Sunday, 23 February 2020

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 10

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  10

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

10.  गणाध्यक्षः   -    க³ணாத்⁴யக்ஷ​:    -   
GAṆĀDHYAKṢAḤ   :-

गणाध्यक्षस्तु षट्त्रिंशत्तत्त्व संदोहपालकः ।

க³ணாத்⁴யக்ஷஸ்து ஷட்த்ரிம்ʼஶத்தத்த்வ ஸந்தோ³ஹபாலக​: |

கணங்களின் மேற்பார்வையாளர்.  முப்பத்தாறு தத்துவங்களும், உலகம் , ஜீவன், ஈச்வரன் என்ற மூன்றாகத் தோற்றமளிக்கின்றன. அவையாவன சிவன், சக்தி, ஸதாசிவன், ஈச்வரன், சுத்தவித்யை, மாயை, கலா, வித்யா, ராகம், காலம், நியதி, புருஷன், பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனஸ், ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5,  பஞ்சபூத தன்மாத்ரைகள் 5, பஞ்சபூதங்கள் 5 என்பவை. இவற்றின் தலைவர். இவற்றை ஒருங்கிணைத்துத் தன் மேற்பார்வையில் இயக்குபவர்.

கணாத்யக்ஷர் :  ( தெய்வத்தின் குரல் )
 
தூமகேதுர்-கணாத்யக்ஷ:.  ஷோடச நாமங்களில் தூமகேதுவுக்கு அப்புறம் ‘கணாத்யக்ஷர்’. கண-அத்யக்ஷர். ‘அத்யக்ஷர்’ என்றால் ஸூபர்வைஸ் பண்ணுகிறவர், தலைவர். (‘தலை’யை வைத்தேதான் வெள்ளைக்காரர்களும் Head of the Government, Head-Priest என்றெல்லாம் சொல்கிறார்கள்!) ஸமீபகாலம் வரை வைஸ்சான்ஸலர்களை உப-அத்யக்ஷர் என்றே சொல்லி வந்தோம்.

கண-பதி, கணேசர் (கண-ஈசர்), கணாதிபதி (கண-அதிபதி), கணநாதர் என்றெல்லாம் சொன்னால் என்ன அர்த்தமோ அதுதான் கணாத்யக்ஷர் என்பதற்கும் அர்த்தம்.

பரமேச்வரன் தம்முடைய பூதகணங்களுக்கு அதிபதியாக விக்நேச்வரரையும், தேவகணங்களுக்கு அதிபதியாக இளைய பிள்ளை ஸுப்ரஹ்மண்யரையும் வைத்தார். “கஜாநநம், பூதகணாதி ஸேவிதம்” என்கிறோம். இளைய பிள்ளையை தேவஸேநாபதி என்கிறோம். அவர் இரண்டு விதத்தில் அப்படி இருக்கிறார்; தேவர்களின் ஸேனைக்கு அதிபதி; தேவேந்திரனின் குமாரியான தேவஸேனைக்குப் பதி! தேவர்களுக்கு ஆதிபத்யம் தாங்குவதைவிட, பூதங்களைக் கட்டி மேய்த்து அடக்கியாளுவதுதான் கஷ்டம். மூத்தபிள்ளை இந்தக் கஷ்டமான பொறுப்பை ‘ஈஸி’யாக ஆற்றிக் கொண்டு ஆனந்தமாயிருக்கிறார்.

தேவ கணம், மநுஷ்ய கணம் ஆகியவையும் அவருடைய மஹாசக்தியையும், அருள் உள்ளத்தையும் தெரிந்து கொண்டு அவருக்கு அடங்கிப் பூஜை பண்ணத்தான் செய்கின்றன. ஆனபடியால் அவர் கணாத்யக்ஷர் என்கிற போது ஸகலவிதமான ஜீவகணங்களுக்குமே அத்யக்ஷர் என்றும் சொல்லலாம்.

ॐ श्री गणाध्यक्षाय नमः ॥
ஓம்ʼ ஶ்ரீ க³ணாத்⁴யக்ஷாய நம​: ॥
OṂ ŚRĪ GAṆĀDHYAKṢĀYA NAMAḤ ॥

Sunday, 16 February 2020

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 9

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  9

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

9.  धूमकेतुः   -    தூ⁴மகேது​:   -   DHŪMAKETUḤ  :-

தூமகேது : ( தெய்வத்தின் குரல் )

‘தூமகேது’ என்பது அடுத்த நாமா. தூமம் என்றால் புகை. சாதாரண விறகுப் புகை, கரிப் புகையை தூமம் என்றும் நல்ல ஸுகந்தம் வீசும் சாம்பிராணி, அகில் முதலியவற்றின் புகையை தூபம் என்றும் சொல்ல வேண்டும் என்பார்கள். பஞ்சோபசாரத்தில் தூபம் காட்டுகிறோம். தூமம் : புகை. கேது என்றால் கொடி. புகையைக் கொடியாக உடையவர் தூமகேது. நெருப்பிலிருந்து புகை எழும்பிக் காற்றில் கொடி படபடவென்று அடித்துக் கொள்வதுபோலப் பரவுவதால் அக்னி பகவானுக்கு தூமகேது என்று பேர் இருக்கிறது. ஆனால் பொதுவில் தூமகேது என்றால் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல் உத்பாதகாரகமாகவே [உற்பாதம் விளைவிப்பதாகவே] எடுத்துக் கொள்கிறோம். காரணம் தூமகேது என்றால் வால் நக்ஷத்ரம் என்றும் அர்த்தம் இருப்பதுதான். வால் நக்ஷத்ரம் லோகத்துக்கு அமங்களத்தைக் குறிப்பது. லோக மங்கள மூர்த்தியான பிள்ளையாருக்கு அப்படிப் பேர் இருப்பானேன் என்று புரியாமலிருந்தது.

விநாயக புராணத்தைப் பார்த்தேன். விநாயகரைப் பற்றி இரண்டு புராணங்கள் இருக்கின்றன. ஒன்று ப்ருகு முனிவர் சொன்னது. அதனால் அதற்கு பார்கவ புராணம் என்று பேர். ‘ரகு’ ஸம்பந்தமானது ‘ராகவ’ என்பது போல ‘ப்ருகு’ ஸம்பந்தமானது ‘பார்கவ’. முத்கலர் என்ற ரிஷி உபதேசித்ததால் முத்கல புராணம் எனப்படும் இன்னொரு விநாயக புராணமும் இருக்கிறது. ப்ருகு – பார்கவ என்கிற ரீதியில் முத்கலர் ஸம்பந்தமானது ‘மௌத்கல்ய’. ஆனாலும் அப்படிச் சொல்லாமல் முத்கல புராணம் என்றே சொல்கிறார்கள். நான் இப்போது தூமகேது விஷயமாகக் குறிப்பிட்டது பார்கவ புராணத்தை.

அதில் உபாஸனா காண்டம், லீலா காண்டம் என்று இரண்டு பாகம். லீலா காண்டத்தில் ரொம்பவும் ஆச்சர்யமாக விக்நேச்வரருக்குப் பன்னிரண்டு அவதாரங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது. அதன்படி கணேசர் என்பது ஒரு அவதாரம்; கணபதி என்பது இன்னொரு அவதாரம். ஷோடச நாமாவில் வரும் வக்ரதுண்டர், பாலசந்திரர், கஜானனர் என்பவை அதில் வெவ்வேறு அவதாரங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் பெயர்கள். அவற்றில் தூமகேது என்ற அவதாரத்தைப் பற்றிய கதையும் இருக்கிறது. அதைப் பார்த்தபின்தான் இந்தப் பெயர் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்று புரிந்தது.

கதை என்னவென்றால்….. ரொம்ப நாளுக்கு முந்திப் பார்த்தது, நினைவு இருக்கிறமட்டில் சுருக்கமாகச் சொல்கிறேன். [சிரித்து] சுருக்கமாகச் சொன்னால்தான் ரொம்பத் தப்புப் பண்ணாமல் தப்பிக்க முடியும்.

