Viradha Stuti - விராத ஸ்துதி
ஸ்ரீராமர், ஸீதா,லக்ஷ்மணர்கள் வனவாஸத்தின்போது அத்ரி மஹரிஷியை தரிசித்துவிட்டு தண்டகாரண்யம் சென்றார்கள். அப்போது இராமன் லக்ஷ்மணனிடம் சொன்னார், 'இதற்குமேல் வில்லில் நாணேற்றி கைகளில் அம்புகளை வைத்துக்கொண்டு கவனமாக என்னுடன் வரவேண்டும். முதலில் நான் செல்கிறேன். கடைசியாக வில்லேந்திய கையனாக நீ வருவாய். இருவருக்குமிடையில் ஸீதை வருவாள். ' இதன்படி பயணித்தனர்.
வழியில் ஒரு தடாகத்தில் நீரருந்திவிட்டு இளைப்பாறினர்.
அப்பொழுது ஓர் அரக்கன் அவர்கள் வழியில் வர, அவனே விராதன் என்றறிய, அந்த விராதன் ஸீதாராம லக்ஷ்மணர்களைப் பார்த்து, 'நீங்கள் இருவரும் இன்னும் உயிரோடிருக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் சீதையை விட்டுவிட்டு, ஆயுதங்களையும் போட்டுவிட்டு ஓடிப் போய்விடுங்கள் இல்லையென்றால், உங்கள் இருவரையும் இப்போதே நான் தின்று விடுவேன்' என்று சொல்லிக் கொண்டே சீதையைப் பற்றுவதற்காக ராட்சஸன் குதித்தோடி வந்தான்.
ராமன், மெல்லப் புன்னகைத்தவாறே, விளையாட்டு அவனுடைய புஜங்களை அம்பினால் வெட்டித் தள்ளினார். கோபக்கனலால் கொதித்துக் கொண்டிருந்த அவன், முகத்தைப் பயங்கரமாக சுழித்துக் கொண்டு ராமனை நோக்கி ஓடினான். ஓடிவரும் விராதனின் இருகால்களையும் ராமன் வெட்டி வீழ்த்தினார்.
கால்களையும், கைகளையும் இழந்த அவன், ஒரு சர்ப்பம் போல, தன் வாயினாலேயே ராமனை விழுங்க முயன்றான்; அப்போது, அரைவட்ட வடிவம் கொண்ட பாணத்தால், அவனுடைய பெரிய தலையை வெட்டித் தள்ளினார்; ரத்தம் பெருக்கெடுத்து அவன் தரையில் வீழ்ந்தான். உடனே, சீதை, ரகுகுல திலகமான ராமனை கட்டித் தழுவி மிகவும் பாராட்டினார். அவ்வமயம், ஆகாயத்தில் தேவகணம் துந்துபி முழங்கின; மனமகிழ்ச்சியோடு அப்சரசுகள் நடனமாடினார்கள்; கந்தர்வர்களும் கின்னரர்களும் கானம் செய்தார்கள்.
விராதனுடைய உடலிலிருந்து மிக அழகான தோற்றமுடைய, தூய உடைகள் அணிந்த, உருக்கி வார்த்த தங்கத்தாலான அணிகலன்கள் பூண்ட, வானத்துச் சூரியனைப் போன்ற ஒருவர் வெளிப் போந்தார். தன்னை வணங்குபவர்களின் துயரங்களைப் போக்குபவரும் உலக வாழ்க்கையாகிற நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்துபவரும் இரக்க சித்தமுடையவருமான ஸ்ரீராமனை, பேருவகையோடு அவரை வணங்கினார்; மீண்டும் மீண்டும் வணங்கினார்; அடைக்கலம் புகுந்தவர்களின் அனைத்துத் துன்பங்களையும் போக்கும் அவர் முன்பாக கட்டை போல் விழுந்து சேவித்தார். ஸ்துதித்தார்.
விராதன் சொன்னது —
ஸ்ரீராமா! தாமரை இதழ் போன்ற கண்களுடையவரே! அப்பழுக்கற்ற ஒளிவீசும் வித்யாதரன், நான், முன்னர் ஒரு காலத்தில், காரணம் ஏதுமில்லாமலே பெருங்கோபம் அடையக்கூடியவரான துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டேன் : இப்போது உங்களால் விமோசனம் பெற்றேன்!
