16 NAMES OF ŚRĪ VIGHNEŚVARA - 3
॥ श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम् ॥
|| ஶ்ரீ விக்⁴னேஶ்வர ஷோட³ஶநாம ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VIGHNEŚVARA ṢOḌAŚANĀMA STOTRAM ॥
3. कपिलः - கபில: - KAPILAḤ :-
{ कारुण्यदेहः करुणामूर्तित्वात् } कपिलो मुनिः ।
{ कर्णतो वाऽसि कथकः सम्प्रदायान् प्रवर्तयन् ॥ }
{ காருண்யதே³ஹ: கருணாமூர்தித்வாத் } கபிலோ முனி: |
{ கர்ணதோ வா(அ)ஸி கத²க: ஸம்ப்ரதா³யான் ப்ரவர்தயன் || }
கருஞ்சிவப்பு நிறமுள்ளவர். கபில முனிவராகத் தோன்றி ஸாங்க்ய தர்ஷனம் கண்டவர்.
கபிலர் : திருச்செங்கட்டான்குடி விநாயகர் : ( தெய்வத்தின் குரல் )
மூன்றாவது நாமா — ‘கபிலர்’. பழுப்புச் சிவப்பு நிறமாக இருப்பவரென்று அர்த்தம்.
பல ரூப பேதங்களில் வெவ்வேறு நிறங்களாக விக்நேச்வரர் இருக்கிறார். “சுக்லாம்பரதரம்” ச்லோகத்தில் ‘சசிவர்ணம்’ என்று நிலா மாதிரி வெளுப்பாகச் சொல்லியிருக்கிறது. கும்பகோணத்திற்கு கிட்டே திருவலஞ்சுழியிலும் திருத்துறைப்பூண்டிக்குக் கிட்டே இடும்பாவனத்திலும் வெள்ளைப் பிள்ளையார் — ச்வேத விநாயகர் — இருக்கிறார். ஒளவையார், ‘அகவ’லிலோ அவரை “நீலமேனி” என்று சொல்லியிருக்கிறாள். அவளே “வாக்குண்டாம்” பாட்டில் “துப்பார் திருமேனி” என்று பவள வர்ணமாகவும் பாடியிருக்கிறாள். பல ரூபங்களிலும் குழந்தை ஸ்வாமி அந்தக் கிழப்பாட்டிக்கு தர்சனம் தந்திருப்பார்!
வடக்கேயெல்லாம் விக்நேச்வரர் என்றாலே ஒரே சிவப்பாக ஸிந்தூரத்தைப் பூசித்தான் வைத்திருப்பார்கள்.
நம் சோழ தேசத்தில் “கணபதீச்சுரம்” என்றே பேர் பெற்றிருக்கிற கோவில் இருக்கிற ஊருக்கு செங்காடு — முன்னே ‘திரு’வும் பின்னே ‘குடி’யும் சேர்த்துக்கொண்டு திருச்செங்காட்டாங்குடி என்று பேர். ‘டா’வைக் குறிலாக்கித் திருச்செங்காட்டங்குடி என்று தமிழ் நூல்களில் இருக்கும். அது செங்காடு ஆனதற்குக் காரணம் விக்நேச்வரர் கஜமுகாஸுரனை ஸம்ஹாரம் செய்தபோது அவனுடைய ரத்தம் அந்தக் காடு முழுதும் பாய்ந்ததுதான். அப்போது பிள்ளையாரும் செக்கச்செவேலென்று ஆகிவிட்டார். இல்லை. ‘செக்கச் செவேல்’ இல்லாமல் கறுப்பான ஆனை உடம்பில் ரத்த வர்ணம் தோய்ந்து ‘கபில’ நிறமாகி விட்டாரென்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு மஹாவீரனை அடியோடு ரத்தம் போகப் பண்ணிக் கொன்றதால் தமக்கு வீரஹத்தி தோஷம் வந்ததாக விக்நேச்வரர் நினைத்தாராம். அவருக்கேது தோஷம்? நமக்கு வழிகாட்டத்தான் தெய்வங்களும் இப்படியெல்லாம் நடிப்பது! ராவணனைக் கொன்றதால் ராமர் தோஷம் வந்துவிட்டதாக நினைத்து ப்ராயச்சித்தமாக ராமலிங்கம் ஸ்தாபித்தாரல்லவா? அந்த மாதிரி பிள்ளையாரும் இந்தச் திருச்செங்காட்டாங்குடியில் லிங்கம் ஸ்தாபித்து சிவ பூஜை பண்ணி தோஷத்தைப் போக்கிக் கொண்டாராம். அதனால் ராமர் சிவ பூஜை பண்ணிய இடம் ராமேச்வரம் ஆனது மாதிரி அந்தக் கோயிலுக்கு கணபதீச்வரம் (தமிழிலக்கணப்படி ‘கணபதீச்சுரம்’) என்று பேர் ஏற்பட்டுவிட்டது.
................
[ஷோடச நாமாக்களில்] கபில நாமத்தில் இருக்கிறோம். தேன் மாதிரிச் சிவப்பாயிருப்பவர் கபிலர். அந்த நிறமுள்ள பசுவைத்தான் கபிலை என்று சிறப்பித்துச் சொல்வது. ஸாங்கிய சாஸ்த்ரத்தைக் கொடுத்தவர் ஒரு கபிலர். அவர் பஸ்பம் பண்ணிய அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களைப் புண்ய லோகம் சேர்ப்பதற்காகத்தான் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது.
கமண்டலுவைக் கவிழ்த்துவிட்டு காவேரியைப் பாய வைத்தவர் நம்முடைய [விக்நேச்வர] கபிலர்! தமிழில் சங்ககாலப் புலவர்களில் நிறையப் பாடியுள்ள ஒருவரின் பெயர் கபிலர். அவருக்கும் விக்நேச்வர ஸம்பந்தமுண்டு. பாரி வள்ளலின் ஆஸ்தானப் புலவர் அவர். பாரி இறந்துபோன பிறகு அவன் பெண்களுக்கு ‘கார்டியன்’ மாதிரி இருந்திருக்கிறார். அவர்களுக்கு நல்ல அரச குடும்பத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டு தாம் ப்ராயோபவேசம் – ‘வடக்கிருத்தல்’ என்று தமிழில் சொல்வார்கள்; ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்கிறார்களே, அது பண்ணி ஆயுஸை முடித்துக்கொள்ள வேண்டுமென்று அவர் உத்தேசம். ஆனால் அநாதைகளான அந்தப் பெண்களை யாரும் கல்யாணம் செய்துகொள்ள முன்வரவில்லை. பாரி இல்லாமல் கபிலராலும் உயிர் வாழ முடியவில்லை. அதனால் ஸத்துக்களான ப்ராம்மணர்களிடம் அந்தக் கன்யாப் பெண்களை ஒப்படைத்து விட்டு ப்ராயோபவேசம் பண்ணி ஆயுஸை முடித்துக் கொண்டு விட்டார். சங்க நூல்களிலிருந்தும் அவற்றின் உரைகளிலிருந்தும் இந்தக் கதை தெரிகிறது. கபிலர் உயிர் விடுவதற்கு முன்னால் விக்நேச்வரரைத்தான் ஸ்தோத்திரம் செய்தார். “மூத்த நாயனார் திரு இரட்டை மணிமாலை” என்று அதற்குப் பெயர். [சைவத் திருமுறைகள் பன்னிரண்டில்] பதினொன்றாம் திருமுறையில் அதைச் சேர்த்திருக்கிறது. ‘கபில தேவ நாயனார்’ செய்ததென்று அதிலிருக்கிறது. இவர் வேறே, சங்கப் புலவரனான கபிலர் வேறே என்றும் அபிப்ராயமிருக்கிறது. அதெப்படியானாலும் கபிலர் என்று பெயர் படைத்த கணபதியைக் கபிலப் பெயரே உள்ள ஒரு கவி ஸ்தோத்ரித்திருக்கிறார்.
ॐ श्री कपिलाय नमः॥
ஓம்ʼ ஶ்ரீ கபிலாய நம:॥
OṂ ŚRĪ KAPILĀYA NAMAḤ॥
No comments:
Post a Comment