தூமாஸுரன் என்று ஒருத்தன். பாகவதத்தில் வரும் வ்ருத்ராஸுரன், மஹாபலி மாதிரி சில அஸுரர்களிடம் மிக உத்தமமான குணங்களும் பக்தியும் இருக்கும். ஆனாலும் அஸுரப் போக்கும் தலை தூக்கிக் கொண்டுதானிருக்கும். அப்படி ஒருத்தன் இந்த தூமாஸுரன். அப்போது ஒரு ராஜா இருந்தான். கர்ப்பிணியாயிருந்த அவனுடைய பத்னிக்கு மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் புத்ரன் பிறந்து அந்தப் பிள்ளையினாலேயே தனக்கு மரணம் என்று தூமாஸுரனுக்கு தெரிந்தது. உடனே அவன் தன் ஸேநாதிபதியை அழைத்து நல்ல ராவேளையில் அந்த ராஜாவின் சயனக்ருஹத்திற்குப் போய் ராஜ பத்னியைத் தீர்த்துக்கட்டிவிட்டு வரும்படி சொல்லியனுப்பினான். ஆனால், அங்கே போன ஸேநாதிபதிக்கு ஒரு உத்தம ஸ்த்ரீயை, அதுவும் கர்ப்பிணியாக இருப்பவளைக் கொல்ல மனஸ் வரவில்லை. அந்த தம்பதியைப் பிரிக்கவும் மனஸ் வரவில்லை. ஆனபடியால் அவன் ஸதிபதிகளாகவே அவர்களைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டுபோய் ஒரு காட்டு மத்தியில் போட்டுவிட்டான். அங்கே விநாயக பக்தர்களான அந்த இரண்டு பேரும் ஸதா அவரை த்யானித்துக்கொண்டு அவரால்தான் கஷ்டங்கள் தீர்ந்து நல்லபடியாக ப்ரஸவமாகி ராஜ்யத்திற்குத் திரும்ப வேண்டும் என்று ப்ரார்த்தித்து வந்தார்கள்.

அவர்கள் வனாந்தரத்தில் தலைமறைவாக இருக்கிறார்களென்று தூமாஸுரனுக்குத் தெரிந்தது. உடனே அவனே அஸ்த்ரபாணியாக அங்கே போனான். அவன் ஸ்பெஷலைஸ் பண்ணியிருந்த அஸ்த்ரம் என்னவென்றால், அவன் பேர் என்ன? தூமாஸுரன்தானே? தூமம் என்றால் புகைதானே? அவன் ஒரே விஷப்புகையாகக் கக்குகிற அஸ்திரத்தைப் போடும் வித்தையிலேயே கைத்தேர்ந்தவனாக இருந்தான்.

இந்த நாளிலும் கண்ணீர்ப்புகை என்கிற ஆபத்தில்லாத tear gas-லிருந்து gas shell என்ற ப்ராணாபத்தான விஷவாயுக் குண்டுகள் வரை இருக்கிறதல்லவா? இப்போது கெமிகல்ஸை வைத்துப் பண்ணுவதை அப்போது மந்த்ர சக்தியால் பண்ணியிருக்கிறார்கள்.

தூமாஸ்திரத்தால் கர்ப்பிணியை அவள் வயிற்றிலிருக்கும் சிசுவோடும், பக்கத்திலிருக்கும் பதியோடும் சேர்த்து ஹதம் பண்ணிவிட வேண்டுமென்கிற உத்தேசத்துடன் அவன் போய்ப் பார்த்தால், அப்போதே அவள் மடியில் குழந்தை இருந்தது! பிள்ளையார்தான் அந்த தம்பதியின் ஸதாகால ப்ரார்த்தனைக்கு இரங்கி வைஷ்ணவாம்சமான புத்ர ஸ்தானத்தில் தோன்றிவிட்டார்! இதனால் தாம் ஸர்வதேவ ஸ்வரூபி என்று காட்டிவிட்டார். சிவகுமாரராகப்பட்டவர் விஷ்ணு அம்சமாகப் பிறந்தார் என்பதில் சைவ வைஷ்ணவ ஸமரஸமும் உசத்தியாக வந்துவிடுகிறது. ‘சுக்லாம்பரதரம் விஷ்ணும்‘ என்று ஆரம்ப ச்லோகத்திலேயே வருகிறதே!

தூமாஸுரன் சரமாரியாக தூமாஸ்திரம் விட, சீறிக் கொண்டு பெரிய பெரிய மேகம் மாதிரிப் புகை அவர்களை நோக்கிப் பாய்ந்தது. அத்தனையையும் குழந்தைப் பிள்ளையார் தன்னுடைய சரீரத்துக்குள்ளேயே வாங்கிக் கொண்டு விட்டார். இனிமேல் அஸ்த்ரம் போட முடியாதென்று அஸுரன் களைத்துப் போய் நின்று விட்டான். அப்போது, அவனை ஸம்ஹாரம் பண்ணுவதற்கு பிள்ளையார் தீர்மானித்தார். ‘அதற்காக நாம் புதுஸாக அஸ்த்ரம் எதுவும் போடவேண்டாம். அவனே போட்டு நாம் உள்ளே வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் விஷப்புகையாலேயே கார்யத்தை முடித்து விடலாம்’ என்று நினைத்தார். உடனே உள்ளே ரொப்பிக் கொண்டிருந்த அத்தனை தூமத்தையும் ‘குபுக் குபுக்’ என்று வாயால் கக்கினார். அது போய் துமாஸுரனைத் தாக்கி அழித்துவிட்டது.

தூமத்தை அஸ்த்ரமாகக் கொண்டே வெற்றிக்கொடி நாட்டிக்கொண்ட பிள்ளையாருக்கு தூமகேது என்ற நாமா உண்டாயிற்று.

‘தூமம்’ என்பதை ‘தூம்ரம்’ என்றும் சொல்வதுண்டு. தூமகேதுவையும் தூம்ரகேது என்பதுண்டு.*

* ஒவ்வொரு யுகத்திலும் விக்நேச்வரர் ஒவ்வொரு பெயரும் உருவும் கொள்வதாகக் கணேச தந்த்ரங்கள் கூறுகையில் கலியுகத்திர்கான கணேசரின் திருநாமம் தூமகேது (தூம்ரகேது) எனத் தெரிவிக்கின்றன. பெயருக்கேற்ப அவர் புகை வண்ணராக இருப்பார். இரண்டே கரம் கொண்ட அவர் குதிரை வாஹனர் ஆவார்.

க்ருத யுகத்தில் நாமம் விநாயகர்; ஜ்யோதி வர்ணம்; பத்துக் கரம்; சிம்ம வாஹனம்.

த்ரேதா யுகத்தில் நாமம் மயூரேசர்; வெண்ணிறம்; ஆறு கரம்; மயில் வாஹனம்.

த்வாபர யுகத்தில் நாமம் கஜானனர்; சிவப்பு நிறம்; நான்கு கரம்; மூஷிக வாஹனம்.

ॐ श्री धूमकेतवे नमः ॥
ஓம்ʼ ஶ்ரீ தூ⁴மகேதவே நம​: ॥
OṂ ŚRĪ DHŪMAKETAVE NAMAḤ ॥

Sunday, 9 February 2020

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  8

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  8

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

8.  विनायकः   -   விநாயக​:   -   VINĀYAKAḤ   :-

विः पक्षिरूपो जीवौघः तन्नेतृत्वात् विनायकः ।

विगतो नायको यस्य विनायक इति श्रुतः ।

வி​: பக்ஷிரூபோ ஜீவௌக⁴​: தன்னேத்ருʼத்வாத் வினாயக​: | 

விக³தோ நாயகோ யஸ்ய வினாயக இதி ஶ்ருத​: |

பறவை போன்ற ஜீவர்களை வழிநடத்துபவர்.  

ஜீவனாகிய பறவைக்குச் சிற்றின்பமும், பேரின்பமும் இரு இறக்கைகள். இரு இன்பங்களையும் அளித்துப் பெற்றோர் போல் குரு போல் வழிநடத்துபவர். 

தனக்கு மேற்பட்டுத் தன்மீது ஆளுமை செய்கிற நாயகனற்றவர். அவருக்கு ஈடும் மிக்காரும் இல்லை. விநாயகர் என்ற பெயர் இந்திரனால் அளிக்கப்பட்டது.

விநாயகர்; இரட்டைப் பிள்ளையார் :  ( தெய்வத்தின் குரல் )


  


விக்நராஜோ விநாயக:  – ‘விக்நராஜர்’ என்ற பேருக்கு அடுத்தபடி ‘விநாயகர்’ என்று வருகிறது.

‘இரட்டைப் பிள்ளையார்’ எனறு பக்கத்தில் பக்கத்தில் இரண்டு பிள்ளையார்களைப் பிரதிஷ்டை செய்கிற வழக்கம் இருக்கிறது. அநேக ஊர்களில் ‘இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு’ என்று இருக்கும். அங்கே ஒரே ஆலயத்தில் ஒரே சந்நிதியில் இரண்டு பிள்ளையார்கள் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பபார்கள். தனிக் கோவிலாக இல்லாமல் ஈச்வரன் கோவிலிலேயே இரட்டைப் பிள்ளையார் இருப்பதுமுண்டு.

வேறே எந்த ஸ்வாமிக்கும் இப்படி ஜோடி மூர்த்திகள் வைத்து ஆராதிப்பதாகக் காணோம். பிள்ளையாருக்கு மட்டும் இருக்கிறது. ‘இரட்டைப் பிள்ளையார்’ என்றே சொல்வதாகவுமிருக்கிறது.

ஏனிப்படி என்றால் இவர் ஒருத்தர்தான் தாமே ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றும் இரண்டு காரியங்களைப் பண்ணுகிறார். ‘எதிரானது’ என்று சொல்லவில்லை; ‘எதிரானதாகத் தோன்றுகிற’ என்கிறேன். இதற்கு அப்புறம் வருகிறேன். ஆகக்கூடி இவர் செய்கிற இரண்டு கார்யங்களில் ஒன்று மற்றதற்கு நேர் எதிர் மாதிரித் தெரிகிறது. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியாகத்தான் இரட்டைப் பிள்ளையார் என்று வைத்திருப்பது.

அந்த இரண்டு மூர்த்திகளில்தான் ஒருத்தர் விக்நராஜர். மற்றவர் விநாயகர். அடுத்தடுத்து இரண்டு பிள்ளையார் மூர்த்திகள் உட்கார்ந்திருக்கிறாற்போலவே இந்தப் பேர்களும் [ஷோடச நாமாவளியில்] அடுத்தடுத்து வருகின்றன –  “விக்நராஜோ விநாயக:” 

அதென்ன இரண்டு கார்யமென்றால் – ஒன்று விக்னங்களை உண்டு பண்ணுவது; மற்றொன்று விக்னங்களைப் போக்குவது. நேர்மாறாகத் தோன்றும் இரண்டு கார்யங்கள்.

‘விக்நேச்வரர், விக்நராஜர் என்றெல்லாம் சொல்லும்போது விக்னத்தை உண்டாக்குவதில் ஈச்வரர், ராஜா என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஈச்வரனோ, ராஜாவோ எப்படிக் கெட்டதை அடக்கி அழிக்கும் சக்தியோடு இருக்கிறார்களோ அப்படி இவர் விக்னம் என்ற கெட்டதை அழிப்பதாலேயே இப்படி பேர் பெற்றிருக்கிறாரென்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னேன். பொதுவாக ‘விக்நேச்வரர்’ என்று அவரைச் சொல்லி வணங்கும்போது இந்த அர்த்தத்தில், பாவத்தில்தான் செய்ய வேண்டும்.

ஆனால் இரட்டைப் பிள்ளையார்களில் முதல்வராக அவர் விக்நராஜப் பேரில் இருக்கும்போது அவரை விக்னங்களை உண்டாக்குபவர் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும். வார்த்தையின் நேர் அர்த்தப்படி, [சிரித்து] திருட்டுப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரனாக இருப்பவனைத் ‘திருட்டு ராஜா’ என்கிற மாதிரி, விக்னங்களைப் பண்ணுவதில் மஹா கெட்டிக்காரர் என்பதாலேயே ‘விக்னராஜா’ என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் விக்னங்களைப் போக்கும் மூர்த்தியாக அவர் இருக்கும்போதுதான் அவருக்கு ‘விநாயகர்’ என்று பெயர்.

“விக்னங்களைப் பண்ணுகிறாரென்றால், பொல்லாத சாமியா?” என்றால், அதுதானில்லை.

அதனால்தான் விக்னங்களைப் பண்ணுவதையும் போக்குவதையும் நிஜமாகவே எதிரெதிர் என்று சொல்லாமல் ‘எதிர் மாதிரித் தோன்றுகிற’ என்று சொன்னது. இந்த இரண்டு கார்யங்களுக்கும் ஸாரம் அநுக்ரஹம் என்ற ஒன்றேதான். அதுவே இரண்டு ரூபத்தில், விக்னம் பண்ணுவது, விக்னத்தை அழிப்பது எனறு இரண்டாகியிருக்கிறது. அதனால் அடிப்படையில் எதிரெதிர் இல்லை.

“விக்னத்தைப் பண்ணுவதா அநுக்ரஹம்? அதெப்படி?” என்றால்,

எத்தனையோ தப்புக் கர்மா பண்ணி நாமெல்லாம் நிறைய மூட்டை கட்டிக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனாலும் இப்போது ஏதோ கொஞ்சம் ஈச்வராநுக்ரஹத்தினால் கொஞ்சம் பிள்ளையார் பக்தி உண்டாகி, அவரை வேண்டிக்கொண்டு – நாம் ஆரம்பிக்கிற கார்யங்கள் நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்பதற்காக அவரை வேண்டிக் கொண்டு – ஆரம்பிக்கிறோம்.

சரி, இப்படி வேண்டிக் கொண்டுவிட்டோமென்பதற்காக நம் பழம் பாக்கியை அவர் அப்படியே ‘ஓவர்லுக்’ பண்ணி நமக்குக் கார்ய ஸித்தியைத் தந்தால் ஸரியாயிருக்குமா? என்னதான் கருணையினால் விட்டுக் கொடுக்கலாமானாலும் ஒரேயடியாக பூர்வ கர்ம பலனை ‘கான்ஸல்’ பண்ணினால் ஸரியாயிருக்குமா? அப்புறம் பாப பீதி ஜனங்களுக்கு எப்படியிருக்கும்? தர்ம நியாயம் என்பதே ஒன்றுமில்லை என்றுதானே ஆகிவிடும்? “நாம என்ன வேணா பண்ணலாம், பண்ணியிருக்கலாம். இப்போ கொஞ்சம் பிள்ளையார் பூஜை பண்ணிட்டா போறும். அத்தனை தப்பும் அடிபட்டுப் போயிடும்” என்றல்லவா ஆகிவிடும்?

இப்படி ஆக விடாமலிருப்பதற்காகத்தான் அவர் விக்ந ராஜாவாக இருந்து விக்னங்களை உண்டு பண்ணுவது. ‘உண்டு பண்ணுவது’ என்றால் அவராகவே நம்மைக் கஷ்டப்படுத்துவதற்காக அநியாயமாக உண்டு பண்ணுவதில்லை. நாம் பூர்வத்தில் பண்ணியிருப்பதன் விளைவாக நமக்குக் கார்ய ஸித்தி ஏற்படுவதற்கில்லை என்று கர்ம நியாயக் கணக்குப்படியே இருக்கும். ஆகவே அவர் பண்ணுவதாகத் தோன்றும் விக்னத்திற்கு மூலம் பூர்வத்தில் நாம் பண்ணின தப்புதான். அது எப்படியும் நமக்கு அநேக கார்யங்கள் வெற்றிகரமாக நிறைவேறாமல் இடைஞ்சல் பண்ணத்தான் பண்ணும். அது தானாகப் பண்ணினால் எத்தனையோ உத்பாதமாகவே இருக்கும். இடைஞ்சலால் கார்யம் அடியோடு கெட்டுத் தோற்றே போய் நிற்போம். அல்லது அனேக சின்னச் சின்ன விஷயங்களில் வெற்றி உண்டாக விட்டு [இடமளித்து] அப்புறம் சேர்த்து வைத்து அத்தனையும் நொறுக்கி மண்டையில் ஒரே போடாகப் போட்டுவிடும் – படு தோல்வியை! இப்படி நேராமல், வெள்ளம் அப்படியே நம்மை அடித்துக் கொண்டு போய்விடாமல், வருமுன் காப்பாக அணைபோட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக ஜலத்தை விடுகிறாற்போலவே, விக்நராஜா நம்முடைய கர்ம சேஷத்தால் உண்டாக வேண்டிய இடைஞ்சலை நாம் தாங்கிக் கொள்கிற அளவில் ‘சானலைஸ்’ பண்ணி விடுகிறார். ‘சானலைஸ்’ பண்ணுவது மட்டுமில்லாமல் ஜலத்தையே ஒரளவுக்கு வற்றவும் பண்ணுகிறார்! என்றைக்கோ பெரிசாகப் பழிவாங்க இருக்கற பெரிய விக்னத்தை இப்போதே தன்னுடைய தும்பிச்சுக்கையால் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து, அதைக் கருணையால் கொஞ்சம் சிறுக்க வைத்து, பாக்கியையும் ஒரே வீச்சில் காட்டி விடாமல், சின்னச் சின்னதாகப் பண்ணி நாம் தாங்கிக் கொள்ளும்படிப் பண்ணுகிறார். பழைய கர்மா எவ்வளவு சீக்கிரம் தீர்கிறதோ அவ்வளவுக்கு நல்லதுதானே? அது தீர்ந்தால்தானே விமோசனத்திற்கு வழி திறக்கும்? தள்ளிப் போகப் போக நாம் இன்னமும் புதிசாக எத்தனை மூட்டை சேர்த்துக்கொண்டு விடுவோமோ? இப்படி ஆகாமல் விக்னத்தை முன்னதாகவே இழுத்துக் கொண்டு வந்து, நமக்குக் கொடுமையானதாகத் தெரிந்தாலும் வாஸ்தவத்தில் பரம நல்லதே பண்ணுபவர்தான் விக்நராஜா.

விக்னத்தை இழுத்துக்கொண்டு வருபவர் விக்நராஜா. அப்புறம் அதைச் சிறிசு பண்ணி, நாம் கொஞ்சம் அநுபவித்த உடனேயே, போதுமென்று அப்படியே போக்கி விடுபவர் விநாயகர். வியாதியைக் கிளறிவிட்டு ஸ்வஸ்தப்படுத்துவதுண்டல்லவா? அப்படி, கிளறிவிடுபவர்தான் வித்நராஜர். ஸ்வஸ்தப்படுத்துகிறவர் விநாயகர்.

‘விக்ந கர்த்தா’ [இடையூறு செய்பவர்], ‘விக்ந ஹர்த்தா’ [இடையூறை அழிப்பவர்] என்று இரண்டு பேரும் அவருடைய அஷ்டோத்தரத்தில் அடுத்தடுத்து வருவதில், விக்நராஜா முன்னவர், விநாயகர் பின்னவர்.

விநாயகர் என்றால் விசிஷ்டமான, அதாவது விசேஷம் பொருந்திய நாயகர் – சிறப்புப் படைத்த தலைவர். எல்லா ஸ்வாமிகளுமே நாயகர்கள்தான். அவர்கள் வேறே என்வோ ஒரு அஸுர, ராக்ஷஸ சத்ரு செய்ததற்கு எதிராகச் செய்து, அந்தக் கொடுமையை மாற்றி நல்லது பண்ணியிருப்பார்கள். அப்படிப் பண்ணியதால் ‘நல்லதில் முன்னின்று அழைத்துப் போகிறவர்’ என்ற அர்த்தம் கொண்ட ‘நாயகர்’களாக அவர்கள் ஆகியிருக்கிறார்கள். இவர் எப்படி அவர்கள் எல்லோரையும் விட விசேஷம் பொருந்திய ‘வி’நாயகரானார் என்றால் – இவர் வேறு அஸுரர்கள் பண்ணிய கொடுமைகளைப் போக்குவது மாத்திரமில்லாமல், தாமே விக்நராஜாவாக இருந்து உண்டாக்கிய இடைஞ்சல்களையும் போக்குகிறார்! தம்மைத்தாமே விஞ்சிய நாயகராக இருப்பதால்தான் ‘விநாயகர்’ என்ற தனிப் பெருமை பெறுகிறார்.

‘விக்நராஜர்’ என்பது போலவே ‘விக்நவிநாயகர்’ என்றும் சொல்வதுண்டு; விக்ந விநாயக பாத நமஸ்தே.1

விக்நத்தை உண்டு பண்ணுபவருக்கும் விசிஷ்டமான நாயகர் என்று வைத்துக் கொள்ளலாம்.

விக்ந விநாயகர் விக்ந விநாசகரும்தான்! அதாவது விக்னங்களை அடியோடு நாசம் செய்கிறவர். ஸம்ஸ்கிருத ‘ச’ தமிழில் ‘ய’ ஆகிவிடும். ஆகாசம் – ஆகாயம் மாதிரி. இங்கேயோ ஸம்ஸ்கிருதத்திலேயே விக்ந விநாயகர் விக்ந விநாசகராகவும் இருக்கிறார்!2

1 “மூஷிக வாஹன” சுலோகம். ‘ஆனைமுகரும் அகத்தியரும்‘ என்ற உரையில் பார்க்க.

2 விக்னர் என்றாரே விக்னராஜர் என்றும், அவரையும் விநாயகரையும் இரட்டைப் பிள்ளையாராக ‘விக்ன-விநாயகர்கள்’என்று சேர்த்துச் சொல்வதுண்டு என்றும் தெரிகிறது. “இரு கடவுளரான விக்ந-விநாயகர்கள் பிரீதியடையட்டும்” (“பகவந்தௌ விக்ந-விநாயகௌ ப்ரீயாதாம்”) என்று புண்யாஹவாசனச் சடங்கில் வேண்டும் வழக்கமுள்ளதாகவும் தெரிகிறது.

பிரஸித்தமான பெயர் : 

ஸுமுகச் – சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: |


லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: || 

‘விநாயகர்’ என்பது அடுத்த பேர். பிள்ளையாரின் பிரஸித்த நாமாக்களில் ஒன்று விநாயகர். வட தேசத்தைவிட தக்ஷிணத்தில் அதிப்ரஸித்தமான நாமா. ‘பிள்ளையார் சதுர்த்தி’ என்று பேச்சில் சொல்வதையே ‘விநாயக சதுர்த்தி’ எனறுதான் நாம் formal- ஆகக் குறிப்பிடுகிறோம். வடக்கே ‘கணேஷ் சதுர்த்தி’ என்பார்கள். ஸித்தி விநாயகர், வரஸித்தி விநாயகர், ச்வேத விநாயகர் என்றெல்லாம் பெரும்பாலும் விநாயக சப்தம் சேர்த்தே நம் தக்ஷிண தேசக் கோவில்களில் அவருக்குப் பெயர் சூட்டியிருக்கும். ‘விநாயகர் அகவல்’ என்றே ஒளவையின் பிரஸித்த ஸ்தோத்திரத்திற்குப் பெயர் இருக்கிறது.

வி-நாயகர். நாயகர் என்றால் தலைவர். பல பேருக்கு மேலே அவர்களைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர்.

எல்லா ஜாதியினருக்கும் உயர்வு மனப்பான்மை :  

  


நாயகர் என்று ஒரு ஜாதிப் பெயர் இருக்கிறது.

ஜாதி முறையினால் தாழ்த்தப்பட்டவர்களும், அவர்களைத் தாழ்த்தி வைப்பவர்களும் வேரூன்றி விட்டார்கள் என்ற அபிப்ராயம் இப்போது இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதில் சலுகைகள், ஆதாயங்கள் கிடைக்கின்றன என்பதால் எல்லாரும் அப்படிச் சொல்லிக் கொள்வதாகவும் இருக்கிறது. ஆனால் முன்னாளில் இப்படிக் கொள்வதாகவும் இருக்கிறது! ஆனால் முன்னாளில் இப்படி இல்லை. அந்தந்த ஜாதியாரும் தாங்கள் ஜன ஸமுதாயத்தில் உயர்ந்த இடம் பெற்றிருப்பதாகவே கருதினார்கள். ஜாதிப் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். நாலாம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு ஜாதிக்காரர்களுக்கு முதலியார் என்ற பேர் இருக்கிறது. ஸமூஹத்தில் முதலிடம் பெற்றவர்கள்தான் முதலியார். அதே மாதிரி வடக்கே ‘அகர்வால்’ என்கிறார்கள். அக்ர ஸ்தானம் என்றால் முதல் இடம். அப்படி ஜன ஸமுதாயத்தில் அக்ரமாக இருப்பவர் அகர்வால். பிள்ளை என்றாலும் மதிப்புக்கு உரியவர் என்று அர்த்தம். ரொம்ப உயர்ஜாதித் தேங்காயைப் பிள்ளைத் தேங்காய் என்பது வழக்கம். ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையைப் பார்த்தால் ப்ராம்மணர்களும் முதலி என்றும், பிள்ளை என்றும் சொல்லப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். சைவ ஸம்ப்ரதாயத்தைப் பார்த்தாலும்-ஸம்பந்தர் வேத ப்ராம்மணர், ஸுந்தரர் ஆதிசைவர், அப்பர் வேளாளர்; இந்த மூன்று பேரையும் சேர்ந்து ‘மூவர் முதலிகள்’ என்று சொல்வது மரபு. ‘ராஜ’ என்ற வார்த்தைதான் ராய, ராவ் என்றெல்லாம் ஆயிற்று. தமிழ் தேசத்திலிருக்கிற நாம் ‘ராவ்’ என்றால் மாத்வ பிராம்மணரைத்தான் நினைக்கிறோம். ஆனால் மாத்வர்கள் அதிகமுள்ள கன்னட தேசத்திலும், அதே போல ஆந்திராவிலுள்ள நாலாம் வர்ணத்தவர்களும் ‘ராவ்’ போட்டுக் கொள்கிறார்கள். அதுவே வடக்கே ராய், ரே என்றெல்லாம் இருக்கிறது. வைச்யர்களைச் செட்டியார் என்கிறோம். ‘ச்ரேஷ்டி’ என்பதுதான் செட்டி ஆயிற்று. ச்ரேஷ்டமானவர்கள் – உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் – என்று அர்த்தம். ச்ரேஷ்டிதான் வடக்கே ‘ஸேட்’ ஆயிற்று. கன்னட தேசத்தில் அதையே ஷெட்டி என்பார்கள். ‘அவன் உசந்த ஜாதி, இவன் தாழ்ந்த ஜாதி’ என்ற அபிப்ராயங்களும் போட்டிச் சண்டைகளும் இல்லாமல், யாரானாலும் பாரம்பர்யமாக ஏற்பட்ட தொழிலைச் செய்து ஒரு ஜன ஸமுதாயத்திற்கு வேண்டிய எல்லாவிதமான பணிகளையும் போட்டி பொறாமை இல்லாமல் பண்ணிக் கொடுத்ததோடு அவரவரும் முதல் ஜாதிதான், உயர் ஜாதிதான் என்ற pride-ஓடு நம் ஜனங்கள் இருந்து வந்ததை இந்தப் பெயர்கள் காட்டுகின்றன. பல வகுப்புக்காரர்களுக்கிடையில் இருந்து வந்த ஸெளஜன்யமும் இதில் தெரிகிறது. எப்படியென்றால் ஒரு ஜாதிக்காரர்கள் தங்களுக்கு உயர்வாகப் பேர் வைத்துக் கொண்டதை மற்றவர்களும் ஆக்ஷேபிக்காமல், அவர்களுக்கு அந்த pride இருக்கட்டும் என்றே எடுத்துக் கொண்டு, தாங்களும் அவர்களை அப்படித்தான் கூப்பிட்டிருக்கிறார்கள்.

தலைவர் என்ற அர்த்தமுள்ள ‘நாயக’ பதம் எல்லா வர்ணத்தினருக்கும் உரிய பெயராக இருந்து இந்த ஸமத்வத்தை – தற்காலத்தில் சொல்லும் காரிய ஸமத்வத்தை அல்ல; அதைவிட அவசியமான மனோபாவ ஸமத்வத்தை – நன்றாகக் காட்டுகிறது மஹாராஷ்ட்ராவில் ‘நாயக்’ என்று இருப்பவர்களில் பிராம்மணர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூர் நாயக வம்சம், மதுரை நாயக வம்சம் என்கிற இடத்தில் நாயகர்கள் ராஜகுலத்தவர்கள். கன்னட தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த நாயக்கர்களும், ஆந்திரத்தில் இந்த ‘நாயக’ தாதுவின் அடியாகவே நாயுடு என்று சொல்லப் படுபவர்களும் நாலாம் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்.

‘நாயக’ என்காமல் ‘நாய’ என்றே சொன்னாலும் போதும். ‘பாலன்’ என்பதையே ‘பாலகன்’ என்றும் சொல்கிற மாதிரி அநேக வார்த்தைகளுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ‘க’ சேர்ப்பதுண்டு. நாயன் என்றாலும் தலைவர்தான். மலையாளத்தில் நாயர் என்கிறார்கள். அவர்களும் நான்காம் வர்ணம்தான். தமிழ் தேசத்தில் உத்தமமான அடியார்களை ‘நாயனார்’ என்கிறோம். ஒருத்தர் நாயனார், பலபேர் நாயன்மார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் இல்லாத ஜாதியே இல்லை! அறுபத்து மூவரையும் பற்றி ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடிய திருவாரூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கே நயினார் என்றுதான் பேர்.

‘வி’ எனும் அடை : 

  


விநாயகர் என்ற பெயரில் நாயகருக்கு முந்தி ‘வி’ இருக்கிறது. சிவகணத் தலைவரான பிள்ளையார் ‘நாயகர்’ என்ற பேருக்கு ரொம்பவும் பொருத்தமுடையவர் என்று தெரிகிறது. அதற்கு முந்தி ‘வி’ போட்டால் என்ன அர்த்தம்?

ஸம்ஸ்கிருதத்தில் வார்த்தைகளுக்கு முன்னே சேர்க்கிற prefix (முன்னடை) களில் ‘வி’ என்பது ஒன்று. இந்த ‘வி’ யின் விசேஷம் என்னவென்றால் அது பின்னாடி என்ன வார்த்தை சேருகிறதோ அதன் அர்த்தத்தை இரண்டு விதங்களில் மாற்றக்கூடும். ஒன்றுக்கொன்று முழுக்க வித்தியாஸமான இரண்டு விதங்கள்! ‘மலம்’ என்றால் அழுக்கு. ‘வி’ சேர்த்து ‘விமலம்’ என்றால் சுத்தம். இந்த இடத்தில் ‘வி’ என்பது பின்னே வரும் வார்த்தைக்கு ‘ஆப்போஸிட் மீனிங்’ உண்டாக்கும்படிச் செய்கிறதென்று தெரிகிறது. ஆனால் – ‘சுத்த’த்துக்கு ‘வி’ போட்டு ‘விசுத்தம்’ என்று வார்த்தை இருக்கிறது. அதற்கு சுத்தமாக இல்லாதது என்று ஆப்போஸிட் அர்த்தம் பண்ணிக் கொண்டால் தப்பு. இந்த இடத்தில் ‘வி’ என்பது பின்னே வரும் வார்த்தையை எதிர்ப்பதமாகப் பண்ணாது; அதற்கு மேலும் வலிவும் உயர்வுமே கொடுக்கும். ‘விசுத்தம்’ என்றால் பரம சுத்தமானது எனறு அர்த்தம்! விபரீதம் என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். ‘பரீதம்’ என்றால் முறையாகச் சுற்றிக் கொண்டிருப்பது. ‘விபரீதம்’ முறைகெட்டுத் தாறுமாக இருப்பது. இங்கே ‘வி’ எதிர்ப்பதமாக்கிவிடுகிறது. ‘ஜயம்’ – வெற்றி என்றால் ‘விஜயம்’ அதற்கு எதிர்ப்பதமான தோல்வியா என்றால், அப்படி இல்லையல்லவா? விசேஷமான, அதாவது சிறப்புப் பொருந்திய வெற்றியே விஜயம்.

விசேஷம் என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்ளலாம். சேஷம்-விசேஷம். ‘சேஷம்’ என்றால் மீந்துபோனது என்றே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதுவும் ஸரிதான். அதைவிட சிறந்த உள்ளர்த்தமும் உண்டு. மற்றதோடு சேராமல் தன்னுடைய உயர்வினால் அவற்றிடமிருந்து பிரிந்து நிற்பதும் ‘சேஷம்’ தான். ‘சிஷ்டர்’ என்று சான்றோர்களைச் சொல்கிறோமல்லவா? ‘சேஷ’த்திலிருந்துதான் ‘சிஷ்ட’ பதம் வந்தது. ஸமூஹத்தில் சராசரி ஜனங்களில் ஒருவராக இல்லாமல் பிரிந்து உயர்ந்து, [சிரித்து] distinct- ஆக இருந்து distinction பெற்றவர்களே சிஷ்டர்கள். சேஷம் என்பதற்கு ‘தன்னுடைய சிறப்பால் தனிப்பட்டு நிற்பது’ என்ற இந்த அர்த்தத்தைவிட ‘மீந்து போனது’ என்ற அர்த்தமே வியாபகமாக ஆனதால்தான், அந்தச் சிறப்பை வலியுறுத்திக் காட்டுவதற்காக ‘வி’ சேர்த்து விசேஷம் என்பது.

இருபொருளிலும் வி-நாயகர்! : 

‘வி’ ப்ளஸ் ‘நாயகர்’ என்னும்போது ‘வி’ என்பது நாயகருக்கு எதிர் அர்த்தம் கொடுக்குமா?அல்லது அதை இன்னும் சிறப்புத் தந்து உசத்தி வைக்குமா?

இரண்டுந்தான்!

அதெப்படி என்று ஆச்சர்யமாயிருக்கலாம், சொல்கிறேன்.

‘தவன்’ என்றால் பதி. ‘மாதவன்’ என்றால் மா என்கிற மஹாலக்ஷ்மியின் பதி. ‘விதவா’ என்றால் பதி இல்லாதவள். அதே போல ‘விநாயகர்’ என்றால் ‘தலைவன் இல்லாதவர்’. எல்லோருக்கும் அவர்தான் தலைவர். அவருக்குமேல் தலைவர் இல்லை. அதனால் தலைவன் இல்லாதவர் வி-நாயகர்.

ஒரு பக்தர் பகவானிடம் போனாராம். “நான்தான் அநாதன் [அநாதை] என்றால் நீயும் அப்படியே இருக்கியே!” என்றாராம். “என்னையா அநாதன் என்கிறாய்?” என்று ஸ்வாமி கேட்டாராம். “ஆமாம். என்னைக் காப்பாற்ற ஒரு நாதன் இல்லாமல் நான் அநாதனாக இருக்கிறேன் என்றால் நீயும் உனக்கு மேல் நாதன் இல்லாததால் அ-நாதனாகத்தானே இருக்கே?” என்றாராம் அந்த பக்தர்.

தம்மிலும் மேலான ஒரு தலைவர் இல்லாதவர் விநாயகர்.

இங்கே ‘வி’ எதிர் அர்த்தம் கொடுக்கிறது.

இதற்கு நேர் மாறாக அதே ‘வி’ சிறப்புக் குறியாகவும் இருக்கிறதல்லவா? அந்த விதத்திலும் விக்நேச்வரர் விநாயகராக இருக்கிறார். அவர் ஸாதாரணமான நாயகர் (தலைவர்) அல்ல. ரொம்பவும் சிறப்புப் பொருந்திய, விசேஷமான விசிஷ்டமான நாயகர் அதனால் விநாயகர்.

தமக்கு மேல் நாயகன் இல்லாததாலும் வி-நாயகர். தாமே மிக மேலான நாயகராக இருப்பதாலும் வி-நாயகர். இரண்டு அர்த்தத்திலும் பேர்ப் பொருத்தமுள்ளவராக இருக்கிறார்.

‘அமர’த்தில் பிள்ளையார்ப் பெயர்கள் : 

அமர[கோச]த்தில் விக்நேச்வரரின் பெயர்களைச் சொல்லும்போது ‘விநாயக’ என்றுதான் ஆரம்பித்திருக்கிறது. [மனத்திற்குள் அந்தப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, விரல் விட்டு எண்ணியபடி] நம்முடைய சாஸ்திரங்களில் பதினாறு நாமாக்களை முக்யமாகச் சொல்லியிருக்கிறதென்றால், ஜைனனான அமரஸிம்ஹன் எழுதிய அந்தக் கோசத்தில் இதில் பேர் பாதி – எட்டுப் பெயர்கள் – சொல்லியிருக்கிறது.

விநாயகோ, விக்நராஜ, த்வைமாதுர, கணாதிபா: | 


அப்-யேகதந்த, ஹேரம்ப, லம்போதர, கஜாநநா: || 

இதிலே விநாயக, விக்னராஜ, ஏகதந்த, ஹேரம்ப, லம்போதர, கஜானன என்ற ஆறு பெயர்கள் நம்முடைய ஷோடசநாமாவிலும் இருக்கின்றன. ‘கணாதிப’ என்ற பெயர் ‘கணாத்யக்ஷ’ என்பதாக ஷோடச நாமாவில் இருக்கிறது. இதில் இல்லாமல் ‘அமர’த்தில் இருக்கும் ஒரே பெயர் ‘த்வைமாதுர’ என்பது. அப்படியென்றால் ‘இரண்டு தாயார்களை உடையவர்’. அம்பாள் ஒரு தாயார். கங்கை இன்னொரு தாயார். கங்கையிலுள்ள சரவணப் பொய்கையைச் சேர்ந்தே சிவநேத்ரத்தின் அக்னிப் பொறி ஸுப்ரஹ்மண்ய ஸ்வரூபமாக உத்பவித்ததால் ஸுப்ரஹ்மண்யருக்கு கங்கை நேர் தாயார் மாதிரி. அதனால்தான் அவரை ‘காங்கேயன்’ என்பது. பிள்ளையாருக்கு அத்தனை நேர் ஸம்பந்தமில்லாவிட்டாலும், அவருடைய தகப்பனாருடைய சிரஸில் கங்கை பத்னி ஸ்தானத்திலிருப்பதால், ஒளபசாரிகமாக [உபசாரமாக] அவளையும் ஒரு தாயாராகச் சொல்வது.

விநாயக நாமா ‘அமர’த்தில் பிள்ளையாரின் முதல் பெயராயிருக்கிறதென்று சொல்ல வந்தேன். ஒரு நிகண்டுவில் [அகராதியில்] ஒரு தெய்வத்தைப் பற்றிய பெயர் வரிசையில் முதலாக வருவதென்றால் அது முக்கியத்வம் வாய்ந்த நாமா என்று அர்த்தம்.

ॐ श्री विनायकाय नमः॥


ஓம்ʼ ஶ்ரீ விநாயகாய நம​:॥


OṂ ŚRĪ VINĀYAKĀYA NAMAḤ॥


Sunday, 2 February 2020

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 7

16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA  -  7

॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥

||  ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥

7.  विघ्नराजः   -   விக்⁴னராஜ​:   -    VIGHNARĀJAḤ  :-

विघ्नैर्विराजते तेषां राजा विघ्नस्तु विघ्नकः ।
भक्ताधीनश्च राजा च विघ्नराजस्ततो मतः ॥
विघ्नः कालात्मकस्तस्य विघ्नराजो नियामकः ।

விக்⁴னைர்விராஜதே தேஷாம்ʼ ராஜா விக்⁴னஸ்து விக்⁴னக​: |
ப⁴க்தாதீ⁴னஶ்ச ராஜா ச விக்⁴னராஜஸ்ததோ மத​: ||
விக்⁴ன​: காலாத்மகஸ்தஸ்ய விக்⁴னராஜோ நியாமக​: |

இடையூறு விளைவிப்பதால் சிறப்பு பெற்றவர்.

விக்கிநர்கள் என்று தடைவிளைவிக்கிற கணங்களின் எல்லாத் தடைகளையும்  தமது வழிபாட்டுச் சிறப்பால் அகற்றித் தன்னிடம் குன்றாத பக்தியுள்ளவர்களுக்குத் தலைமை தாங்குபவர். அவர்களது மனத்தை ஈர்ப்பவர். காலமும் தேசமும் பொதுவாக இடையூறு விளைவிப்பவை. அவற்றைக் கட்டுப்படுத்துபவர். மமதாஸுரனை அடக்குவதற்காக எடுத்த தோற்றமிது.

விக்ந ராஜர் : ( தெய்வத்தின் குரல் )
 
அடுத்த பேர் ‘விக்நராஜர்’. அதாவது விக்நேச்வரர். விக்ந ஈச்வரரேதான் விக்நராஜா. ஈச்வரன் ராஜாவுக்கு ரொம்ப மேலே என்று தோன்றும். ஆனாலும் ‘ரூட் மீனிங்’ பார்த்தால் ஈச்வரனும் ராஜா செய்கிறதைச் செய்பவன்தான். ‘ஈச்’ என்கிற தாதுவுக்கு ஆட்சி பண்ணுவது என்றே அர்த்தம். ஆட்சி பண்ணுகிறவன் ஈச்வரன். ஸ்வாமி பெயர்களில் ராஜா, ஈச்வரன், நாதன் என்கிற வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில்தான் வரும். நடராஜா என்ற பேரையே நடேசன், நடேச்வரன் என்றும் சொல்கிறோம். ரங்கராஜா என்ற பேரையே ரங்கநாதன், ரங்கேசன் என்றும் சொல்கிறோம். ‘திருநாவுக்கு அரசர்’ என்பதையே ‘வாக்-ஈசர்’ என்கிறோம். அப்படி விக்ந ராஜா என்றாலும் விக்நேச்வரர் என்றாலும் ஒன்றுதான்.

பிள்ளையாருக்கு இருக்கப்பட்ட ப்ரத்யேகமான அதிகாரத்தைக் காட்டுவது விக்நராஜா என்ற பேர்தான். அவர் ப்ரத்யேகமாக எதற்காக ஏற்பட்ட ஸ்வாமி? ப்ரம்மா ஸ்ருஷ்டிக்கு; விஷ்ணு ஸ்திதிக்கு: ருத்ரன் லயத்துக்கு; துர்க்கை வெற்றிக்கு; லக்ஷ்மி செல்வத்திற்கு; ஸரஸ்வதி படிப்புக்கு; தன்வந்தரி வியாதி நிவாரணத்திற்கு என்றெல்லாம் பரமேச்வரனின் ப்ரபஞ்ச ஸர்க்கார்களில் ஒவ்வொருத்தருக்கு ஒரு ஆபீஸ் இருக்கிற மாதிரி, பிள்ளையாருடைய ஆபீஸ் என்ன? விக்னங்களைப் போக்குவதுதான். எடுத்த கார்யம் எதுவானாலும் அதில் விக்னம் – இடையூறு – உண்டாகாமலிருக்கவே எடுத்த எடுப்பில் அவரைத் தொழுகிறோம். விக்ன நீக்கத்திற்கென்றே ஏகப் பரம்பொருள் எடுத்துக்கொண்ட ரூபம்தான் விக்நேச்வரர் அல்லது விக்நராஜா.

விக்னத்துக்கு ஈச்வரர், ராஜா என்றால் விக்னங்களை உண்டாக்குவதில் தலைவர் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது. விக்னங்களை அடக்கி அழிப்பதால் அவர் விக்ன ராஜாவாக இருக்கிறார். ஒரு ராஜாவுக்கு முக்யமான வேலை சத்ருக்களை அடக்கி வைப்பது. அப்படி விக்னங்களை அடக்கி வைக்கும் விக்ன ராஜா அவர்.

ஆராய்ச்சிக்காரர்கள் ஆதியில் உக்ர தேவதையாகப் பிள்ளையார் இருந்தபோது அவர்தான் விக்னங்களை உண்டு பண்ணுபவராக இருந்தாரென்றும், அதனால்தான் விக்நேச்வரர் என்ற பேர் ஏற்பட்டதென்றும், அப்புறம் ஸெளம்ய மூர்த்தியாக அவரை வழிபட ஆரம்பித்த பிறகும் அந்தப் பெயர் நீடித்து விட்டதென்றும் சொல்கிறார்கள்.

விக்னம் செய்வதும் உயர் நோக்கத்திலேயே! :

அங்கங்கே அவர் விக்னமும் கொஞ்சம் உண்டாக்கித்தான் இருக்கிறார். பரமசிவனே திரிபுர ஸம்ஹாரத்திற்குப் புறப்படும்போது தம்மை நினைக்காமல் புறப்பட்டதால் அவருடைய ரதத்தின் அச்சு முறிந்து போகும்படிப் பண்ணியிருக்கிறார். ஆனால் இதெல்லாமும், பரமேச்வரனேயானாலும் அவருங்கூட லோக நிர்வாகத்தில் மற்ற தெய்வங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை மதித்து அதற்கு கீழ்படிந்து காட்டுவதுதான் முறை என்று புரிய வைப்பதற்குத்தானேயொழிய, கெடுதல் பண்ண வேண்டும் என்பதற்காகவே கெடுப்பதல்ல. சட்டத்திற்கு Obey பண்ணணும்; தனி ஆஸாமியைவிட – அவன் ஸாமியாகவே இருந்தால்கூட – சட்டந்தான் பெரிது என்று புரியச் செய்வதற்கும், அடங்கிப் போகும் அடக்க குணம் எவருக்கும் இருக்க வேண்டும் என்று பாடம் கற்பிப்பதற்காகவுந்தான் அவர் எப்போதாகிலும் விக்னம் உண்டாக்குவது. அதனால் அப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் முடிவிலே நாசமானதாகக் கதையே கிடையாது. ஏனென்றால் விக்னத்தை உண்டாக்கிய விக்நேச்வரரே தத்-த்வாரா [அதன் வழியாக] அதனால் பாதிக்கப் பட்டவருக்கு, ‘நாம் பராசக்தியின் ஆட்சியில் விக்ன நிவாரணத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகார புருஷரை மறந்து நாமே ஸாதித்துவிட முடியும் எனறு கார்யத்தில் இறங்கியதால்தான் இப்படி உபத்ரவம் உண்டாகியிருக்கிறது’ என்ற நல்லறிவையும் ஊட்டி, அவர் அடக்கத்தோடு ப்ரார்த்தனை பண்ணும்படிச் செய்து விடுவார். அப்புறம் ஒட்டிக்கு இரட்டியாக நிரம்ப அநுக்ரஹம் புரிந்து விடுவார். அவர்தான் விக்நராஜா.

“சொந்த” அநுபவம் :

புராண காலத்து த்ருஷ்டாந்தங்கள் இருக்கட்டும். சொந்தத்திலேயே எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது. இரண்டு சொல்கிறேன்.1

வேலூருக்குப் போயிருந்தோம். அங்கே சேண்பாக்கம் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த கணபதி மூர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு பிள்ளையார், இரட்டைப் பிள்ளையார் இல்லை; பதினோரு பிள்ளையார்கள்! அதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் அவை சில்பி அடித்துப் பண்ணியவையல்ல; பதினொன்றும் ஸ்வயம்பு மூர்த்திகள். ஏகாதச ருத்ரர்கள் உண்டு. இங்கே ஏகாதச விநாயகர்கள் இருக்கிறார்கள். பதினொன்றும் அமைந்திருக்கும் அமைப்பு ப்ரவணவாகாரமாக இருக்கும்.

நடுவாந்தரத்தில் பூமி மட்டத்தோடு மட்டமாக அந்த மூர்த்திகள் மூடிப் போயிருந்ததாம். விக்நேச்வரர் ப்ருத்வீ தத்வத்துக்கு மூர்த்தி என்று காட்டவோ என்னவோ, இப்படி மண்ணுக்குள் புதைந்து விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்! துக்கோஜி என்ற மஹாராஷ்டிர மந்திரி அந்த வழியாக ஒரு ராத்ரி வேளையில் ஸாரட்டில் போய்க் கொண்டிருந்தாராம். ‘டக்’கென்று அச்சு முறிந்து வண்டி நின்றுவிட்டது. இறங்கிப் பார்த்தால் பூமியில் ரத்தக் கறை இருந்தது. ஆனால் ஆள் யாரையும் காணோம். என்னவென்று புரியாமல் மனஸ் கலங்கி ராத்ரி பூராவும் அங்கேயே இருந்தாராம். விடிந்துதான் ஸாரட்டுக்குத் தச்சுப் பார்த்து ரிப்பேர் பண்ண முடியுமென்பதால் அப்படி தங்கும்படி ஆயிற்று. பிரயாணத்துக்கு இப்படி ப்ரதிபந்தகம் (விக்னம்) வந்ததே என்று வருத்தப்பட்டு, விக்நேச்வரரை ப்ரார்த்தித்துக்கொண்டு தூங்கிப் போய் விட்டார். விக்நேச்வரர் ஸ்வப்னத்தில் வந்தார். “அந்த இடத்தில் என்னுடைய ஏகாதச மூர்த்திகள் புதைந்து போயிருக்கின்றன. அதன்மேல் உன் வண்டிச்சக்கரம் இடித்ததினால்தான் ரத்தம் வந்துவிட்டது. அதைப் பற்றி வருத்தப்படாதே! மூடிக்கிடந்தது போதும், கோவில் கட்டிக் கொண்டு எல்லோரும் வரப்ரஸாதியாகப் பிரகாசிக்க வேண்டும் என்கிற ஸங்கல்பத்தில் நானேதான் பண்ணுவித்தது! அங்கே கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் பண்ணிப் பரம புண்ணியம் ஸம்பாதிச்சுக்கோ!” என்றார். துக்கோஜி எத்தனை வருத்தப்பட்டாரோ அதற்கு வட்டியும் முதலுமாக ஸந்தோஷப்பட்டுக் கொண்டு அப்படியே பண்ணினார்.

அந்தக் கோவில் இருக்கிற பக்கமாக நாங்கள் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தோம். அப்போது என்ன ஆச்சு என்றால் …

சின்ன ஸ்வாமிகள்2 யானை மேல் வந்து கொண்டிருந்தார். அந்த யானை இடத்தை விட்டு மேலே போகாமல் அங்கேயே சுழண்டு சுழண்டு வந்தது. யானைப்பாகனும் மற்றவர்களுக்கும் எத்தனை தாஜா பண்ணியும் கேட்காமல் ரொம்ப நேரம் இப்படி முரண்டு பண்ணிற்று. ‘மேலேயானால் ஸ்வாமிகள் இருக்கிறார். இது இப்படிப் பண்ணுகிறதே! மதம் பிடித்து விட்டதா என்ன? கூட்டமாக ஜனங்கள் சேர்ந்திருக்கிறார்களே!’ என்று எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அப்புறம்தான் சட்டென்று ஞாபகம் வந்தது. ‘பக்கத்திலே சேண்பாக்கம் பிள்ளையார் இருக்கிறார். அவருக்கு 108 சிதறுகாய் போடுவதாக வேண்டிக்கொண்டிருந்தோம். ஆனால் ஸமயத்தில் அது மறந்து போயிடுத்து’ என்று! மறந்து போச்சு என்றால் என்ன? அசிரத்தை என்றுதான் அர்த்தம்! பூர்ண கும்ப மரியாதை, மாலை மரியாதை, ஜனங்களுடைய நமஸ்காரம் எல்லாம் நிறைய வாங்கிக் கொள்வதற்காக பவனி வருவதற்கு மறந்து போகவில்லையே! பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டதைச் செய்ய மட்டும் மறந்து போகலாமா? ஜனங்களுக்கு ச்ரத்தா – பக்திகளை உண்டு பண்ண வேண்டிய பொறுப்புள்ளவர்களே இப்படிப் பண்ணலாமா என்று பாடம் கற்பிக்கிறதற்காகத்தான் ஸ்வாமி இப்படிப் பண்ணியிருக்கிறாரென்று புரிந்தது. எனக்கே ஏதாவது கஷ்டம் உண்டாக்கினால்கூட அவ்வளவு மனஸில் தைக்காது எனறுதான் சின்ன ஸ்வாமிகள் ஏறி வந்த தம்முடைய ஸ்வரூபமான யானை மூலமே இடக்குப் பண்ணியிருக்கிறார் என்று தோன்றிற்று. அவர் [சின்ன ஸ்வாமிகள்] ஒன்றும் பயப்படாமல் தைர்யமாகத்தான் இருந்தார். வேண்டிக் கொண்ட எனக்கும், அதைத் தெரிந்து கொண்டிருந்த கார்யஸ்தர்களுக்குந்தான் பயம், பாடம் எல்லாம்!

உடனே பிள்ளையாருக்குச் சிதறுகாய் போட்டது.

யானையும் சட்டென்று ஸரியாகித் தன் பாட்டுக்கு மேலே போக ஆரம்பித்தது.

இது ப்ரத்யக்ஷத்தில் பார்த்தது.

அப்புறம் ஒரு நாள் அந்தப் பிள்ளையாருக்குப் அபிஷேக ஆராதனைகளும் விசேஷமாகப் பண்ணினோம்.

சிதறுகாய், அபிஷேகம் ஆகியவற்றால் அவருக்கென்றும் நாம் புதுஸாக லாபம், ஸந்தோஷம் உண்டாக்கிவிடவில்லை. அவர் என்றைக்குமே ஆனந்த ஸ்வரூபி, நித்ய த்ருப்தர். இந்த வழிபாடுகள் தனக்குப் பண்ண வைத்து நமக்கேதான் ஆனந்தம், ஆத்ம லாபம் ஏற்படுத்துகிறார்.

நிர்விக்னமாக ஒரு கார்யம் நடந்தால் நல்லபடி நடந்தது என்று த்ருப்தி ஏற்படுகிறது. அது வாஸ்தவந்தான். ஆனாலும் அதைவிட த்ருப்தி, ஸந்தோஷம் எப்போது உண்டாகிறதென்றால், ஒரு விக்னம் உண்டாகி அப்புறம் அது நிவர்த்தியாகிக் கார்யம் நிறைவேறுகிறபோதுதான்! வெய்யில் இருந்தால்தான் நிழலருமை தெரியும். ஜரிகையை கறுப்புத் துணியில் ‘அட்டாச்’ பண்ணினால்தான் இன்னும் பளிச்சென்று தெரிகிறது. அப்படி விக்னத்தோடு சேர்ந்து கார்யபூர்த்தி வருகிறபோதே அதிலே கூடுதல் ஸந்துஷ்டி ஏற்படுகிறது.

கார்ய பூர்த்தி இருக்கட்டும். அதோடு, அதைவிட பக்தியானந்தம் உண்டாவது விசேஷம். ‘நாம் மறந்து போனாலும் அவ்வளவு பெரிய ஸ்வாமி – எதுவும் தேவை இல்லாதவர், நம் தேவைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பவர் – நம்முடைய அல்பப் பிரார்த்தனையை மறந்து போகாமல் நினைவு வைத்துக் கொண்டு, தெய்வ ஸஹாயமில்லாமல் நம்மால் முடியாது என்ற அறிவு அடக்கங்களையும் நமக்கு உண்டாக்கும் விதத்தில், இடைஞ்சல் என்ற பெயரில் பெரிய அநுக்ரஹமே பண்ணியிருக்கிறார்’ என்று பக்தியான ஒரு ஆனந்தம் உண்டாகிறது!

இடைஞ்சலைப் போக்குகிறவர், பின்னாடி போக்குவதற்காகவே எப்போதாவது இடைஞ்சலை உண்டு பண்ணுகிறவர் — அவர்தான் விக்நராஜா.

1 இவற்றிலொன்று “தெய்வத்தின் குரல்” நான்காம் பகுதியில், ‘பிற தெய்வங்களும் போற்றும் பிள்ளையார்’ என்ற உரையில் ‘ஸமீப கால ஸம்பவத்தில் புராண நிரூபணம்‘ என்ற பிரிவில் வெளியாகியுள்ளது.

2 1966 மே – ஜூனில்

3 ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

#1    ராமேச்வரத்தில் சங்கர மண்டபம் கட்டிக்கொண்டிருந்தோம்*. அதில் ப்ரதிஷ்டை செய்யவேண்டிய ஆசார்யாள் பிம்பத்தை லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. ஜெய்ப்பூரிலிருந்து ஸலவைக்கல் தருவித்து காஞ்சிபுரத்தில் ஆசார்யாளுக்கும், அவருடைய நாலு சிஷ்யர்களுக்கும் பெரிசு பெரிசாக பிம்பம் பண்ணி அங்கேயிருந்து ராமேச்வரத்துக்கு லாரியில் எடுத்துக் கொண்டு போயிற்று. அப்போது வழியில் ஸரியாக இந்த அச்சிறுப்பாக்கத்திலேயே லாரி Break down ஆகி நின்று விட்டது! அப்புறம் பிள்ளையாருக்கு நூற்றியெட்டுத் தேங்காய் உடைத்து விட்டே, லாரியைப் பழுதுபார்த்துக் கிளப்பிற்று. அதற்குப் பிற்பாடு எந்த விக்னமுமில்லாமல் கும்பாபிஷேகம், ப்ரதிஷ்டை எல்லாம் ஜாம்ஜாமென்று நடந்தது. இந்த விக்னமும்கூட அநுக்ரஹம் என்று தான் தோன்றிற்று. தாம் கைலாஸ சங்கரனேதான் என்று நமக்கு உறுதிப்படுத்துவதற்காகவே நம்முடைய சங்கரபகவவத் பாதாள் இங்கே தம்முடைய நவீனகால ரத அச்சான லாரி ஆக்ஸிலை முறித்துக்கொண்டிருக்கிறரென்று தோன்றிற்று.

* ஸ்ரீ மடத்தால் ராமேச்வரம் அக்னி தீர்த்தக்கரையில் நிர்மாணிக்கப்பட்டு, 1963 சங்கர ஜெயந்தியன்று கும்பாபிஷேகம் கொண்ட மண்டபம்.

ॐ श्री विघ्नराजाय नमः॥
ஓம்ʼ ஶ்ரீ விக்⁴நராஜாய நம​:॥
OṂ ŚRĪ VIGHNARĀJĀYA NAMAḤ॥