इतः परं त्वच्चरणारविन्दयोः
स्मृतिः सदा मेऽस्तु भवोपशान्तये ।
त्वन्नामसङ्कीर्तनमेव वाणी
करोतु मे कर्णपुटं त्वदीयम् ॥ ३९॥
कथामृतं पातु करद्वयं ते
पादारविन्दार्चनमेव कुर्यात् ।
शिरश्च ते पादयुगप्रणामं
करोतु नित्यं भवदीयमेवम् ॥ ४०॥
இத: பரம் த்வச்சரணாரவிந்த³யோ:
ஸ்ம்ருʼதி: ஸதா³ மேঽஸ்து ப⁴வோபஶாந்தயே ।
த்வந்நாமஸங்கீர்தநமேவ வாணீ
கரோது மே கர்ணபுடம் த்வதீ³யம் ॥ 39॥
கதா²ம்ருʼதம் பாது கரத்³வயம் தே
பாதா³ரவிந்தா³ர்சநமேவ குர்யாத் ।
ஶிரஶ்ச தே பாத³யுக³ப்ரணாமம்
கரோது நித்யம் ப⁴வதீ³யமேவம் ॥ 40॥
39,40. இனி, மண்ணுலகில் மீண்டும் பிறப்பு ஏற்படாமலிருக்க, தங்கள் தாமரைத் திருவடிகளில் எப்போதும் என் மனம் ஈடுபட்டிருக்க வேண்டும்; என்னுடைய வாய், எப்போதும் உங்கள் நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்க வேண்டும்; என் செவிகள் தங்கள் அமுதக் கதைகள் கேட்க வேண்டும்; என் கைகள் இரண்டும் தங்கள் அரவிந்தப் பாதங்களில் அருச்சனை செய்து கொண்டிருக்க வேண்டும்; அவ்வாறே, என் தலை தங்கள் பாதங்களில் பணிந்து கொண்டிருக்க வேண்டும்.
नमस्तुभ्यं भगवते विशुद्धज्ञानमूर्तये ।
आत्मारामाय रामाय सीतारामाय वेधसे ॥ ४१॥
நமஸ்துப்⁴யம் ப⁴க³வதே விஶுத்³த⁴ஜ்ஞாநமூர்தயே ।
ஆத்மாராமாய ராமாய ஸீதாராமாய வேத⁴ஸே ॥ 41॥
41. பகவானே! மிகத் தூய ஞானவடிவே! உலகங்களைப் படைப்பவரே! சீதாராமனே! ராமனே! ஆத்மாராமனே! தங்களுக்கு என் நமஸ்காரங்கள்.
ராமா! அடைக்கலம் கோரும் என்னைக் காப்பாற்று. ரகுகுல சிரேஷ்டனே! இனி என்னை மாயை சூழலாகாது என்று வேண்டுகிறேன். நான் தேவலோகம் சொல்வதற்கு உத்திரவு கொடுங்கள், ராமா!'
இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்ட பேரறிவாளன் ராமன், மிகவும் மகிழ்ச்சியுடன் விராதன் கோரிய வரத்தைத் தந்தருளினார். 'சென்று வா, வித்யாதரனே! மாயையின் குணதோஷங்கள் எல்லாவற்றையும் வென்று விட்டாய்! ஞானியரில் சிறந்தவனாகி விட்டாய். என்னைத் தரிசித்து விட்டதால் இந்த விநாடியிலேயே நீ விடுதலை பெற்றுவிட்டாய்.
'மண்ணுலகில், என்னிடம் பக்தி செலுத்துவது என்பது எளிதில் பெற முடியாதது. ஏனென்றால், பக்தி ஏற்பட்டுவிட்டால், முக்திகிடைத்துவிடுமே! ஆகவே, மிகவும் பக்திமானான நீ, என் அருளாணையால் மிக மேலான உலகை அடைவாயாக'
இவ்வாறு, பயங்கர (விராத) ராட்சஸனை ராமன் கொன்றதையும், அவரை சாபத்திலிருந்து விடுவித்ததையும், அவன் வேண்டிய வரனை அளித்ததையும், அவனுக்கு மறுபடியும் வித்யாதர நிலையை அளித்ததையும் நெஞ்சார நினைத்து ராமனைத் தோத்தரிக்கிறவர், எல்லா விருப்பங்களையும் அடைவார்.
( உமா-மகேசுவரர்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலாக ) ஸ்ரீமத் அத்யாத்ம ராமாயணம் ஆரண்ய காண்டத்தில் முதலாவது ஸர்கத்தில் இஃது இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment