்து கிடைப்பது போல ) அளிப்பவர்.

<<  ஸம்ஸார ஸுக மோஹத்தில் அழுந்தியிருக்கும் நான், மோஹத்தை விட மறுத்தபோதிலும், பலவந்தமாக அதைப் பறித்துச் செல்பவரே.