Friday, 13 April 2018


॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥


இந்த ஸ்தோத்ரம் வேலூர் அருகேயுள்ள திருவிரிஞ்சிபுரத்தில் விளங்குகின்ற " ஸ்ரீ மார்க்கஸஹாய ஈச்வரர் " பற்றி இயற்றப்பட்டதாகும். இந்த மார்க்கபந்து ஸ்தோத்ரத்தை இயற்றியவர் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர். 

மார்க்கபந்து என்றால் , மார்க்கத்தில் ( வழியில் ) பந்துவாக இருப்பவர் ( உடனிருப்பவர் ) என்று பொருள். 

நாம் சாதாரணமாக ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு பயணம் செய்யும்போது செல்லும் வழிதோறும் துணையாக உடனிருந்து காப்பவர் என்றவாறு பகவானை மார்க்கபந்து என்றழைக்கிறோம். 

இதேபோல ஒருவனது பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான வாழ்க்கைப் பயணம் முழுமையும் அந்தர்யாமியாக உடனிருந்து உற்றதுணையாக இருப்பதாலும் , பகவானை மார்க்கபந்து என்று அழைக்கலாம்.

மேலும் அனாதி காலமாய் அஞ்ஞானத்தால் ஸம்ஸாரத்தில் உழன்று கொண்டுள்ள ஜீவாத்மா, மீண்டும் ஞான பிரகாசத்தால் ஸத்தியத்தை உணரும் வரையிலான காலம் முழுமைக்கும் ஸாக்ஷீபூதமாக இருந்து துணைபுரிவதால் பகவானை மார்க்கபந்து என்றழைப்பது உசிதமே. 

அப்படிப்பட்ட பகவானுடைய குணங்களை போற்றுவதாக உள்ளதால் இது ' மார்க்கபந்து ஸ்தோத்ரம் ' எனப்படுகிறது.

गुण संकीर्त्तनात्मकं स्तोत्रम्।
கு³ண ஸங்கீர்த்தனாத்மகம்ʼ ஸ்தோத்ரம்|

குணங்களைப் போற்றிப் பாடுவது ' ஸ்தோத்ரம் ' எனப்படும் .

நம் வைதீக கிரந்தங்களின்படி பரம்பொருள் ஒன்றே. நாமம் ரூபம் முதலிய குணங்களேதுமற்றது. அது பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. இது அதன் நாமம் அல்ல. நாம் புரிந்து கொள்ள வேண்டி , அதன் ' பெரியது ' ( बृहत्तमत्त्वात् ) எனும் லக்ஷணத்தைக் கொண்டு ஏற்பட்டது. அது எல்லையற்றது. காலம், தேசம் முதலியவற்றைத் தாண்டியது.

எல்லையற்ற தை, நாமம் ரூபம் அற்றதை எப்படி தியானிக்க, வணங்க , பக்தி செய்ய முடியும் ? இதற்கும் கிரந்தங்களே வழி செய்கின்றன. பரப்ரஹ்மத்தை பல்வேறு நாம ரூபங்களுடையதாகவும் கூறுகிறது. எனவே அந்த ரூபங்களுக்கு பூஜை, பிரார்த்தனை, ஸ்துதி, தீர்த்த யாத்திரை போன்றவைகளைச் செய்ய முடிகிறது . இது சகுண உபாஸனை எனப்படுகிறது. இவைகளை பகவான் கருணை உள்ளத்துடன் ஏற்றுக்கொள்கிறார். பகவானை அடைய இது ஒரு பிடிப்பைத் தருகிறது . 

பின் இந்த சகுண உபாஸனையே நிர்குண உபாஸனைஆக மாறும்படி பகவான் அருள்கிறார். அதன் மூலம் பகவானை அடையமுடிகிறது. இதையே பகவான் கீதையில் கூறுகிறார்.

यो यो यां यां तनुं भक्तः श्रद्धयाऽर्चितुमिच्छति।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्॥२१॥ 
स तया श्रद्धया युक्तस्तस्यऽऽराधनमीहते।
लभते च ततः कामान् मयैव विहितान् हि तान्॥२२॥ 

yō yō yāṃ yāṃ tanuṃ bhaktaḥ śraddhayā'rcitumicchati|
tasya tasyācalāṃ śraddhāṃ tāmēva vidadhāmyaham||21|| 
sa tayā śraddhayā yuktastasya''rādhanamīhatē|
labhatē ca tataḥ kāmān mayaiva vihitān hi tān||22|| 

யோ யோ யாம்ʼ யாம்ʼ தனும்ʼ ப⁴க்த​: ஶ்ரத்³த⁴யா(அ)ர்சிதுமிச்ச²தி| 
தஸ்ய தஸ்யாசலாம்ʼ ஶ்ரத்³தா⁴ம்ʼ தாமேவ வித³தா⁴ம்யஹம்|| 21|| 
 ஸ தயா ஶ்ரத்³த⁴யா யுக்தஸ்தஸ்ய(அ)(அ)ராத⁴னமீஹதே| 
லப⁴தே ச தத​: காமான் மயைவ விஹிதான் ஹி தான்|| 22||

Whatever celestial form a devotee seeks to worship with faith, I steady the faith of such a devotee in that form. 

Endowed with faith, the devotee worships a particular celestial god and obtains the objects of desire. But in reality I alone arrange these benefits. - Bhagavad Gita 7.21,22.

எந்தெந்த ஸகாம பக்தன் (பயன்களை அடைய விருப்பம் கொண்ட பக்தன்) எந்தெந்த தேவதையின் ஸ்வரூபத்தைச் சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அந்தந்த பக்தனுக்குச் சிரத்தையை, நான் அந்தந்த தேவதையிடமே அசையாததாகச் செய்கிறேன்.

அந்த மனிதன் அந்தச் சிரத்தையுடன் கூடியவனாக அந்த தேவதையினுடைய பூஜையைச் செய்கிறான். மேலும், அந்த தேவதையிடமிருந்து என்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, விரும்பிய அந்த போகங்களைச் சந்தேகமின்றி (அவன்) அடைகிறான்.

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते॥१०॥

tēṣāṃ satatayuktānāṃ bhajatāṃ prītipūrvakam|
dadāmi buddhiyōgaṃ taṃ yēna māmupayānti tē||10||

தேஷாம் ஸததயுக்தானாம் ப4ஜதாம் ப்ரீதிபூர்வகம்|
த3தா3மி பு3த்3தி4யோக3ம் தம் யேன மாமுபயாந்தி தே||10||

To those whose minds are always united with me in loving devotion, I give the divine knowledge by which they can attain me. - Bhagavad Gita 10.10.

தியானம் முதலியவற்றால் எப்பொழுதும் என்னிடமே ஈடுபடுகின்றவர்களும் பேரன்போடு வழிபடுகின்றவர்களுமான அந்த பக்தர்களுக்கு, எந்த புத்தியோகத்தின் மூலம் அவர்கள் என்னை அடைவார்களோ, அந்தத் தத்துவஞான வடிவாகிய புத்தியோகத்தை அளிக்கிறேன்.

மார்க்கஸஹாயேச்வரர் - மார்க்கபந்து :-

மைசூரிலிருந்து, மிளகு மூட்டைகளை காஞ்சிபுரத்துக்கு கொண்டு சென்ற தனபாலன் என்ற வணிகன், திருடர் தொல்லையிலிருந்து தன்னை காப்பாற்றினால், இந்த ஈசனுக்கு தன் மிளகு மூட்டையில் ஒரு பகுதியை அளிப்பதாக வேண்டியதாகவும், ஈசன் மாறு வேடத்தில் திருடர்களை விரட்டி வழித் துணையாக வந்ததால், "மார்க்கபந்து வழித்துணை நாதர்' என பெயர் பெற்றதாகவும், தன் வேண்டுதல் மறந்த தனபாலன், விற்ற மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாற, தனபாலன் மனமுருக வேண்டியதால், மீண்டும் மிளகாக மாறியதாகவும் வரலாறு கூறுகிறது. 
( வழித்துணை நாதர் - மார்க்கஸஹாயேச்வரர் - மார்க்கபந்து )

இன்றும் ஓரிடத்திற்குக் கிளம்பும் போதும், செல்லும் வழிகளில் ஏற்படும் இன்னல்கள் தீரவும் இந்த மார்க்கபந்து ஸ்தோத்ரத்தைப் பாடும் வழக்கம் உள்ளது.

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (1520 – 1593) :

பதினாறாம் நூற்றாண்டில் சைவசமயம் நலிந்து போயிருந்த நேரத்தில், ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் 
தோன்றி தமது அற்புதமான வாதத்திறமையாலும், அதிசயங்களாலும் அதை மீட்டெடுத்தவர். தர்க்கம், மீமாம்சம், ஆகமம் போன்றவற்றில் சிறந்த பாண்டித்யம் பெற்றவர். 

தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது. 

தமிழ்நாட்டின் வேலூருக்கு அருகே திருவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520 - ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் ரங்கராஜ தீட்சிதர். அப்பய்ய தீட்சிதரின் இயற்பெயர் விநாயக சுப்பிரமணியன். சிறுவயதில் அவரை 'அப்பா, ஐயா' என்று கொஞ்சி அழைத்த பெயரே அப்பய்யர் என்று நிலைத்து விட்டது. வேலூர் அரசர் சின்ன பொம்ம நாயக்கரிடம் தலைமை பண்டிதராக இருந்த அவரது தந்தை மறைந்த பிறகு, அவரே அந்தப் பொறுப்பை ஏற்றார். 
அப்பய்ய தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது. அவர் எழுதிய நூல்களின் தரத்தையும் அவை உணர்த்தும் பொருளின் ஆழத்தையும் தான் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர எண்ணிக்கையை அல்ல.

அப்பய்ய தீட்சிதரிடம் இருந்த மற்றொரு அருங்குணம் யாதெனில், சிவனை கண்கண்ட கடவுளாக பாடியவர் என்றாலும், விஷ்ணுவையும் துவேஷம் காட்டாது தொழுது வந்துள்ளார். இத்துணைக்கும் தாத்தாச்சாரியர் உள்ளிட்ட இவரின் சமகாலத்தவர்கள் இவருக்கு பலவிதங்களில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஆனாலும் இவர் நாராயணனை நிந்தித்ததில்லை. திருமலை, திருவரங்கம், காஞ்சி உள்ளிட்ட பல ஷேத்ரங்களில் எழுந்தருளியிருக்கும் திருமாலை தரிசித்து பக்தி செய்திருக்கிறார். திருவரங்கம் வந்தபோது இவரின் பக்தியை மெச்சிய அரங்கன் சிவபெருமானாக இவருக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

ஒருமுறை ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்களின் பெருமை இங்ஙனம் மேலும் மேலும் விருத்தி அடைவதைக் கண்டு பொறுக்காதவராகி, தாதாசாரியார் மிகவும் பண்டிதராயிருந்தும் பொறாமையினால் மதி மயக்கங்கொண்டு ஸ்ரீதீக்ஷிதேந்திரரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று எண்ணினார்.
அரசனது முத்திரை மோதிரத்தை எப்படியோ திருடி அரசசாஸனம் போன்ற உத்திரவைத் தயாரித்து தீக்ஷிதர் அன்று இரவு இரண்டாம் யாமத்தில் அங்கு வரும் போது அவரைக் கொன்று விட வேண்டும் என்று அரசனின் முத்திரையைச் சேனாதிபதியிடம் காண்பித்தார். இந்தக் காரியத்தைச் செய்ய சேனாபதி மனம் புழுங்கினாலும், அரசனின் முத்திரையைக் காண்பித்து தாதாசாரியார் மிகவும் கடுமையாகத் தூண்டியதால் ஒருவாறு துணிந்தான். அரண்மனை வாயிலுக்கும் தீக்ஷிதர் இல்லத்திற்கும் இடையே உருவின வாட்களுடன் சேனா வீரர்களை நிற்க வைத்து தீக்ஷிதர் வருகையை எதிர்நோக்கியிருந்தான். இரவு நேரத்தில் இம்மாதிரி ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு தாதாசாரியார் ஒரு கட்டியங்காரனை அனுப்பி, அரசன் உங்களை அழைக்கின்றார் என்று இரண்டாவது யாமத்தில் தீக்ஷிதரிடம் கூறினான். பரமசிவாவதாரமான நமது தீக்ஷிதமணியானவர் அரசனுக்கு ஏதோ இந்த நள்ளிரவில் ஆபத்து வந்து விட்டது என்று எண்ணி மார்க்கஸஹாய ஈச்வரரை வழக்கம் போல் தியானம் செய்து கொண்டு அரண்மனைக்குக் கிளம்பினார்.

“ஒரு மலையை ஒத்ததும், கண கண என்று சப்திக்கும் மணியை கழுத்தில் கொண்டதுமான நந்தியின் மீது ஆரோஹணித்து ஸகல லோகபாலகர்களாலும் துதிக்கப்படுபவரும், ஆனந்த ஸாகரமும், பர்வதராஜன் புத்திரியான பார்வதி தேவியைப் பக்கத்திலே கொண்டுள்ள ஆனந்தமாகிற அம்ருதக் கடலும், ஸகல தேவர்களுக்கும் அரசருமான பரமேச்வரன் என் முன்னால் தோன்றட்டும். நம் குல தெய்வமான மார்க்கஸஹாயேச்வரரே நமது தாபத்தைப் பரிகரிக்கின்றவர். எவ்விடத்திலும் சம்புவின் பெயர் ஒன்றே எனக்குத்துணை” என்று இவ்வாறெல்லாம் தியானித்துக் கொண்டு, மார்க்கபந்து ஸ்தோத்ரத்தை சொல்லிக்கொண்டு, மார்க்கஸஹாயேச்வரர் தமக்குப் பாதுகாவாலாகத் துணைவருகின்றார் என்ற உறுதியுடன் சிஷ்யர்களோ வாஹனமோ ஒன்றுமில்லாமல் அரசன் அரண்மனையை நோக்கி பரமசிவ பக்தமணியாகிற ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்கள் நடந்து சென்றார். 

வழியிலே உருவின கத்திகளுடன் நின்று கொண்டிருந்த வீரர்களைப் பார்த்துக் கொண்டே சென்றார். அங்ஙனம் தனியாக வரும் பொழுது தீக்ஷிதேந்திரர் அறியாது அவரைச் சுற்றி மஹா வீரர்கள் வருவதைக்கண்ட அரசனின் சேனா வீரர்களும் சேனாபதியும் நடுங்கினவண்ணம் தூண் போல் நின்று செயலற்றவர்களாய் நின்று விட்டார்கள். தீக்ஷிதேந்திரர் அரசனது அந்தப்புரத்தை வந்தடைந்தார்கள். 

தீக்ஷிதருடைய வருகையை அந்த அரசன் எதிர்பார்க்கவேயில்லை. எனவே, தீக்ஷிதர் தனியாக வந்துள்ளதை அறிந்து, அவரது கால்களில் விழுந்து வணங்கி, “இது என்னே பாவம்! யான் என்ன குற்றம் புரிந்தேன். இந்த நேரத்தில் தாங்கள் இங்கு எழுந்தருளக் காரணம் யாதோ” என வேண்டி நின்றான். இவ்விதம் அரசன் கேட்டதும் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் நடந்தது அனைத்தும் தாதாசாரியாரின் சூழ்ச்சியாலேயே என்று உணர்ந்து கொண்டார். அரசனை நோக்கி, அரசே தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதவர். நடந்ததனைத்தும் ஒரு துஷ்டனால் செய்யப்பட்ட காரியம், காலகாலனான பரமேச்வரன் உமக்கு ஒரு குறையும் இன்றிக் காப்பாற்றுவார். எல்லா விஷயமும் நாளை காலை உமக்குத் தெளிவாகத் தெரியும் என்று கூறி, அவனை ஆசீர்வதித்து விட்டு தமது இல்லம் வந்து சேர்ந்தார்.

மறுநாள் காலையில் அரசன் கோட்டை வாசலில் வந்து உருவின கத்திகளுடன் அசையாது நிறுகும் தனது சைனியத்தையும், சேனாபதியையும் பார்த்து இது என்ன விபரீதம்? என்று நினைத்தவனாய், பயத்துடன் மெள்ள மெள்ள காலால் நடந்துகொண்டே தீக்ஷிதரின் இல்லத்தை வந்தடைந்தான். கருணாமூர்த்தியான தீக்ஷிதர் அரசனை வரவேற்று அவனின் மனோநிலையைப் புரிந்துகொண்டு, அரசனுடன் அந்தப்புரம் வந்து சேர்ந்தார். அங்கு சேனையையும், சேனாபதியையும் பார்த்து சிவபெருமானைத் தியானித்துக் கொண்டே கருணை கடாக்ஷத்தைச் செலுத்தினார். 

அதுவரை அசைவற்று தூண்போல நின்ற சேனாபதியும், மற்றைய வீரர்களும் தீக்ஷிதரை நோக்கி, “கருணைக்கடலான ஐயனே! பரமாத்மாவே! அரசன் ஆணை என்று கபடமாகக்கூறி எங்களை இந்த பெரும் அபராதத்துக்கு தாதாசாரியார் ஆளாக்கிவிட்டார். நாங்கள் நிரபராதிகள்” என்று கூறி தாதாசாரியாரின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினான். அரசன் கடுங்கோபம் கொண்டு தாதாசாரியரைத் தண்டிக்க முற்பட்டான். தீக்ஷிதேந்திரர் அவனைத் தடுத்து, விஷவ்ருக்ஷமானாலும் நாம் வளர்த்தால் அதைவெட்டுவது முறையல்ல என்று நீதிசாஸ்திரம் கூறுகிறது. சிசுபாலனிடம் கிருஷ்ணன் நூறு குற்றங்கள் பொறுத்தது போல நாமும் இவரிடம் பொறுப்போம். காலம்வரும் வரை பொறுப்பதே முறை என்று அரசனைச் சமாதானப்படுத்தினார். மஹானுடைய அறிவுரையை சிரமேற்கொண்டு அரசன் மிக்க சந்தோஷத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் ஏற்றி அவரைப் பட்டணப்பிரவேசம் செய்வித்து பெருமளவில் கெளரவித்தான். 

வாழ்நாள் எல்லாம் சிவப்பணி செய்து வாழ்ந்த இந்த மகான், தில்லை சிவபெருமானோடு கலந்து மோட்சம் அடைந்தார். 

இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர். சைவசமயம் வளர்ச்சிக்கும் மக்களின் ஆன்மிக வழிப்பாட்டிற்கும் பாடசாலை அமைத்து ஆன்மிக நூல்களையும் வழங்கி சேவை செய்த அப்பய்ய தீட்சிதர் இந்து மதத்தின் மாணிக்கக் கல் என்றே போற்றப்படுகிறார்.

1 comment: